இந்திய அரசியலில் Most eligible bachelorஆக இருப்பவர் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி. இவரின் காதல் கதை குறித்த வதந்திகள் அவ்வப்போது சமூக வலைதளங்களில் உலா வரும்.


மனம் திறந்த ராகுல்காந்தி:


இதற்கிடையே, காங்கிரஸ் கட்சியை மக்களிடம் மீண்டும் கொண்டு சேர்க்கும் வகையில் இந்திய ஒற்றுமை நடைபயணத்தை மேற்கொண்டு வரும் ராகுல் காந்தி, பல யூடியூப் சேனல்களுக்கு நேர்காணல் அளித்துள்ளார். அதில், திருமணம் குறித்து பல முறை அவரிடம் கேள்வி எழுப்பப்பட்டது.


அதற்கு, வெளிப்படையான பதில்களை அளித்த அனைவரையும் வியக்க வைத்தார் ராகுல் காந்தி. இந்நிலையில், திருமணம் குறித்து மனம் திறந்து பேசியுள்ளார் ராகுல் காந்தி. 


எப்போது திருமணம்?


Curly Tales யூடியூப் சேனலுக்கு அவர் அளித்த பேட்டியில், தன்னுடைய வாழ்க்கை இணை எப்படி எல்லாம் இருக்க வேண்டும் என அவர் கூறியுள்ளார்.


விரைவில் திருமணம் செய்ய திட்டம் ஏதேனும் இருக்கிறதா? அல்லது திருமணம் செய்யும் திட்டம் இல்லையா? என நேர்காணல் எடுப்பவர் கேள்வி எழுப்பினார்.


அதற்கு பதில் அளித்த ராகுல் காந்தி, "சரியான பெண் கிடைத்தால் திருமணம் செய்து கொள்வேன்" என்றார். பெண் இப்படி எல்லாம் இருக்க வேண்டும் என எதிர்பார்ப்பு உள்ளதா? என கேட்கப்பட்ட கேள்விக்கு பதில் அளித்த ராகுல் காந்தி, "இல்லை. அன்புள்ளவராக இருக்க வேண்டும். அதே சமயத்தில், புத்திசாலியாக இருக்க வேண்டும்" என்றார்.


சோனியா, இந்திரா கலந்த கலவை:


வெளியே இருக்கும் பெண்களுக்கான மெசேஜா இது என நேர்காணல் எடுப்பவர் கலாய்த்ததற்கு, "என்னை சிக்கலில் மாட்டி விட்டு விடுவீர்கள் போல" என சிரித்து கொண்டே ராகுல் காந்தி பதில் அளித்தார்.


கடந்த டிசம்பர் மாதம், யூடியூப் சேனல் ஒன்றுக்கு ராகுல் காந்தி அளித்த பேட்டியில், "எனக்கு இணையராக வருபவர் எனது தாயார் சோனியா காந்தி, எனது பாட்டியும் முன்னாள் பிரதமருமான இந்திரா காந்தி ஆகியோரின் பண்புகள் இருக்க வேண்டும்" என்றார்.


இந்தியா ஒற்றுமை பயணத்தின்போது, பலத்தரப்பட்ட மக்களிடம் உரையாடி அவர்களின் குறைகளை கேட்டறிந்து வருகிறார் ராகுல் காந்தி.


 






தமிழ்நாட்டில் தொடங்கப்பட்ட நடைபயணம் கேரளா, கர்நாடகம், ஆந்திரா, தெலங்கானா, மகாராஷ்டிரா, மத்திய பிரதேசம், ராஜஸ்தான், உத்தரப் பிரதேசம், ஹரியானா, டெல்லி, ஹரியானா, பஞ்சாப் ஆகிய மாநிலங்களை தொடர்ந்து காஷ்மீரை சென்றடைந்து உள்ளது.