கட்சியை பலப்படுத்தும் வகையில் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி தொடர் முயற்சிகளை செய்து வருகிறார். அதன் ஒரு பகுதியாக, 146 நாள்களுக்கு நாட்டின் பல்வேறு பகுதிகளுக்கு சென்று இந்திய ஒற்றுமை நடைபயணத்தை மேற்கொண்டார். நடைபயணத்தில் பொது மக்களை நேரில் சந்தித்து அவர்களின் குறைகளை கேட்டறிந்தார்.


சூடுபிடித்த  தேர்தல் களம்:


இதை தொடர்ந்து, அடுத்த ஆண்டு நடைபெற உள்ள நாடாளுமன்ற தேர்தலுக்கு முன்னோட்டமாக, 5 மாநிலங்களுக்கான சட்டமன்ற தேர்தல் கருதப்படுகிறது. அதிலும் குறிப்பாக தென்மாநிலத்தில் இடம்பெற்றுள்ள தெலங்கானா மாநில சட்டமன்ற தேர்தல் அதிக கவனம் ஈர்த்துள்ளது. நவம்பர் 30ம் தேதி அங்கு வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. ஆளுங்கட்சியான பிஆர்எஸ் மற்றும் பிரதான எதிர்க்கட்சியான காங்கிரஸ் இடையே நேரடி போட்டி நிலவுகிறது. 


கடந்த 2014ஆம் ஆண்டு, புது மாநிலமாக உருவான தெலங்கானாவில் கடந்த 9 ஆண்டுகளாக பாரத் ராஷ்டிர சமிதி கட்சியின் ஆட்சி நடைபெற்று வருகிறது.  தென்னிந்தியாவில் கவனம் செலுத்தி வரும் பாஜக, தெலங்கானாவில் கணிசமான அளவில் வெற்றியை ஈட்ட முயற்சித்து வருகிறது. அதேபோல, இழந்த செல்வாக்கை மீட்டெடுத்து, ஆட்சியை கைப்பற்ற காங்கிரஸ் கட்சியும் முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது.


தெலங்கானாவில் ராகுல் காந்தி:


இந்நிலையில், தெலங்கானா மாநில சட்டமன்ற தேர்தல் பிரச்சாரத்திற்கு காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி மூன்று  நாள் சுற்றுப் பயணமாக ஹைதராபாத் வந்தார். இதில், இரண்டாம் நாளான நேற்று அவர், விஜயபேரியில் பேருந்து யாத்திரை மேற்கொண்டு ஆங்காங்கே பேருந்தில் இருந்தபடியே பொதுமக்கள் முன்னிலையில் காங்கிரஸ் கட்சி வேட்பாளர்களை ஆதரித்து பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது, யாத்திரையின் நடுவில் விஜயபேரி பேருந்து நிறுத்தத்தில் பேருந்தை நிறுத்தினார். அங்கு இருசக்கர வாகனத்தில் வந்தவர்களை அன்புடன் வரவேற்று, சிறுவர்களுக்கு சாக்லேட் உள்ளிட்டவற்றை வழங்கினார். 






பின்னர், அங்கிருந்த உணவு தள்ளு வண்டி கடையை பார்வையிட்டு அங்கிருப்பவர்களுடன் கலந்துரையாடினார். இதனை அடுத்து, அந்த கடையில் தோசை சுட்டு, அங்கிருந்து மக்களுக்கு பரிமாறி தோசை சாப்பிட்டுள்ளார். இந்த காட்சிகள் அனைத்தும் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அடுத்தாண்டு மக்களவை தேர்தல் நடைபெற உள்ள நிலையில், ராகுல் காந்தியின் தெலங்கானா பயணம் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.