Gaganyaan Mission: மனிதர்களை விண்வெளிக்கு அனுப்பும் ககன்யான் திட்டத்தின் முதல்கட்ட சோதனை நாளை நடைபெறுகிறது.
சாதனையை நோக்கி இஸ்ரோ:
நிலவின் தென்துருவத்தை ஆராயும் நோக்கில் இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையம் (இஸ்ரோ), கடந்த ஜூலை மாதம் 14ம் தேதி சந்திரயான் 3 விண்கலத்தை விண்ணில் செலுத்தியுள்ளது. 40 நாட்கள் பயணத்திற்கு பிறகு ஜூலை 23ஆம் தேதி மாலை சந்திரயான் 3 விண்கலத்தின் விக்ரம் லேண்டர் நிலவின் மேற்பரப்பில் வெற்றிகரமாக தரையிறங்கியது. இதன் மூலம், நிலவின் மேற்பரப்பில் லேண்டரை வெற்றிகரமாக தரையிறக்கிய நான்காவது நாடு மற்றும் நிலவின் தென் துருவத்தில் லேண்டரை தரையிறக்கிய முதல் நாடு என்ற பெருமையை இந்தியா பெற்றுள்ளது. விண்வெளி ஆராய்ச்சியை அடுத்த கட்டத்திற்கு எடுத்து சென்று, மகத்தான சாதனை படைத்துள்ள இந்தியா, அடுத்த அதிரடிக்கு தயாராகி வருகிறது. இந்தியாவின் 40 ஆண்டுகால ஏக்கத்திற்கு இஸ்ரோ விரைவில் முற்றுப்புள்ளி வைக்க உள்ளது.
ககன்யான் திட்டம்:
அதாவது, மனிதர்களை விண்வெளிக்கு அனுப்பும் ககன்யான் திட்டத்தின் முதல்கட்ட ஆளில்லா சோதனை நாளை நடைபெறுகிறது. ரூ. 10,000 கோடி மதிப்பிலான இந்த திட்டம் மூலம், 3 பேர் கொண்ட இந்தியக் குழுவை ஐந்து முதல் ஏழு நாட்களுக்கு விண்வெளிக்கு அனுப்பி அவர்களைப் பாதுகாப்பாக பூமிக்குத் திருப்பி கொண்டு வருவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. முழுக்க முழுக்க இந்தியத் தயாரிப்புகளால் உருவாகும் ககன்யானின் பகுதிகளை இந்தியாவின் ஹிந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் லிமிடெட் தயாரித்து வருகிறது. கன்யான் திட்டத்தின் மூலம் 400 கி.மீ. சுற்றுப்பாதைக்கு விண்கலத்தில் மனிதர்களை அனுப்ப இஸ்ரோ திட்டமிட்டு வருகிறது.
நாளை சோதனை:
இந்த திட்டத்தில் மனிதர்களை விண்வெளிக்கு அனுப்பும் முன்பு சோதனை நடைபெறும். இந்த முதல் கட்ட சோதனை நாளை காலை 8 மணிக்கு நடைபெறுகிறது. ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி ஆய்வு மையத்தில் டிவி-டி1 ராக்கெட் மூலம் குரூ மாட்யூலுடன் விண்ணில் செலுத்தி சோதனை செய்யப்பட உள்ளது. அந்த சோதனைக்கான 24 மணி நேர கவுண்ட் டவுண் தற்போது தொடங்கப்பட்டுள்ளது.
இந்த சோதனைக்கு டிவி-டி1 என்ற ஒன்றை பூஸ்டர் திறன் கொண்ட ராக்கெட் பயன்படுத்தப்படுகிறது. இந்த சோதனையில் மனிதர்களை விண்வெளிக்கு கொண்டு செல்லும் மாதிரி கலனும் (Crew Module) உருவாக்கப்பட்டுள்ளது. இது விண்வெளி வீரர்கள் ஆபத்தான நேரங்களில் தப்பிக்கு வசதியுடன் கூடிய அமரும் பகுதி இருக்கிறது. இந்த கலன் ராக்கெட்டின் மேல் பகுதியில் பொருத்தப்பட்டிருக்கும்.
இந்த ஆளிலில்லா ராக்கெட் பூமியில் இருந்து 17 கி.மீ தொலைவுக்கு அனுப்பி, பத்திரமாக மீண்டும் பூமிக்கே கொண்டு வரப்படும். சுமார் 17 கி.மீ உயரத்தில் சென்ற உடன் வீரர்கள் அமரும் பகுதி தனியாக பிரிந்து விடுகிறது. இதனை பாராசூட்டுகள் சுமந்து வந்து, ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து 10 கி.மீ தொலைவில் வங்கக் கடலில் பத்திரமாக தரை இறக்கும். இந்த முதல் கட்ட சோதனையில் வீரர்கள் அமரும் பகுதி பத்திரமாக திட்டமிட்ட இலக்கு வரை சென்று மீண்டும் சேதம் அடையாமல் கடலில் பத்திரமாக தரை இறங்குகிறதா என்பதுதான் சோதனை. கடலில் இறங்கிய பகுதியை இந்திய கடற்படை குழுவினர் மீட்டு இஸ்ரோவிடம் ஒப்படைப்பார்கள்.