2022ம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட் நேற்று தாக்கல் செய்யப்பட்டது. நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பட்ஜெட்டை தாக்கல் செய்தார். இந்த நிலையில் இன்று பட்ஜெட் மீதான விவாதத்தில் பேசிய காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் ராகுல் காந்தி, குடியரசுத் தலைவர் உரையில் நமது நாடு இப்போது எதிர்கொள்ளும் முக்கிய சவால்களைப் பற்றி பேசவில்லை என்று ராகுல் காந்தி குற்றம் சாட்டினார். 


மக்களவையில் தொடர்ந்து பேசிய ராகுல்காந்தி, “ 50 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு மிகப் பெரிய வேலையில்லாத் திண்டாட்டம் நாட்டில் நிலவுகிறது. நீட் தேர்வை விலக்க தமிழ்நாடு தொடர்ந்து கோரிக்கை வைத்து வருகிறது. ஆனால் மத்திய அரசு அதனை நிராகரித்துக்கொண்டே வருகிறது. ஆனால் தமிழ்நாடு மனம் தளராமல் அந்த கோரிக்கையை வைத்துக்கொண்டே இருக்கிறது. தனது வாழ்நாளில் ஒருபோதும் தமிழக மக்களை பாஜக ஆள முடியாது.


நாட்டின் அடிதளத்தோடு ஆர்.எஸ்.எஸ் விளையாடிக்கொண்டிருக்கிறது. தமிழ்நாட்டு மக்களுக்கு மொழி, கலாசாரம், வரலாறு குறித்த புரிதல் இருக்கிறது. அவர்களிடம் இருந்து நான் கற்றுக்கொள்கிறேன்.” என்று பேசினார். இவரது இந்தப் பேச்சு அதிர்வலையை ஏற்படுத்தியிருக்கும் நிலையில், பேச்சை முடித்துக்கொண்டு ராகுல் காந்தி வெளியே வந்தார்.


 


 



அப்போது, பத்திரிகையாளர் ஒருவர் நீங்கள் தமிழ்நாட்டை பற்றி அதிகம் பேசுகிறீர்களே என்று கேட்டார். அதற்கு பதிலளித்த அவர்,  “ நான் தமிழன் அல்லவா” என்று பதிலளித்தார். இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. 


ராகுல் காந்தி பேசியவை: 



தொடர்ந்து மக்களவையில் பேசிய ராகுல் காந்தி,   “இஸ்ரேலுக்கு சென்ற பிரதமர் மோடி பெகாஸஸிற்கு அங்கீகாரம் அளிக்கும்போது, அவர் தமிழ்நாடு மக்களை தாக்குகிறார், அஸாம் மக்களை தாக்குகிறார். மிகவும் ஆபத்தான ஒரு விஷயத்தில் விளையாடுகிறீர்கள். இந்த நாட்டிற்காக நான் ரத்தம் சிந்தவில்லை என்றாலும், எனது குடும்பம் ரத்தம் சிந்தி இருக்கிறது. என் அப்பா தூள்தூளாக வெடித்து சிதறினார்” என பேசினார்.


தொடர்ந்து பேசிய அவர், “மணிப்பூரில் இருந்து வந்த அரசியல் கட்சி தலைவர் ஒருவர் என்னிடம் பேசி கொண்டிருந்தார். அவர் அமித் ஷாவை சந்திக்க அவரது வீட்டிற்கு சென்றபோது, காலணிகளை வெளியே கழற்றி வைக்க சொல்லி இருக்கிறார்கள். ஆனால், வீட்டினுள் அமித் ஷா காலணிகளுடன் இருந்திருக்கிறார். இந்திய மக்களை இப்படி நடத்தக்கூடாது” என தெரிவித்தார்.


அடுத்து, “இந்திய குடியரசு தின நிகழ்ச்சிக்கு சிறப்பு விருந்தினர்கள் யாரும் வருவதில்லை என உங்களையே நீங்கள் கேள்வி கேளுங்கள். ஏனென்றால், இந்தியா தனிமையாக இருக்கிறது. நாம் மிகவும் வலுவிழந்து இருக்கிறோம். நாம் தாக்கப்படும் நிலையில் இருக்கிறோம். என்ன செய்ய வேண்டும் என்பதில் சீனா தெளிவாக இருக்கிறது. சீனாவையும், பாகிஸ்தானையும் சேரவிடாது இருப்பதே இந்தியாவின் திட்டமாக இருந்திருக்க வேண்டும். ஆனால், இரு நாடுகளையும் ஒன்று சேர்த்திருக்கிறது. இது இந்தியா எதிர்கொள்ள இருக்கும் மிகப் பெரிய அபாயம். ஜம்மு காஷ்மீர் விவகாரத்தில் பெரிய தவறு செய்துவிட்டோம்” என பேசினார்.