பெங்களூருவில் 23 வயது இளைஞர் ஓட்டிய சொகுசு கார் இடித்ததில் உயிரிழந்த தெரு நாய் லாராவின் இறுதி அஞ்சலியில் நூற்றுக்கணக்கான விலங்கு பிரியர்கள் கலந்துகொண்டனர். திரைப்பட நடிகையும், அரசியல்வாதியுமான திவ்யா ஸ்பந்தரா இந்த ஊர்வலத்தில் கலந்துகொண்டார். பெங்களூருவின் சுமனஹள்ளி விலங்குகள் சுடுகாட்டில் தெரு நாயான லாராவுக்குக் கடந்த பிப்ரவரி 1 அன்று இறுதி அஞ்சலி செலுத்தப்பட்டது. 


லாராவுக்கு உணவு அளித்து, பார்த்துக் கொண்ட ஜெயா நகர் பகுதியைச் சேர்ந்த குடியிருப்புவாசிகளும் இந்த இறுதி அஞ்சலியின் கலந்துகொண்டனர். மிருக வதைக்கு எதிரான பதாகைகளைத் தாங்கியபடி, பள்ளிக் குழந்தைகளும் இந்தக் கூட்டத்தில் கலந்துகொண்டதோடு, இறந்த லாராவுக்கு மலர்களையும் ஏந்தி வந்தனர்.


இறுதி அஞ்சலிக்குப் பிறகு பேட்டியளித்த திவ்யா ஸ்பந்தனா, `விபத்துகள் நடப்பது இயல்பு. மனிதர்கள் தவறு செய்வதும் இயல்பு. ஆனால் இந்த விவகாரத்தில் நாய் மீது வேண்டுமென்றே உள்நோக்கத்தோடு கொடூரம் நிகழ்த்தப்பட்டுள்ளது. இதனை எங்களால் ஏற்றுக் கொள்ள முடியாது. விலங்குகள் குறித்த சட்டங்கள் நம் நாட்டில் கடுமையாக இல்லை. 50 ரூபாய் அபராதம் கட்டினால், குற்றம் புரிந்தவர் வெளியேறிவிட முடியும். கருணை என்பது மனிதர்களுக்கு மட்டுமல்லாமல், விலங்குகள் மீதும் தேவை’ எனக் கூறியதோடு, மிருக வதைக்கு எதிராக சட்டங்களை அரசு கடுமையாக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளார். 



லாரா


 


இந்த நிகழ்வை முன்பே கடுமையாகக் கண்டித்த திவ்யா ஸ்பந்தனா, தனது சமூக வலைத்தளப் பக்கங்களில் லாராவின் இறுதி அஞ்சலியில் விலங்கு நல ஆர்வலர்கள் கலந்துகொள்வதற்காக அழைப்பு விடுத்திருந்தார். இறுதி அஞ்சலிக்குப் பிறகு, அங்கு வந்திருந்த அனைவருக்கு நன்றி தெரிவித்தும் ட்விட்டரில் பதிவிட்டிருந்தார் திவ்யா ஸ்பந்தனா.






சாலையோரத்தில் தூங்கிக் கொண்டிருந்த லாரா மீது வேண்டுமென்றே கார் ஓட்டியதற்காக 23 வயது இளைஞர் மீது கர்நாடக காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளார். குற்றம் சாட்டப்பட்டவரின் பெயர் ஆதி எனவும், அப்பகுதியைச் சேர்ந்த தொழிலதிபரும், அரசியல் பிரமுகருமான அவரது தந்தையின் செல்வாக்கு காரணமாகவே, அவர் கைது செய்யப்பட்டவுடன் அவருக்குப் பிணை வழங்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. 



கார் ஓட்டிய ஆதி மீது பெங்களூருவின் சித்தாபுரா காவல் நிலையத்தில் ஜெயா நகரைச் சேர்ந்த பத்ரி பிரசாத் என்பவர் புகார் அளித்துள்ளார். தெரு நாயைக் கொல்ல வேண்டும் என்ற நோக்கத்தோடு, அதன் மீது கார் ஏற்றப்பட்டிருப்பதாகப் புகாரில் கூறப்பட்டுள்ளது.  இந்த நிகழ்வின் சிசிடிவி வீடியோ வைரலாகியதோடு, பரவலாக கண்டனங்கள் எழுந்தது குறிப்பிடத்தக்கது.