பீகார் தலைநகர் பாட்னாவில் பாஜகவிற்கு எதிராக இன்று எதிர்கட்சி தலைவர்கள் ஒன்றிணைந்த கூட்டம் நடைபெறுகிறது. இதில் பங்கேற்பதற்காக தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் நேற்று மாலை சென்னையில் இருந்து பீகார் புறப்பட்டு சென்றார். பாட்னாவில் நடைபெறவுள்ள மதச்சார்பற்ற முற்போக்கு இயக்கங்களின் ஆலோசனைக் கூட்டத்தில், காலமெல்லாம் மதநல்லிணக்கக் கொள்கையை வலியுறுத்திய நம் உயிர்நிகர் தலைவர் கலைஞர் அவர்களின் பிரதிநிதியாக நான் பங்கேற்கிறேன் என்று முதல்வர் ஸ்டாலின் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.






தமிழ்நாடு முதலமைச்சர் மு.க ஸ்டாலின் பீகார் சென்ற பின் தனது டிவிட்டரில், “நான் பாட்னா வந்தடைந்தேன், பீகார் முதலமைச்சர் நிதிஷ்குமார், பீகார் துணை முதலமைச்சர் தேஜஸ்வி யாதவ், பீகார் தமிழ் சங்கத்தின் ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் ஆகியோர் உற்சாக வரவேற்பு அளித்தனர். இந்த பாசிச, சதிகார ஆட்சியை முடிவுக்குக் கொண்டு வந்து, மதச்சார்பற்ற, ஜனநாயக இந்தியாவின் மறுபிறப்பை அனுமதிக்க, சமூக நீதியின் பூமியான இங்கிருந்து ஒன்றிணைந்த எதிர்க்கட்சியின் போர் முழக்கம் எழுந்ததில் ஆச்சரியமில்லை” என குறிப்பிட்டுள்ளார்.  




அடுத்த ஆண்டு நாடாளுமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. கடந்த 2014 ஆம் ஆண்டு முதலே மத்தியில், பா.ஜ.க ஆட்சி செய்து வருகிறது. இதனால் எதிர்கட்சிகள் ஒன்றிணைந்து எப்படியாவது ஆட்சியை கைப்பற்ற வேண்டும் என மும்மரமாக அனைத்து நடவடிக்கைகளும் எடுத்து வருகிறது. இதன் முதல் முயற்சியாக இன்று பீகார் மாநிலம் பாட்னாவில் மதசார்பற்ற முற்போக்கு இயக்கங்களில் ஆலோசனை கூட்டம் நடைபெறுகிறது.  




இதில் பங்கேற்பதற்காக நேற்று தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பீகார் புறப்பட்டு சென்றார். அப்போது, மூத்த தலைவரான லாலு பிரசாத் யாதவை சந்தித்து ஆசி பெற்றார். அதன்பின் பொன்னாடை போர்த்தி மரியாதை செலுத்தினார். மேலும், இரு தலைவர்களின் சந்திப்பின் அடையாளமாக கருணாநிதி பற்றிய நூல் ஒன்றை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பரிசாக வழங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.


 பாட்னாவில் நடைபெறும் இந்தக் கூட்டத்தில் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே, ராகுல் காந்தி, மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, அகிலேஷ் யாதவ், ஜார்க்கண்ட் முதல்வர் ஹேம்நாத் சோரன், உத்தவ் தாக்கரே, தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார், டெல்லி முதல்வர் அர்விந்த் கேஜ்ரிவால், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி பொதுச்செயலாளர் டி.ராஜா, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி பொதுச்செயலாளர் சீத்தாராம் யெச்சூரி உள்ளிட்ட பலர் பங்கேற்க உள்ளனர்.  இன்று காலை நடைபெறும் இந்த கூட்டம் இந்திய அரசியலில் ஓர் முக்கிய நிகழ்வாக பார்க்கப்படுகிறது. இந்த ஆலோசனைக் கூட்டத்தில் எதிர்கட்சிகள் ஒன்றிணைந்து பல்வேறு தீர்மானங்கள் கொண்டு வருவார்கள் எனவும் எதிர்ப்பார்க்கப்படுகிறது.