அமெரிக்காவின் வெள்ளை மாளிகைக்கு முதல்முறையாக தான் வந்தது தொடர்பான நினைவுகளை பிரதமர் மோடி பகிர்ந்துள்ளார். 


பிரதமர் மோடி அமெரிக்க பயணம்:


பிரதமராக பொறுப்பேற்ற பின்பு மோடி பலமுறை அமெரிக்காவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். ஆனால் முதல்முறையாக அந்நாட்டு அரசின் அழைப்பின் பேரில், அமெரிக்க நாடாளுமன்றத்தின் கூட்டுக் கூட்டத்தில் உரையாற்றுவதற்காக கடந்த 20ம் தேதி அமெரிக்கா புறப்பட்டார். 


உற்சாக வரவேற்பு:


தொடர்ந்து நேற்று அமெரிக்க அதிபர் மாளிகையான வெள்ளை மாளிகைக்கு வந்த பிரதமர் மோடிக்கு, அங்கு முழு அரசு மரியாதை வழங்கப்பட்டது. அதிபர் ஜோ பைடனே தனது மனைவியுடன் சேர்ந்து நேரில் வந்து பிரமரை வரவேற்றார். அதோடு,  இந்திய வம்சாவளியினர் உள்ளிட்ட ஆயிரத்திற்கும் அதிகமானோரும் வெள்ளை மாளிகை வளாகத்தில் குவிந்து மோடிக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர். இதையடுத்து, இந்தியா மற்றும் அமெரிக்காவிற்கு இடையேயான உறவுகளை மேலும் வலுப்படுத்துவது தொடர்பாக, மோடி மற்றும் பைடன் ஆலோசனை நடத்தினர். அப்போது, இரு தலைவர்களும் பிராந்திய மற்றும் சர்வதேச அளவிலான பல்வேறு பிரச்னைகள் தொடர்பாக விவாதித்ததாக கூறப்படுகிறது. 


பிரதமர் மோடி நெகிழ்ச்சி:


தொடர்ந்து மோடி மற்றும் பைடன் ஆகிய இருவரும் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது பேசிய மோடி “உங்களுடைய நட்புக்கு நன்றி அதிபர் பைடன். வெள்ளை மாளிகையில் எனக்கு கிடைத்த இந்த வரவேற்பு 140 கோடி இந்தியர்களுக்கான கவுரவம். அதோடு, அமெரிக்காவில் உள்ள 40 லட்சம் இந்திய வம்சாவளியினருக்குமானது. இதற்காக அதிபருக்கும் அவரது மனைவிக்கும் நன்றிகள்” என கூறினார்.


30 ஆண்டுகளுக்கு முன்பு..


தொடர்ந்து, ”மூன்று தசாப்தங்களுக்கு முன்பு ஒரு சாதாரண சுற்றுலாப் பயணியாக நான் அமெரிக்காவிற்கு வந்தேன். அப்போது வெள்ளை மாளிகையை வெளியில் இருந்து பார்த்தேன்.  பிரதமரான பிறகு, நான் பல முறை இங்கு வந்திருக்கிறேன். இருப்பினும், அமெரிக்காவில் வாழும் இந்திய சமூகத்தினர் இவ்வளவு பெரிய எண்ணிக்கையில்  வெள்ளை மாளிகை வளாகத்தில் அனுமதிக்கப்பட்டு இருப்பது இதுவே முதல்முறை” என தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார். அதோடு, அமெரிக்காவில் உள்ள புலம்பெயர்ந்த இந்தியர்கள் தங்கள் கடின உழைப்பு மற்றும் திறமை மூலம் தாயகத்திற்கு பெருமை சேர்த்துள்ளனர்.  அவர்கள் தான் இந்தியா-அமெரிக்க உறவுகளின் உண்மையான வலிமையை பிரதிநிதித்துவம் செய்கிறார்கள் எனவும் பாராட்டினார்.






வைரலாகும் புகைப்படம்:


பிரதமர் மோடியின் பேச்சை தொடர்ந்து, அவர் முதல்முறையாக வெள்ளை மாளிகைக்கு சென்றது தொடர்பான புகைப்படம் சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது. அதில் தற்போதைய மத்திய அமைச்சர்களான கிஷன் ரெட்டி, பிரகலாத் ஜோஷி மற்றும் ஆர்எஸ்எஸ் அமைப்பின் சீருடையை அணிந்த வெள்ளையர் ஒருவருடன் சேர்ந்து,  பிரதமர் மோடி வெள்ளை மாளிகையின் வளாகத்தில் நின்றிருக்கும் காட்சி இடம்பெற்றுள்ளது. இதனை பாஜகவினர் பெருமளவில் இணையத்தில் பகிர்ந்து வருகின்றனர்.