காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்திக்கு புதிய பாஸ்போர்ட் வழங்கக் கோரி தொடுக்கப்பட்ட மனுவை ஏற்று கொண்டு, டெல்லி மாவட்ட நீதிமன்றம் உத்தரவிட்டதை தொடர்ந்து, அவருக்கு மூன்று ஆண்டுகளுக்கு மட்டும் செல்லுபடியாகும் பாஸ்போர்ட் வழங்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
மூன்று ஆண்டுகளுக்கு செல்லுபடியாகும் பாஸ்போர்ட்:
வெளிநாடு செல்ல 10 ஆண்டுகளுக்கு அனுமதி வேண்டும் என்று கோரி டெல்லி மாவட்ட நீதிமன்றத்தில் ராகுல் சார்பில் மனுத் தாக்கல் செய்யப்பட்டது. இதை எதிர்த்து பாஜக முன்னாள் எம்.பி. சுப்பிரமணிய சுவாமி வழக்குத் தொடர்ந்தார். இரண்டு தரப்பையும் விசாரித்த மேஜிஸ்திரேட் வைபவ் மேத்தா, ராகுல் காந்திக்கு புதிய பாஸ்போர்ட் வழங்க அனுமதி வேண்டி தொடுக்கப்பட்ட மனுவை ஏற்று கொண்டு, உத்தரவிட்டுள்ளார்.
10 ஆண்டுகளுக்கு ராகுல் காந்தி அனுமதி கோரி இருந்த நிலையில், 3 ஆண்டுகளுக்கு மட்டும் செல்லுபடியாகும் பாஸ்போர்ட் வழங்கப்பட்டுள்ளது. கடந்த 2019ஆம் ஆண்டு கர்நாடகாவில் நடந்த தேர்தல் பிரசாரத்தின்போது பிரதமர் மோடி, லலித் மோடி, நீரவ் மோடி ஆகியோரை மறைமுகமாக விமர்சித்து பேசிய ராகுல் காந்தி, "எப்படி, திருடர்கள் அனைவருக்கும் மோடி என பெயர் சூட்டுகிறார்கள்?" என கேள்வி எழுப்பியிருந்தார்.
ராகுல் காந்தியின் இந்த பேச்சு, அவதூறு கிளப்பும் வகையில் இருப்பதாக வழக்கு தொடரப்பட்டு, தீர்ப்பு சமீபத்தில் வழங்கப்பட்டது. அதில், அவருக்கு இரண்டு ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கியது சூரத் நீதிமன்றம். இதன் காரணமாக, மக்களவை உறுப்பினராக ராகுல் காந்தி தகுதி நீக்கம் செய்யப்பட்டார்.
அமெரிக்கா செல்லும் ராகுல் காந்தி:
தீர்ப்புக்கு எதிராக மேல்முறையீடு செய்ய 30 நாட்களுக்கு அவருக்கு அவகாசம் அளிக்கப்பட்டது. இதையடுத்து, தண்டனையை நிறுத்த வைக்கக் கோரி ராகுல் காந்தி தொடர்ந்த வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டது. இதனால், ராகுல் காந்தியால் தற்போதைக்கு நாடாளுமன்ற உறுப்பினராக முடியாது.
இந்த நிலையில், அவருக்கு வழங்கப்பட்டிருந்த சிறப்பு அந்தஸ்து கொண்ட தூதரக பாஸ்போர்ட்டை ராகுல் திருப்பி ஒப்படைத்தார். இதைத்தொடர்ந்து தனக்கு புதிய பாஸ்போர்ட் வழங்க அனுமதி வேண்டும் என்று டெல்லி மாவட்ட நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்தார். வெளிநாடு செல்ல 10 ஆண்டுகளுக்கு அனுமதி வேண்டும் என்றும் ராகுல் காந்தி கோரி இருந்தார்.
தற்போது, 3 ஆண்டுகளுக்கு செல்லுபடியாகும் பாஸ்போர்ட் வழங்கப்பட்ட நிலையில், ராகுல் காந்தி நாளை அமெரிக்காவுக்கு பயணம் மேற்கொள்ள உள்ளார். அங்கு, வாஷிங்டன் DC, நியூயார்க் மற்றும் சான் பிரான்சிஸ்கோ பல்கலைக்கழக மாணவர்களுடன் உரையாட உள்ளார். இந்திய அமெரிக்கர்களுடன் உரையாடுவது, அமெரிக்க நாடாளுமன்றத்தில் அந்நாட்டு எம்பிக்களை சந்திப்பது, சிந்தனையாளர் குழு உறுப்பினர்கள், வால் ஸ்ட்ரீட் நிர்வாகிகள் மற்றும் பல்கலைக்கழக மாணவர்களுடன் உரையாடலில் ஈடுபட ராகுல் காந்தி திட்டமிட்டுள்ளார்.