மணிப்பூர் மாநிலத்தில் பழங்குடியினர் மற்றும் பழங்குடியினர் அல்லாதோர் இடையே ஏற்பட்ட வன்முறை அங்கு தொடர் பதற்றம் நிலவுவதற்கு காரணமாக அமைந்தது. இந்நிலையில், அங்கு 30க்கும் மேற்பட்ட பயங்கரவாதிகள் பாதுபாப்பு படையினரால் சுட்டுக் கொல்லப்பட்டதாக அம்மாநில முதல்வர் பிரேன் சிங் தெரிவித்துள்ளார். 


என்ன நடந்தது?


மணிப்பூர் மாநிலத்தின் பழங்குடியினர் பட்டியலில் மெய்டீஸ் சமூகத்தினரை சேர்க்க வேண்டும் என்பது நீண்ட நாள் கோரிக்கையாக உள்ளது. கடந்த 2012ஆம் ஆண்டு முதல், மெய்டீஸ் சமூகத்தினர், இந்த கோரிக்கையை நிறைவேற்ற வேண்டும் என வலியுறுத்தி வருகின்றனர். மெய்டீஸ் சமூகத்தினருக்கு எஸ்டி அந்தஸ்து வேண்டும் என்ற கோரிக்கையை மாநிலத்தின் பழங்குடியினர் நீண்ட காலமாக எதிர்க்கின்றனர்.


இதற்கிடையே, மணிப்பூர் உயர் நீதிமன்றத்தில் மெய்டீஸ் பழங்குடி சங்கம் சார்பில் வழக்கு தொடரப்பட்டது. இந்திய அரசியலமைப்பில் உள்ள பழங்குடியினர் பட்டியலில் மெய்டீஸ் சமூகத்தை சேர்ப்பதற்கான பரிந்துரையை மத்திய பழங்குடியினர் விவகார அமைச்சகத்திடம் சமர்ப்பிக்க மணிப்பூர் அரசுக்கு உத்தரவிட வேண்டும் என மனுவில் குறிப்பிடப்பட்டது.


உயர் நீதிமன்றத்தின் தீர்ப்புக்கு, பழங்குடியினர் பிரிவினர் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். எஸ்டி அந்தஸ்து வழங்க வேண்டும் என்ற மெய்டீஸ் சமூகத்தினரின் நீண்ட நாள் கோரிக்கைக்கு எதிராக பழங்குடியினர் ஒற்றுமை பேரணி மே 3ஆம் தேதி நடத்தப்பட்டது. இந்த பேரணியில் வன்முறை வெடித்தது.


 இந்த பேரணியில் ஆயிரக்கணக்கான போராட்டக்காரர்கள் கலந்துகொண்டனர். அப்போது, பழங்குடியினர் மற்றும் பழங்குடியினர் அல்லாதவர்களுக்கு இடையே மோதல் வெடித்தது. கலவரம் வெடித்ததில் இருந்து இதுவரை 70 பேர் கொல்லப்பட்டுள்ளனர். 1,000க்கும் மேற்ப்பட்டோர் தங்களின் ஊர்களில் இருந்து வெளியேறி ராணுவ முகாம்களில் தஞ்சம் அடைந்துள்ளனர். மாநிலம் முழுவதும் சுமார் 2,000 வீடுகள் எரிக்கப்பட்டன.


30 பேர் சுட்டுக் கொலை


இந்நிலையில், பயங்கரவாதிகள் பொதுமக்களின்  வீடுகளுக்குள் புகுந்து தாக்குதல் நடத்தி வந்தனர். இம்பால் பள்ளத்தாக்கு மற்றும் அதனை சுற்றியுள்ள செக்மாய், சுக்னு, கும்பி, ஃபாயெங் மற்றும் செரோ பகுதிகளில் இன்று நள்ளிரவு 2 மணியளவில் பயங்கரவாதிகள் பொதுமக்களின் வீடுகளுக்குள் புகுந்து தாக்குதல் நடத்தினர்.


இதனால் பயங்கரவாதிகளுக்கும் பாதுகாப்பு படையினர்களுக்கும் இடையே பயங்கர தாக்குதல் நடத்தப்பட்டது.  சுமார் எட்டு மணி நேரத்திற்கு மேலாக தாக்குதல் நடத்தப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது.  இந்த தாக்குதலில் சுமார் 30க்கும்  மேற்பட்ட பயங்கரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டதாக அம்மாநில முதல்வர் பிரேன் சிங் தெரிவித்துள்ளார்.


பொதுமக்கள் மீது பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தியதை அடுத்து பாதுகாப்பு படையினர் எடுத்த அதிரடி நடவடிக்கையில் 30க்கும் மேற்பட்ட பயங்கரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டதாகவும், சிலர் கைது செய்யப்பட்டதாகவும் முதல்வர் பிரேன் சிங் கூறியுள்ளார்.


இணைய சேவை முடக்கம்


மாநிலத்தில் தற்போது வரை பதற்றம் நீடிப்பதால் மே 31ஆம் தேதி வரை இணையதள சேவைகளுக்கு தடை விதித்து அம்மாநில அரசு அறிவிப்பை வெளியிட்டது. வாட்ஸ் அப், பேஸ்புக், ட்விட்டர் போன்ற சமூக வலைதளத்தில்  தவறான தகவல்களை  பரப்புவதை தடுக்கும் வகையில் மே 31ஆம் தேதி இணைய சேவை அம்மாநில அரசு முடக்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.