இந்திய எல்லைப் பகுதிக்குள் கிழக்கு லடாக்கில் சீனா கட்டுமானங்கள் மேற்கொள்வது குறித்து அமெரிக்க ராணுவத்தின் பசிஃபிக் பகுதித் தளபதி சார்லஸ் ஃப்ளின் எச்சரிக்கை விடுத்திருந்த நிலையில், காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி சீனா இந்தக் கட்டுமானங்கள் மூலமாக எதிர்காலத்தில் அச்சுறுத்தல் ஏற்படுத்தவிருப்பதாக கூறியுள்ளார்.


சீனாவின் நடவடிக்கைகளைக் கண்டுகொள்ளாததன் மூலமாக மத்திய அரசு இந்தியாவுக்குத் துரோகம் இழைத்து வருவதாகவும் ராகுல் காந்தி தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். 


அமெரிக்க ராணுவத் தளபதி சார்லஸ் ஃப்ளின் சீனக் கம்யூனிஸ்ட் கட்சி இந்திய- பசிஃபிக் பகுதிகளில் சீர்குலைப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருவதாக ஏற்கனவே கூறியிருந்தார். 



கடந்த மாதம், இந்திய எல்லைக்கு உட்பட்ட கிழக்கு லடாக் பகுதியில் பாங்காங் சோ பகுதியில் சீன ராணுவம் இரண்டாவது பாலத்தைக் கட்டி வருவது குறித்து பல்வேறு தகவல்கள் வெளியாகின. இதுகுறித்து அமெரிக்க ராணுவத் தளபதி சார்லஸ் ஃப்ளினிடம் கேர்கப்பட்ட போது, `இந்த நடவடிக்கைகள் நாம் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்பதை உணர்த்துகின்றன’ எனக் கூறியிருந்தார். 


இந்த இரண்டாவது பாலத்தின் மூலமாக சீன ராணுவம் லடாக் பகுதிக்குள் எளிதில் நுழைய முடியும். இந்திய எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் சீன ராணுவம் சாலைக் கட்டுமானம், குடியிருப்புப் பகுதிகள் முதலானவற்றைத் தொடர்ந்து அமைத்து வருகின்றது. இதுகுறித்து, இதுவரை இந்திய அரசும், சீன அரசும் 15 முறை பேச்சுவார்த்தை நடத்தியுள்ளான. 


பாங்காங் சோ, கோக்ரா ஆகிய பகுதிகளின் வடக்கு, மேற்கு கரைகளில் இருக்கும் ராணுவத்தினரை பின்வாங்கும் முயற்சியில் இரு நாடுகளும் இறங்கினாலும், லடாக் பகுதியில் ஒவ்வொரு நாடும் சுமார் 50 முதல் 60 ஆயிரம் படை வீரர்களைக் கொண்டுள்ளன. 







சீனாவின் எல்லை மீறல்களை உக்ரைன் மீதான ரஷ்யப் படையெடுப்புகளோடு ஒப்பிட்டு வரும் ராகுல் காந்தி, தொடர்ந்து பிரதமர் மோடியிடம் இந்தியாவைப் பாதுகாக்குமாறு வேண்டுகோள் விடுத்து வருகிறார். இதற்குமுன், இந்தியாவின் தேசியப் பாதுகாப்பு, எல்லை ஒருமைப்பாடும் மாற்றத்திற்கு உரியன அல்ல எனவும், பாங்காங் சோ பகுதியில் சீன ராணுவம், கிழக்கு லடாக் பகுதியில் இரண்டாவது பாலம் கட்டும் போது மத்திய அரசு மௌனமாக இருப்பதையும் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கடுமையாகக் கண்டித்துள்ளார்.