தமிழகத்தின் பொருளாதாரத்தை மேம்படுத்த முதல்-அமைச்சருக்கான பொருளாதார ஆலோசனை குழு உருவாக்கப்பட்டு உள்ளது. இந்த குழுவில் ரிசர்வ் வங்கி முன்னாள் கவர்னர் ரகுராம் ராஜன், நோபல் பரிசு பெற்ற அமெரிக்க பொருளாதார நிபுணர் எஸ்தர் டப்ளோ, மத்திய அரசின் முன்னாள் தலைமை பொருளாதார ஆலோசகர் அரவிந்த் சுப்பிரமணியன், டெல்லி ஸ்கூல் ஆப் எக்னாமிக்ஸ் நிறுவனத்தை சேர்ந்த ஜீன் ட்ரீஸ், மத்திய அரசின் முன்னாள் நிதித்துறை செயலாளர் நாராயணன் ஆகியோர் இடம் பெற்றுள்ளனர். இந்த குழுவில் இடம்பெற்றுள்ள ஜான் ட்ரீஸ், பெல்ஜியம் நாட்டில் பிறந்தவர். இந்திய குடியுரிமை பெற்று கடந்த 20 ஆண்டுகளாக இந்தியாவில் வசிக்கிறார்.


மன்மோகன்சிங் பிரதமராக இருந்தபோது, அவரது பொருளாதார ஆலோசனை குழு உறுப்பினராக இருந்தார். 100 நாள் வேலை திட்டம் மற்றும் தகவல் உரிமை சட்டம் போன்ற திட்டங்களுக்கு முக்கிய ஆலோசனைகளை வழங்கியவர். பொருளாதார துறையில் உலக அளவில் நன்கு அறியப்பட்ட ஜீன் ட்ரீஸ், ராஞ்சி நகரில் உள்ள குடிசை பகுதியில்தான் வசித்து வருகிறார். பொருளாதாரத்தில் நோபல் பரிசு பெற்ற இந்தியரான அமர்த்தியாசென்னுடன் இணைந்து பல்வேறு ஆய்வுகளை மேற்கொண்டவர். தற்போது ‘டெல்லி ஸ்கூல் ஆப் எக்னாமிக்சில்’ கவுரவ விரிவுரையாளராக உள்ளார்.


ஜார்கண்ட் நிதியமைச்சருக்கு கடிதம்


ஜார்கண்ட் மாநில நிதியமைச்சர் ராமேஸ்வர் ஓரனுக்கு அவர் எழுதி உள்ள கடிதத்தில், ஒவ்வொரு பள்ளியிலும் மதிய உணவில் முட்டையை சேர்க்கும்போது, குழந்தைகளின் ஊட்டச்சத்து பிரச்னைகள் தீர்வதுடன், பள்ளிக்கு வரும் மாணவர்களின் எண்ணிக்கையும்  அதிகரிக்கும் என தெரிவித்துள்ளார். மேலும்  ஜார்க்கண்ட் மாநிலத்தில் உள்ள அங்கன்வாடிகள் மற்றும் பள்ளிகளில் வாரம் ஆறு நாட்களில் தினமும் முட்டையை சேர்ப்பது அவசியம் என தெரிவித்துள்ள ஜீன் ட்ரீஸ், நிதியமைச்சருக்கு அவர் எழுதியுள்ள கடிதத்தில் தன்னை ஜார்கண்ட் குழந்தைகளின் நலன் விரும்பி என குறிப்பிட்டுள்ளார். 


வாக்குறுதியை நிறைவேற்றுக:-


ஜார்க்கண்ட் மாநில அங்கன்வாடி மையங்களில் முட்டைகள் வழங்கப்படாத நிலையில், அம்மாநில பள்ளிகளில் வாரத்தில் 2 நாட்கள் மட்டுமே முட்டை வழங்கப்படுகிறது. ஜார்கண்ட் அரசாங்கம் தினசரி மதிய உணவில் முட்டைகளை வழங்குவதாக வாக்குறுதி அளித்திருந்தது.  இந்த வாக்குறுதியை நிறைவேற்ற நீண்டகாலம் ஆகிவிட்ட நிலையில், ஒடிசா போன்ற ஏழை மாநிலங்களும் இதையே பின்பற்றுவதாக அவர் தெரிவித்துள்ளார். 


ரத்தசோகையால் பாதிக்கப்பட்ட ஜார்கண்ட் குழந்தைகள் 


தேசிய குடும்ப சுகாதார கணக்கெடுப்பின் படி 2021ஆம் ஆண்டில் ஜார்க்கண்ட் மாநிலத்தில் 5 வயதிற்குட்பட்ட குழந்தைகளில் 67.5% குழந்தைகள் ரத்த சோகையால் பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்களில் 39.4% பேருக்கு உடல் எடை குறைவு பாதிப்பும் உள்ளது. 39.6 சதவீத குழந்தைகள் வளர்ச்சி குன்றியவர்களாகவும், வயதுக்கு ஏற்ப உயரம் குறைவாகவும், 22.4 சதவீதம் பேர் வீணாகிவிட்டனர், உயரத்திற்கு எடை குறைவாகவும் உள்ளனர். இதனை சரிசெய்ய முட்டையை மையப்படுத்தப்பட்ட முறையில் கொள்முதல் செய்வதை தவிர்த்து, உள்ளூர் வியாபாரிகளிடம் கொள்முதல் செய்யும் போது கணிசமான விலையில் முட்டையை அரசால் கொள்முதல் செய்ய முடியும் எனவும் அவர் ஆலோசனை வழங்கி உள்ளார்.