தேர்தல் பிரச்சாரத்திற்காக ராகுல் காந்தி, ஜார்க்கண்ட் மாநிலம் சென்ற நிலையில், அவரது ஹெலிகாப்டரை இயக்க விமான போக்குவரத்து கட்டுப்பாடு அமைப்பு அனுமதி வழங்கவில்லை. 45 நிமிடங்களாக அவர் கோடா பகுதியில் காத்திருக்க வேண்டியிருந்தது.
காக்க வைக்கப்பட்ட ராகுல் காந்தி:
ஜார்க்கண்டில் புதிய அரசை தேர்வு செய்வதற்காக சட்டப்பேரவை தேர்தல் நடத்தப்படுகிறது. நேற்று முன்தினம், முதல் கட்ட வாக்குப்பதிவு நடைபெற்றது. முதற்கட்ட வாக்குப்பதிவில் 43 தொகுதிகளுக்கு தேர்தல் நடத்தப்பட்டது. இதையடுத்து, வரும் 20ஆம் தேதி 38 தொகுதிகளுக்கு தேர்தல் நடத்தப்பட உள்ளது.
இந்த மாநிலத்தில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி (NDA) மற்றும் இந்தியா பிளாக் கூட்டணி இடையே நேரடி போட்டி நிலவுகிறது. அங்கு, ஆட்சியை தக்க வைக்க இந்தியா கூட்டணியும் ஆட்சியை பிடிக்க பாஜக கூட்டணியும் பல்வேறு முயற்சிகளை எடுத்து வருகிறது.
இந்த சூழலில், பிரதமர் மோடி, மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி ஆகியோர் ஜார்க்கண்டில் ஒரே நேரத்தில் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டனர். டியோகரில் பிரதமர் மோடியின் பிரச்சார கூட்டமும் அங்கிருந்து 80 கிமீ தொலைவில் ராகுல் காந்தியில் தேர்தல் பிரச்சாரமும் நடத்த திட்டமிடப்பட்டிருந்தது.
தேர்தல் ஆணையத்திற்கு பறந்த புகார்:
ஆனால், ராகுல் காந்தியின் ஹெலிகாப்டர் புறப்படுவதற்கு அனுமதி வழங்கப்படவில்லை. கோடா என்ற பகுதியில் அவரது ஹெலிகாப்டர் நிறுத்தப்பட்டிருந்தது. 45 நிமிட தாமதத்திற்கு பிறகே அவரது ஹெலிகாப்டர் புறப்பட அனுமதிக்கப்பட்டது.
ராகுல் காந்தியின் தேர்தல் பிரச்சாரத்திற்கு இடையூறு செய்யவே அவரது ஹெலிகாப்டருக்கு அனுமதி வழங்கப்படவில்லை என காங்கிரஸ் குற்றம்சாட்டியுள்ளது. இதுகுறித்து தேர்தல் ஆணையத்திற்கும் புகார் அளித்துள்ளது.
"பிரச்சாரத்தில் அனைவருக்கும் சம நிலை இருக்க வேண்டும். பிரதமரின் பிரச்சாரத்திற்கு முன்னுரிமை அளிக்க கூடாது" என எக்ஸ் தளத்தில் காங்கிரஸ் மூத்த தலைவர் ஜெய்ராம் ரமேஷ் பதிவிட்டுள்ளார்.