கர்நாடக மாநிலத்தில் சித்தராமையாவுக்கும் டி.கே.சிவகுமாருக்கும் இடையேயான முதல்வர் பதவிக்கான பந்தயத்தில் ஏற்பட்ட குழப்பம் நேற்று முடிவுக்கு வந்தது.  சித்தராமையா முதல்வராக இருப்பார் என்ற பார்முலாவை டி.கே.சிவக்குமார் ஏற்றுக்கொண்டார். நேற்று டி.கே.சிவக்குமார் இது தொடர்பாக கூறுகையில், ​​ “எல்லாம் நல்லப்படியாக நடந்தது, இனியும்  நல்லபடியாக நடக்கும், தலைமை என்ன முடிவெடுத்தாலும் அதை கடைப்பிடிப்போம். இறுதியில் ராகுல் காந்தி என்னை அழைத்து நீங்கள் அனைவரும் ஒன்றாக இணைந்து உழைக்க வேண்டும் என கூறினார்” என தெரிவித்தார்.


முடிவுக்கு வந்த குழப்பம்: 


கடந்த 10 ஆம் தேதி கர்நாடகா மாநில தேர்தல் நடைபெற்றது. மே 13 ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெற்றது. அதில் காங்கிரஸ் தனிபெரும்பான்மையுடன் ஆட்சி அமைத்தது. காங்கிரஸ், தனிப்பெரும்பான்மை பெற்றாலும், அடுத்த முதலமைச்சரை தேர்வு செய்வதில் தொடர் இழுபறி நீடித்தது. கர்நாடக காங்கிரஸ் தலைவர் சிவக்குமார் மற்றும் முன்னாள் முதலமைச்சர் சித்தராமையா ஆகியோர் இடையே முதலமைச்சர் பதவிக்கு கடும்போட்டி நிலவி வந்தது.


இப்படி இருக்கும் நிலையில், செவ்வாய்கிழமை காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன் கார்கேவை சித்தராமையா மற்றும் சிவக்குமார் தனித்தனியாக சந்தித்து பேசினர். இதனை அடுத்து, நேற்று ராகுல் காந்தியையும் இருவரும் தனித்தனியாக சந்தித்து முதல்வர் பதவி பற்றி பேசியிருந்தனர். இதற்கு பிறகு, முதலமைச்சர் பதவி சித்தராமையாவுக்கு வழங்க முடிவு செய்யப்பட்டது. துணை முதலமைச்சர் பதவியை ஏற்க டி.கே.சிவக்குமார் ஒப்பு கொண்டார். 


இந்த முடிவிற்கு பின், டி.கே.சிவகுமாரும், சித்தராமையாவும் காங்கிரஸ் பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோபால் இல்லத்தில் காலை உணவுக்காக சந்தித்தனர். அங்கிருந்து ஒரே காரில் வேணுகோபால் மற்றும் சுர்ஜேவாலாவுடன் கார்கேவின் இல்லத்திற்குச் சென்றனர். மேலும் 75 வயதாகும் சித்தராமையா முதலமைச்சராக இதுவே கடைசி வாய்ப்பாக இருக்கும் என்றும், டிகே சிவகுமாருக்கு இன்னும் வயது இருப்பதாகவும் முதல்வருக்கான வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்பட்டதாக தகவல் வெளியாகின.  


நேற்று காங்கிரஸ் சட்டப்பேரவை உறுப்பினர்கள் கூட்டம் நடைபெற்றது. அதில், சித்தராமையா, காங்கிரஸ் சட்டப்பேரவை குழு தலைவராக முறைப்படி தேர்வு செய்யப்பட்டார். இதையடுத்து, கர்நாடக ஆளுநர் தாவர் சந்த் கெலாட்டை சந்தித்து ஆட்சி அமைக்க உரிமை கோரினார் சித்தராமையா.


பதவியேற்பு விழா: 


நாளை, பெங்களூருவில் நடைபெறும் பதவியேற்பு விழாவில் முதலமைச்சராக சித்தராமையா, துணை முதலமைச்சராக சிவக்குமாரும் பதவியேற்கின்றனர். மதியம் 12:30 மணிக்கு நடைபெறும் பதவியேற்பு விழாவில் நாட்டின் முக்கிய எதிர்க்கட்சி தலைவர்கள் கலந்து கொள்கின்றனர்.


இதில், பங்கேற்க தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. காங்கிரஸ் கட்சி தலைவர் மல்லிகார்ஜூன கார்கே, சித்தராமையா ஆகியோர் தொலைபேசி வாயிலாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை தொடர்பு கொண்டு அழைப்பு விடுத்துள்ளனர். இந்த அழைப்பை ஏற்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பதவியேற்பு விழாவில் பங்கேற்க உள்ளார் என தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.