நாடு முழுவதும் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட கர்நாடக மாநில தேர்தல் நடந்து முடிந்து முடிவுகள் கடந்த 13ஆம் தேதி வெளியாகியது. காங்கிரஸ் கட்சி பெரிய வெற்றியை பதிவு செய்தது. இதில், 224 சட்டமன்ற தொகுதிகளில், காங்கிரஸ் 135, பாஜக 66, மதசார்பற்ற ஜனதா தளம் 19, மற்றவை 4 தொகுதகளில் வெற்றி பெற்றது.


முதலமைச்சரை தேர்வு செய்வதில் இழுபறி:


காங்கிரஸ், தனிப்பெரும்பான்மை பெற்றாலும், அடுத்த முதலமைச்சரை தேர்வு செய்வதில் தொடர் இழுபறி நீடித்தது. கர்நாடக காங்கிரஸ் தலைவர் சிவக்குமார் மற்றும் முன்னாள் முதலமைச்சர் சித்தராமையா ஆகியோர் இடையே முதலமைச்சர் பதவிக்கு கடும்போட்டி நிலவி வந்தது.


இப்படி இருக்கும் நிலையில், நேற்று முன்தினம் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கேவை சித்தராமையா மற்றும் சிவக்குமார் தனித்தனியாக சந்தித்து பேசினர். இதனை அடுத்து, நேற்று ராகுல் காந்தியையும் இருவரும் தனித்தனியாக சந்தித்து முதல்வர் பதவி பற்றி பேசியிருந்தனர்.


கட்சியின் பெரும்பாலான எம்எல்ஏக்களின் ஆதரவு, சித்தராமையாவுக்கு இருப்பதாக கூறப்படுகிறது. இருப்பினும், காங்கிரஸ் கட்சியின் வெற்றியில் முக்கிய பங்காற்றிய டி.கே.சிவக்குமார், சித்தராமையாவுக்கு முதலமைச்சர் பதவி வழங்க ஒப்பு கொள்ளவில்லை. இச்சூழலில், 
நீண்ட பேச்சுவார்த்தைக்கு பிறகும் முடிவுக்கு வராத பிரச்னைக்கு முற்றுப்புள்ளி வைக்க களத்தில் இறங்கினார் காங்கிரஸ் முன்னாள் தலைவர் சோனியா காந்தி.


காங்கிரஸ் ஃபார்முலா:


இதற்கு பிறகு, முதலமைச்சர் பதவி சித்தராமையாவுக்கு வழங்க முடிவு செய்யப்பட்டது. துணை முதலமைச்சர் பதவியை ஏற்க டி.கே.சிவக்குமார் ஒப்பு கொண்டார். இருப்பினும், முதல் இரண்டு ஆண்டுகள் மட்டும் சித்தராமையா, முதலமைச்சராக தொடர்வார் என்றும் அதன் பிறகு, முதலமைச்சர் பதவி சிவக்குமாருக்கு அளிக்க முடிவு செய்யப்பட்டதாகவும் கூறப்படுகிறது.


ஒரு வழியாக முதலமைச்சர் பதவிக்கான போட்டி முடிவுக்கு வந்த நிலையில், காங்கிரஸ் சட்டப்பேரவை உறுப்பினர்கள் கூட்டம் நடைபெற்றது. அதில், சித்தராமையா, காங்கிரஸ் சட்டப்பேரவை குழு தலைவராக முறைப்படி தேர்வு செய்யப்பட்டார். இதையடுத்து, கர்நாடக ஆளுநர் தாவர் சந்த் கெலாட்டை சந்தித்து ஆட்சி அமைக்க உரிமை கோரினார் சித்தராமையா.


முதலமைச்சர் பதவியேற்பு விழா:


நாளை மறுநாள், பெங்களூருவில் நடைபெறும் பதவியேற்பு விழாவில் முதலமைச்சராக சித்தராமையா, துணை முதலமைச்சராக சிவக்குமாரும் பதவியேற்கின்றனர். மதியம் 12:30 மணிக்கு நடைபெறும் பதவியேற்பு விழாவில் நாட்டின் முக்கிய எதிர்க்கட்சி தலைவர்கள் கலந்து கொள்கின்றனர்.


இதுகுறித்து காங்கிரஸ் பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோபால் கூறுகையில், "கர்நாடகாவில் நடைபெறும் பதவியேற்பு விழாவில் பங்கேற்க ஒத்த கருத்துள்ள கட்சிகளைச் சேர்ந்தவர்களை அழைப்போம்" என்றார்.


இதில், பங்கேற்க தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. காங்கிரஸ் கட்சி தலைவர் மல்லிகார்ஜூன கார்கே, சித்தராமையா ஆகியோர் தொலைபேசி வாயிலாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை தொடர்பு கொண்டு அழைப்பு விடுத்துள்ளனர். இந்த அழைப்பை ஏற்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பதவியேற்பு விழாவில் பங்கேற்க உள்ளார்.