காங்கிரஸ் கட்சியை மக்களிடம் மீண்டும் கொண்டு சேர்க்கும் வகையில் அக்கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி, இந்திய ஒற்றுமை நடைபயணத்தை மேற்கொண்டு வருகிறார். 
 
இதில், பலத்தரப்பட்ட மக்களிடம் உரையாடி அவர்களின் குறைகளை கேட்டறிந்து வருகிறார் ராகுல் காந்தி. தமிழ்நாட்டில் தொடங்கப்பட்ட நடைபயணம் கேரளா, கர்நாடகம், ஆந்திரா, தெலங்கானா, மகாராஷ்டிரா, மத்திய பிரதேசம், ராஜஸ்தான், உத்தரப் பிரதேசம், ஹரியானா, டெல்லி, ஹரியானா, பஞ்சாப் ஆகிய மாநிலங்களை தொடர்ந்து காஷ்மீரை சென்றடைய உள்ளது.


திட்டமிட்டபடி, ஜனவரி 19ஆம் தேதி அன்று ராகுல் காந்தி லக்கன்பூருக்கு செல்ல உள்ளார். அங்கே அன்று இரவு தங்கிய பிறகு, மறுநாள் காலை கதுவாவின் ஹட்லி மோரில் இருந்து புறப்படுகிறார்.


மீண்டும் சட்வாலில் இரவு தங்கிவிட்டு, ஜனவரி 21 அன்று காலை ஹிராநகரில் இருந்து துகர் ஹவேலி வரையிலும், ஜனவரி 22 அன்று விஜயபூரிலிருந்து சத்வாரி வரையிலும் நடைபயணம் மேற்கொள்ளப்பட உள்ளது.


இதை தொடர்ந்து, ஜனவரி 25 ஆம் தேதி பனிஹாலில் ராகுல் காந்தி தேசியக் கொடியை ஏற்றுகிறார். இரண்டு நாட்களுக்குப் பிறகு வரகும் ஜனவரி 27 ஆம் தேதி அனந்த்நாக் வழியாக ஸ்ரீநகருக்கு செல்கிறார்.


இந்நிலையில், காஷ்மீரில் நடைபயணத்தின்போது சில பாதை வழியாக செல்ல வேண்டாம் என ராகுல் காந்திக்கு பாதுகாப்பு முகமைகள் எச்சரிக்கை விடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதுகுறித்து மூத்த அதிகாரி ஒருநர் கூறுகையில், "அவருக்கு பாதுகாப்பு அளிக்கும் வகையில் வரிவான திட்டம் தீட்டப்பட்டுள்ளது. 


சில பாதை வழியாக கால் நடையாகப் பயணம் செய்வதைத் தவிர்க்க வேண்டும் என்றும் அதற்குப் பதிலாக காரில் பயணம் செய்ய வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.


இரவு எங்கு தங்குவது உள்ளிட்ட விவரங்கள் பற்றி விரிவான பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வருகிறது. ராகுல் காந்தி ஸ்ரீநகரில் பயணிக்கும் போது அவருடன் குறிப்பிட்ட சிலரே பயணிக்க வேண்டும் என்று பாதுகாப்பு அதிகாரிகள் விரும்புகின்றனர்.


சில பாதைகள் பதற்றமான ஒன்றாக இருப்பதால் நடைபயணத்தின்போது யார் எல்லாம் அவர் அருகில் இருக்க வேண்டும் என அடையாளம் காணுமாறு அவரது குழுவினருக்கு அறிவுறுத்தியுள்ளோம்" என்றார்.


ராகுல் காந்தியை பொறுத்தவரை, அவருக்கு தற்போது Z+ பாதுகாப்பு வழங்கப்பட்டு வருகிறது. எனவே, 24 மணி நேரமும் அவருக்கு 8 முதல் 9 கமாண்டோக்கள் பாதுகாப்பு வழங்குவர்.


சமீபத்தில், ராகுல் காந்தியின் நடைபயணத்தில் பாதுகாப்பு குளறுபடி ஏற்பட்டதாக மத்திய உள்துறை அமைச்சகத்திற்கு காங்கிரஸ் சார்பில் கடிதம் எழுதப்பட்டது. ராகுல் காந்திக்கு முறையான பாதுகாப்பு அளிக்க வேண்டும் என அதில் கோரிக்கை விடுக்கப்பட்டது.


ஆனால், காங்கிரஸ் கட்சியின் இந்த குற்றச்சாட்டுக்கு மத்திய துணை ராணுவப் படையான சிஆர்பிஎஃப் மறுப்பு தெரிவித்த நிலையில், ராகுல் காந்தி மீது டெல்லி காவல்துறை சரமாரி குற்றம்சாட்டி இருந்தது. 2020ஆம் ஆண்டில் இருந்து, ராகுல் காந்தி 100 முறை பாதுகாப்பு விதிகளை மீறியதாக மத்திய அரசு சார்பில் விளக்கம் அளிக்கப்பட்டது.