ராகுல் காந்தியின் கருத்துகளுக்கு எதிர்ப்பு தெரிவித்த பாஜக தேசியத் தலைவர் ஜே.பி நட்டா, ராகுல் காந்தி தேச விரோத கருவிகளின் நிரந்தர அங்கமாகிவிட்டார் என்று கூறியுள்ளார்.
இங்கிலாந்தில் ராகுல்காந்தி பேசிய கருத்துக்கு பாஜக தலைவர் ஜே.பி.நட்டா கண்டனம் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் ”காங்கிரஸ் கட்சி தேச விரோத செயல்களில் ஈடுபடுவது துரதிர்ஷ்டவசமானது" எனக் கூறியுள்ளார்.
மேலும், ”ராகுல் காந்தி தேச விரோத கருவிகளின் நிரந்தர அங்கமாகிவிட்டார். காங்கிரஸ் கட்சி தேச விரோத செயல்களில் ஈடுபடுவது துரதிஷ்டவசமானது. இதுபோன்ற பேசியதற்கு ராகுல் காந்தி இந்திய மக்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும். ராகுல் காந்தி செய்ததை போன்று இந்தியாவில் எந்தத் தலைவர்களும் செய்யவில்லை. மக்களால் நிராகரிக்கப்பட்டதால் இதுபோன்று இந்தியாவுக்கு எதிராக பேசிவருகிறார். ஜனநாயகத்தை அவமதிக்கும் வகையில் அவர் பேசியுள்ளதாக ஜே.பி. நட்டா குற்றச்சாட்டியுள்ளார்.
தேச விரோத கருவி
இதனைத் தொடர்ந்து பேசிய அவர் ”உலகின் 5ஆவது பெரிய பொருளாதார நாடாக இந்தியா மாறி வரும் நிலையில், ஜி20 மாநாடுகள் இங்கு நடைபெற்று வரும் நிலையில், வெளிநாட்டில் ராகுல் காந்தி தேசத்தையும் நாடாளுமன்றத்தையும் அவமதித்து வருகிறார் தேசத்தில் பலமுறை நிராகிரக்கப்பட்ட பிறகு, ராகுல் காந்தி தற்போது தேச விரோத கருவியின் நிரந்தர அங்கமாகிவிட்டார்.
இந்தியாவை நீண்ட காலமாக ஆண்ட பிரிட்டன் மண்ணில் இருந்து கொண்டு இந்தியா, இந்திய நாடாளுமன்றம், அதன் ஜனநாயகப்படி தேர்ந்தெடுக்கப்பட்ட அரசு, மக்கள் ஆகியோரை ராகுல் காந்தி அவமானப்படுத்தி விட்டார். ராகுல் காந்தியின் செயல் இந்தியாவுக்கு எதிராக செயல்படுவர்களுக்கு பலம் சேர்ப்பதாக அமைந்து விடும்'' என்று ஜே.பி.நட்டா தெரிவித்துள்ளார்.
ஜனநாயக கட்டமைப்பின் மீதான தாக்குதல்:
முன்னதாக, பிரிட்டனில் ஜனநாயகம் குறித்து கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் பேசிய ராகுல் காந்தி, "ஜனநாயகத்தின் தூண்களாக விளங்கும் நாடாளுமன்றம், பத்திரிகைகள் மற்றும் நீதித்துறை ஆகியவை கட்டுப்படுத்தப்படுகின்றன. இந்தியாவில் இஸ்லாமியர்கள், கிறிஸ்தவர்கள, சீக்கியர்கள் உள்ளிட்ட சிறுபான்மையினரும், பத்திரிகைகளும் தாக்கப்படுகின்றன. இந்திய ஜனநாயகத்தின் அடிப்படைக் கட்டமைப்பின் மீதான தாக்குதலை நாங்கள் எதிர்கொள்கிறோம்” என்றார்.
ஜனநாயகம் குறித்து ராகுல் காந்தி பேசிய கருத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆளுங்கட்சி உறுப்பினர்கள் இரு அவையிலும் அமளியில் ஈடுபட்டு வருகின்றனர். இதன் காரணமாக, அவை நடவடிக்கைகள் கடுமையாக பாதிக்கப்பட்டு வருகின்றன. பட்ஜெட் கூட்டத்தொடரின் ஐந்தாவது நாளான இன்றும் ராகுல் காந்தி விவகாரம் அவை நடவடிக்கைகளை முடக்கியது குறிப்பிடத்தக்கது.
மேலும் படிக்க