கர்நாடகாவில் கடந்த 10ஆம் தேதி சட்டப்பேரவை தேர்தல் நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து 13ஆம் தேதி, வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டது. அதில், காங்கிரஸ் கட்சி பெரும் வெற்றி பெற்றது. பிரதான எதிர்க்கட்சியான காங்கிரஸ் கட்சி 135 தொகுதிகளிலும், ஆளுங்கட்சியான பாஜக 66 தொகுதிகளிலும், மூன்றாவது பெரிய கட்சியான மதச்சார்பற்ற ஜனதா தளம் 19 இடங்களிலும் வெற்றி பெற்றது.
கர்நாடக தேர்தல்:
இதனால் கூட்டணி என்ற தேவையே ஏற்படாமல் காங்கிரஸ் கட்சி ஆட்சியமைக்க தேவையான பெரும்பான்மையை பெற்றது. இதனைத் தொடர்ந்து கர்நாடகா அரசின் புதிய முதலமைச்சர் யார் என்ற கேள்வி எழுந்தது. காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், முன்னாள் முதலமைச்சர் சித்தராமையாவுக்கும், அக்கட்சியின் மாநில தலைவரான டி.கே.சிவக்குமார் இடையேயும் கடும் போட்டி நிலவியது.
காங்கிரஸ் முன்னாள் தலைவர் சோனியா காந்தியின் தலையீட்டால் பிரச்னை முடிவுக்கு வந்தது. கிட்டதட்ட 6 நாட்கள் நடந்த பலகட்ட ஆலோசனைகளுக்குப் பிறகு முதலமைச்சராக சித்தராமையாவும், துணை முதலமைச்சராக டி.கே.சிவக்குமாரும் தேர்வு செய்யப்பட்டனர்.
தொடர்ந்து ஆளுநரை சந்தித்து ஆட்சி அமைக்க சித்தராமையா உரிமை கோரினார்.
முதலமைச்சர் பதவியேற்பு விழா:
இந்நிலையில், கர்நாடக தலைநகர் பெங்களூருவில் இன்று மதியம் 12:30 மணிக்கு கர்நாடக முதலமைச்சர் பதவியேற்பு விழா நடைபெற்றது. இதில், காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, கட்சியின் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி, மூத்த தலைவர்கள் அசோக் கெலாட், பூபேஷ் பாகேல் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
இவர்களை தவிர, நாட்டின் முக்கிய எதிர்க்கட்சி தலைவர்களான மு.க. ஸ்டாலின், சரத் பவார், நிதிஷ் குமார், சீதாராம் யெச்சூரி, டி. ராஜா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
பதவியேற்பு விழாவில் பேசிய ராகுல் காந்தி, "காங்கிரஸின் வெற்றிக்குப் பிறகு, இந்த தேர்தலில் காங்கிரஸ் எப்படி வென்றது தொடர்பான பல கட்டுரைகள் எழுதப்பட்டன. வெவ்வேறு பகுப்பாய்வுகள் செய்யப்பட்டன. ஆனால், ஏழைகள், தலித்துகள் மற்றும் ஆதிவாசிகள், பின்தங்கியவர்களுடன் துணை நின்றதால் காங்கிரஸ் வெற்றி பெற்றது என்று நான் கூற விரும்புகிறேன்.
ராகுல் காந்தி உறுதி:
ஏழைகளும், உண்மையும் எங்களிடம் இருந்தது. பாஜகவிடம் பணம், போலீஸ் மற்றும் அனைத்தும் இருந்தது. ஆனால், கர்நாடக மக்கள் தங்கள் அதிகாரங்களை எல்லாம் தோற்கடித்தனர். நாங்கள் உங்களுக்கு 5 வாக்குறுதிகளை அளித்துள்ளோம். நாங்கள் பொய்யான வாக்குறுதிகளை வழங்க மாட்டோம் என்று கூறியிருந்தேன்.
நாங்கள் சொல்வதைச் செய்கிறோம். இன்னும் 1-2 மணி நேரத்தில், கர்நாடக அரசின் முதல் அமைச்சரவைக் கூட்டம் நடக்கும். அந்தக் கூட்டத்தில் இந்த 5 வாக்குறுதிகளும் சட்டமாகிவிடும். தூய்மையான, ஊழலற்ற அரசை வழங்குவோம்" என்றார்.
பதவியேற்பு விழாவில் பரமேஸ்வரா, கே.எச்.முனியப்பா, கே.ஜே.ஜார்ஜ், பாட்டீல், சதீஷ் ஜர்கிஹோலி, பிரியங்க் கார்கே, ராமலிங்க ரெட்டி, ஷமீர் அகமது கான் உள்ளிட்டோரும் அமைச்சர்களாக பதவியேற்று கொண்டனர்.