டெல்லி அரசில் ஐஏஎஸ் அதிகாரிகளை நியமிக்கும் விவகாரத்தில், மாநில அரசின் அதிகாரங்களை நிலைநாட்டிய உச்ச நீதிமன்ற தீர்ப்புக்கு எதிராக மத்திய அரசு மறுசீராய்வு மனு தாக்கல் செய்துள்ளது. நிர்வாக அதிகாரங்களை துணை நிலை ஆளுநருக்கு வழங்கி மத்திய அரசு நேற்று அவசர சட்டம் கொண்டு வந்த நிலையில், மத்திய அரசு உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளது.


ஐஏஎஸ் அதிகாரிகளை நியமிக்கும் விவகாரத்தில் டெல்லி அரசுக்கும் மத்திய அரசின் பிரதிநிதியான துணை நிலை ஆளுநருக்கும் இடையே அதிகார போட்டி நிலவி வந்த நிலையில், அதை தீர்க்கும் வகையில் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. 


ஆளுநர்கள் vs மாநில அரசுகள்:


இந்த சட்ட போராட்டத்தில் அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையிலான மாநில அரசுக்கு ஆதரவாக உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. மக்களின் விருப்பத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் வகையில் சட்டம் இயற்றும் அதிகாரம் டெல்லி சட்டப்பேரவைக்கு வழங்கப்பட்டுள்ளது என உச்ச நீதிமன்ற அரசியல் சாசன அமர்வு தீர்ப்பு அளித்தது. 


தமிழ்நாடு, தெலங்கானா, கேரளா உள்ளிட்ட மாநிலங்களின் சட்டப்பேரவைகளில் இயற்றப்படும் சட்டங்களுக்கு ஆளுநர் ஒப்புதல் அளிப்பதில்லை என அந்தந்த மாநில அரசுகள் தொடர்ந்து குற்றம்சாட்டி வருகின்றன. இப்படிப்பட்ட இக்கட்டான அரசியல் சூழலில் உச்ச நீதிமன்ற அரசியல் சாசன அமர்வு வழங்கிய தீர்ப்பு முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்பட்டது.


குறிப்பாக, இந்த தீர்ப்பில் பல முக்கிய கருத்துகள் இடம்பெற்றுள்ளன. ஆளுநரின் அதிகாரம் எவ்வளவு, யூனியன் பிரதேச அரசுக்கு எவ்வளவு என்பது குறித்து வரையறுக்கப்பட்டது.


உச்ச நீதிமன்றம் வரலாற்று சிறப்புமிக்க தீர்ப்பு:


"ஜனநாயக ஆட்சி முறையில், நிர்வாகத்தின் உண்மையான அதிகாரம் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசாங்கத்தின் கையில் இருக்க வேண்டும்" என உச்ச நீதிமன்றம், மாநில அரசுகளுக்கு ஆதரவாக கருத்து தெரிவித்துள்ளது.


இதையடுத்து, ஐஏஎஸ் அதிகாரிகள் நியமனம் உள்ளிட்ட மாநில அரசின் நிர்வாக அதிகாரங்களை கட்டுப்படுத்தும் வகையில், மத்திய அரசு நேற்று அவசரச் சட்டம் கொண்டு வந்தது. அதன்படி, டெல்லி அரசில் அதிகாரிகளின் நியமனம், பணியிடமாற்றம் போன்ற விஷயங்களில் முடிவு எடுக்கும் அதிகாரம் துணை ஆளுநருக்கு வழங்கப்படுகிறது.


தீர்ப்புக்கு எதிராக மத்திய அரசு மறுசீராய்வு மனு:



உச்ச நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு, மாநில அரசின் அதிகாரங்களை நிலைநாட்டிய நிலையில், இந்த அவசர சட்டத்தின்படி டெல்லி துணைநிலை ஆளுநருக்கு அதிக அதிகாரம் வழங்கப்பட்டது. இச்சூழலில், மாநில அரசின் அதிகாரங்களை நிலைநாட்டிய உச்ச நீதிமன்ற தீர்ப்புக்கு எதிராக மத்திய அரசு மறுசீராய்வு மனு தாக்கல் செய்துள்ளது. இதனால், டெல்லி அரசு vs துணை நிலை ஆளுநர் விவகாரம் மீண்டும் உச்ச நீதிமன்றத்திற்கே சென்றுள்ளது.