பா.ஜ.க. ஆளும் முக்கியமான மாநிலங்களில் ஒன்றாக மத்தியப் பிரதேசம் உள்ளது. கடந்த 2003ஆம் ஆண்டு முதல் நடுவில் ஓராண்டை தவிர கிட்டத்தட்ட 19 ஆண்டுகளாக பா.ஜ.க. அங்கு தொடர்ந்து ஆட்சி செய்து வருகிறது. பாஜக ஆதிக்கம் செலுத்தும் மாநிலங்களில் ஒன்றான மத்திய பிரதேசத்தில் கடந்த 2018ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டப்பேரவை தேர்தலில் காங்கிரஸ் வெற்றி பெற்றது.


ஆனால், முதலமைச்சர் பதவியை பெறுவதில் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் கமல் நாத், இளம் தலைவரான ஜோதிராதித்ய சிந்தியா ஆகியோருக்கிடையே தொடர் போட்டி நிலவி வந்தது. கமல் நாத்துக்கு முதலமைச்சர் பதவி வழங்கப்பட்டதால் சிந்தியா அதிருப்தியில் இருந்து வந்தார்.


மத்திய பிரதேசத்தில் பாஜக, காங்கிரஸ் இடையே கடும் போட்டி:


இறுதியில், சொந்த கட்சிக்கு எதிராக போர்க்கோடி தூக்கிய சிந்தியா, தன்னுடைய ஆதரவு எம்எல்ஏக்களுடன் பாஜகவில் இணைந்தார். இதனால், ஆட்சி அமைத்த ஒரே ஆண்டில் கமல்நாத் தலைமையிலான காங்கிரஸ் ஆட்சி கவிழ்ந்தது. பாஜகவின் சிவராஜ் சிங் சவுகான் மீண்டும் முதலமைச்சராக பதவியேற்று, ஆட்சி நடத்தி வருகிறார்.


இச்சூழலில், மத்திய பிரதேச சட்டப்பேரவைக்கு இந்தாண்டின் இறுதியில் சட்டப்பேரவை தேர்தல் நடத்தப்பட உள்ளது. ஏற்கனவே, இரண்டு கட்டமாக வேட்பாளர் பட்டியலை பாஜக வெளியிட்டுள்ளது. மத்திய விவசாயத்துறை அமைச்சர் நரேந்திர சிங் தோமர் உள்பட 3 மத்திய அமைச்சர்கள், 4 எம்பிக்களை வேட்பாளராக களம் இறங்கியுள்ளது பாஜக.


பாஜக தொடர் அதிரடியில் இறங்கியுள்ள நிலையில், காங்கிரஸ் கட்சி தலைவர்களும் சூறாவளி பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். காங்கிரஸ் கட்சியின் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே தொடங்கி பிரியங்கா காந்தி, ராகுல் காந்தி வரை தீவிர பரப்புரையில் ஈடுபட்டு வருகின்றனர். 


சூறாவளி பிரச்சாரத்தில் ஈடுபட்டு வரும் காங்கிரஸ்:


அந்த வகையில், மத்திய பிரதேசம் சென்றுள்ள ராகுல் காந்தி, பாஜக மீது சரமாரி குற்றச்சாட்டுகளை சுமத்தினார். பொதுக்கூட்டத்தில் பேசிய அவர், "நாட்டின் ஊழல் மையமாக மத்திய பிரதேசம் உள்ளது. பல வகையில் ஊழல் செய்து பணத்தை பாஜக கொள்ளையடித்து செல்கிறது.


பா.ஜ.க. ஆட்சியில் மாநிலத்தில் 18,000 விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டனர். விவசாயிகளின் கோரிக்கைகளுக்கு பாஜக அரசு செவி சாய்க்கவில்லை. ஒரு பக்கம் காங்கிரஸ் கட்சியும் காந்தியும் உள்ளனர். இன்னொரு பக்கம் பாஜகவும் ஆர்எஸ்எஸ் அமைப்பும் கோட்சேவும் உள்ளனர்.


ஒரு பக்கம் வெறுப்பும் வன்முறையும் உள்ளது. இன்னொரு பக்கம் அன்பும் மரியாதையும் சகோதரத்துவமும் உள்ளது. அவர்கள் (பாஜக) எங்கு சென்றாலும் வெறுப்பைப் பரப்புகிறார்கள். ஆனால், இப்போது மத்தியப் பிரதேச இளைஞர்களும் விவசாயிகளும் அவர்களை வெறுக்கத் தொடங்கியுள்ளனர்" என்றார்.


"ஓபிசிக்கு எதிராக உள்ள பாஜக"


மகளிர் இடஒதுக்கீடு சட்டம் குறித்து பேசிய அவர், "அவர்கள் மசோதாவை ஆதரித்தனர். ஆனால், இரண்டு தடைகளை விதித்துள்ளனர். ஒன்று மக்கள் தொகை கணக்கெடுப்பு. மற்றொன்று தொகுதி மறுசீரமைப்பு. மேலும், பெண்கள் இடஒதுக்கீடு மசோதாவில் ஓபிசியை சேர்க்க வேண்டும் என்று காங்கிரஸ் கோருகிறது. 


காங்கிரஸ் ஆளும் நான்கு மாநிலங்களின் மூன்று முதலமைச்சர்கள் ஓ.பி.சியை சேர்ந்தவர்கள். பாஜக ஓபிசிக்கு எதிரானது. சாதிவாரி கணக்கெடுப்பு இல்லாததால், மாநிலத்தில் மக்கள் தொகை எவ்வளவு என்று யாராலும் கூற முடியாது" என்றார்.