சீக்கியர்களுக்கு தனி நாடு கோரும் காலிஸ்தான் ஆதரவாளர்கள், இந்தியாவுக்கு பெரும் தலைவலியாக மாறியுள்ளனர். குறிப்பாக, சமீப காலமாக காலிஸ்தான் ஆதரவாளர்கள் செய்யும் செயல் இந்திய அரசை கோபத்தில் ஆழ்த்தி வருகிறது. 


அமெரிக்காவில் உள்ள சான் பிரான்சிஸ்கோ, இங்கிலாந்தில் உள்ள லண்டன் ஆகிய நகரங்களில் அமைந்துள்ள இந்திய தூதரகங்களை காலிஸ்தான் ஆதரவாளர்கள் சேதப்படுத்திய சம்பவம் மத்திய அரசை கொந்தளிப்பில் ஆழ்த்தியது.


இந்தியாவுக்கு தொடர்ந்து குடைச்சல் தரும் காலிஸ்தான் ஆதரவாளர்கள்:


இப்படிப்பட்ட சூழலில், கனட நாட்டைச் சேர்ந்த சீக்கிய பிரிவினைவாத தலைவர் ஹர்தீப் சிங் நிஜ்ஜாரின் கொலை பரபரப்பை ஏற்படுத்தியது. நிஜ்ஜார் சுட்டுக் கொலை செய்யப்பட்ட சம்பவத்தின் பின்னணியில் இந்திய அரசு இருக்கலாம் என்று ஜஸ்டின் ட்ரூடோ அந்நாட்டு நாடாளுமன்றத்தில் தெரிவித்தது இந்திய - கனட உறவில் பதற்றம் ஏற்பட காரணமாக அமைந்தது.


நிஜ்ஜார் கொலை சம்பவம் இந்தியாவுக்கு நெருக்கடியை தந்து வரும் நிலையில், பிரிட்டனில் காலிஸ்தான் ஆதரவாளர்கள் செய்த சம்பவம் மீண்டும் பிரச்னையை கிளப்பியுள்ளது. பிரட்டன் நாட்டுக்கான இந்திய தூதர் விக்ரம் துரைசாமியை ஸ்காட்லாந்தில் உள்ள குருத்வாராவுக்குள் செல்ல விடாமல் காலிஸ்தான் ஆதரவாளர்கள் தடுத்துள்ளனர்.


இந்திய தூதரை தடுத்து நிறுத்திய காலிஸ்தான் ஆதரவாளர்கள்:


கிளாஸ்கோவில் உள்ள குருத்வாராவுக்கு செல்ல விடாமல் விக்ரம் துரைசாமியை காலிஸ்தான் ஆதரவாளர்கள் தடுத்து நிறுத்துவது போன்ற வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. குருத்வாராவுக்கு அருகே பார்க்கிங் பகுதியில் உள்ள இந்திய தூதரின் காருக்கு அருகில் இருவர் நின்று கொண்டிருப்பது வீடியோவில் பதிவாகியுள்ளது.


அவர்களில் ஒருவர் உள்ளே இருந்து பூட்டப்பட்டிருந்த காரின் கதவைத் திறக்க முற்படுவதைக் காணலாம். பின்னர், தூதரின் கார் குருத்வாரா வளாகத்தை விட்டு வெளியேறுவதும் வீடியோவில் பதிவாகியுள்ளது. குருத்வாராவுக்கு வரும்படி குருத்வாரா நிர்வாகக் குழுதான், இந்திய தூதருக்கு அழைப்பு விடுத்திருந்தது. 


குருத்வாரா நிர்வாகக் குழு ஊழியர்களை காலிஸ்தானி ஆதரவாளர்கள் மிரட்டுவது போன்ற வீடியோவும் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இந்த சம்பவத்திற்கு இன்னும் இந்திய அரசு எதிர்வினை ஆற்றவில்லை. தூதரின் பாதுகாப்பு தொடர்பான விவகாரம் என்பதால் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.


சமீபத்தில், கனடாவில் ஒட்டப்பட்ட காலிஸ்தான் போஸ்டர்களில் இந்திய தூதர்களின் பெயரை குறிப்பிட்டு மிரட்டல் விடுத்திருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருந்தது. காலிஸ்தான் ஆதரவாளர்களுக்கு ஆதரவாக கனட அரசு செயல்படுவதாக தொடர் குற்றச்சாட்டு எழுந்து வருகிறது. இப்படிப்பட்ட சூழலில், நிஜ்ஜார் கொலை சம்பவத்தில் கனட நாட்டு விசாரணைக்கு இந்தியா ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என அமெரிக்கா தெரிவித்துள்ளது.