முன்னாள் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியும், தற்போதைய ராஜ்யசபா எம்.பியுமான ரஞ்சன் கோகாய், ரஃபேல் வழக்கில் பிரெஞ்சு நீதிமன்றம் ஆணையிட்டுள்ள விசாரணை குறித்து கேட்டபோது, கருத்து தெரிவிக்க ஒன்றுமில்லை என கூறியிருக்கிறார்.


7.8 பில்லியன் யுரோ மதிப்பில் பிரான்ஸ் அரசுடன் 36 ரஃபேல் ரக விமானங்களை வாங்குவதற்கான அரசுகளுக்கு இடையிலான ஒப்பந்தத்தில் முறைகேடு தொடர்பான விசாரணையை பிரான்ஸ் நாட்டின் பொருளாதார குற்றப்பிரிவுத் துறை முடுக்கிவிட்டுள்ளது. 'ஊழல், செல்வாக்கு செலுத்துதல், பண மோசடி மற்றும் தேவையற்ற உதவிகள்' எனக் கூறி இந்த குற்றவியல் வழக்கை விசாரிக்க நீதிபதி ஒருவரும் நியமிக்கப்பட்டுள்ளார். முன்னதாக, இந்த வழக்கை விசாரித்த இந்திய உச்சநீதிமன்ற மூன்று நீதிபதிகள் அடங்கிய  அமர்வு, ரஃபேல் ஒப்பந்தத்தில் (ரிலையன்ஸ் டிஃபன்ஸ் நிறுவனத்தை இந்தியக் கூட்டாளியாகத் தேர்வுசெய்த விவகாரம்) முறைகேடு இருப்பதற்கான ஆதாரங்கள் இல்லை என்றும் ரஃபேல் விமான ஒப்பந்த நடவடிக்கை, விலை நிர்ணயம் ஆகிய விவகாரங்களில் நீதிமன்றம் தலையிடுவதற்கு உறுதியான காரணம் எதுவும் இல்லை என்றும் கூறி வழக்கைத் தள்ளுபடி செய்தது.  


Rafale | ரஃபேல் விவகாரம் மீண்டும் வெடிக்க காரணம் என்ன? தெரிந்துகொள்ளவேண்டியது என்ன?


இந்த வழக்கில் நீதித்துறை தனது வழிமுறைகளை  சரியாக கடைபிடிக்கப்படவில்லை என்ற வாதமும் முன்வைக்கப்பட்டது. உதாரணமாக, ரபேல் ஒப்பந்தத்தின் முக்கிய ஆவணங்கள் அனைத்தும் "sealed Cover" மூலமாக சமர்பிக்கப்பட்டது. நீதித்துறைக்கு மறைமுகமாக அளிக்கப்பட்ட ஆவணங்கள் அடிப்டையில் தான் வழக்கின் தீர்ப்பு எழுதப்பட்டது. இதுமட்டுமல்ல, முன்னாள் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் விசாரித்த அசாம் என்.ஆர்.சி வழக்கு, தேர்தல் பத்திரம் திட்டம் எதிராக தாக்கல் செய்யப்பட்ட வழக்கிலும் முக்கிய ஆவணங்கள் அனைத்தும் sealed cover மூலமாகவே தாக்கல் செய்யப்பட்டன.


இருநாடுகளுக்கு இடையேயான ரஃபேல் ஒப்பந்தத்தில் 'சீல்டு கவர்' முக்கியத்துவம் என்று கூறப்பட்டாலும், யார் இந்நாட்டின் குடிமக்கள்? என்று முடிவெடுக்கும் என்ஆர்சி வழக்கிலும் சீல்டு கவர் முதன்மைபடுத்தப்பட்டது. மேலும், ஜம்மு காஸ்மீர் அரசியலமைப்பு சட்டம் 370 ரத்து செய்த காலத்தில் போடப்பட்ட  ஆட்கொணர்வு மனுவை ரஞ்சன் கோகோய் கடைசி வரை விசாரிக்கவே இல்லை. இவரது தலைமையில் தான், அயோத்தியில் உள்ள ராம ஜென்மபூமியில் ராமர் கோயில் கட்ட அனுமதி வழங்கப்பட்டது. இதில், இந்திய நீதித்துறையின் முன்வைத்த பல்வேறு வாதங்கள் இன்றளவும் பேசும் பொருளாக உள்ளது. 




பொதுவாக, நாடாளுமன்றம், நிர்வாகம், நீதித்துறை ஆகிய 3 அங்கங்களும் அரசியலமைப்புக்கு உட்பட்டு செயல்படுவதை தான்  அரசு என்று கூறுகிறோம். இந்த மூன்று அங்கங்களும், தன்னிச்சையாக செயல்படக்கூடியவை. இருப்பினும்,  நாடாளுமன்றம் மற்றும்  நிர்வாகத்தை கண்காணிப்பும் ஒரு கருவியாக இந்தியாவின் நீதித்துறையை அரசியலமைப்பு வல்லுநர்கள் வடிவமைத்தனர்.        


ஆனால், முன்னாள் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய் இந்திய அரசியலமைப்பின் அடிப்படை லட்சுமண ரேகையை தாண்டி, நிர்வாகத்தின் குரலாகவே ஒலித்து வந்தார். ஓய்வுக்குப் பிறகு, ராஜ்யசபா உறுப்பினராக இவர் நியமிக்கப்பட்டார். இது.  மிகப்பெரிய சர்ச்சையாக உருவெடுத்தது. இந்த சர்ச்சை முடிவடைவதற்குள், தேசிய மனித உரிமை ஆணையத்தின் தலைவராக  உச்சநீதிமன்ற நீதிபதி அருண் மிஸ்ரா(ஓய்வு) நியமிக்கப்பட்டார்.   


பணி ஓய்வுக்குப் பிறகான நியமனங்கள் : பணி ஓய்வுக்குப் பிறகு உச்சநீதிமன்ற நீதிபதிகள் வேறு அரசுப் பணிகளில் நியமிக்கப்படக் கூடாது என்று இந்திய அரசியலமைப்பு தெரிவிக்கவில்லை. ஆனால், தன்னிச்சையான நீதித்துறை தான் இந்திய அரசியலமைப்பின் அடிப்படை கட்டமைப்பு என்று கூறப்படுகிறது. தற்போது, உச்சநீதிமன்ற நீதிபதிகள் தங்கள் ஓய்வுக்குப் பிறகு மத்திய/மாநில அரசுகளை எதிர்பார்க்கும் நிலை ஏற்பட்டுள்ளது. 



 


உதாரணமாக, கடைசியாக ஓய்வுபெற்ற 100 நீதிபதிகளில், 70% பேர் பல்வேறு பணிகளில் நியமிக்கப்பட்டதாக Vidhi Centre for Legal policy வெளியிட்ட ஆய்வறிக்கையில் தெரிவித்தது. இதில், பெரும்பாலான நியமனங்கள் ஓய்வு பெற்ற ஒரு வருடத்திற்குள் ஏற்பட்டுள்ளன. அதாவது, ஓய்வு பெறுவதற்கு முன்பே, தங்களின் அடுத்த நியமனங்கள் குறித்த புரிதல்கள் நீதிபதிகளுக்கு தெரிந்திருந்தக்க கூடிய சூழல் உள்ளதாக பல்வேறு ஆய்வுக் கட்டுரைகள் தெரிவிக்கின்றன.  அதிகப்படியான நீதிபதிகளை நியமிக்கும் நோக்கில்,  தற்காலிக தீர்ப்பாயம் மற்றும் விசாரணை ஆணையங்களை மத்திய/மாநில அரசுகள் அமைத்து வருவதாகவும் அந்த ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டது. 




நீதிபதிகளின் ஓய்வு பெறும் வயது 65 முதல் 70 ஆக அதிகரிப்பது, மாதாந்திர ஓய்வூதியத்தினை சம்பளத்திற்கு நிகராக வழங்குவது, குறிப்பாக அரசு துறைகளில் ஓய்வுபெற்ற நீதிபதிகளை நியமிப்பதை தடை செய்வது போன்ற நடவடிக்கைகள் அவசியமாகிறது. 


ஏ.கே.ராஜன் குழுவுக்கு தடைகோரிய வழக்கில் பதிலளிக்க மத்திய அரசுக்கு அவகாசம்..!