ஹெல்மெட் இல்லாமல் வண்டி ஓட்டினால் புஷ்பாவாக இருந்தாலும், யாராக இருந்தாலும் அபராதம் விதிக்கப்படும் என்று புஷ்பா பட ஹீரோ அல்லு அர்ஜூனின் போஸ்டரை குறிப்பிட்டு ஒடிசா மாநில சாலை போக்குவரத்து துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.
ஹெல்மெட் மீறுபவர்களுக்கு ஒடிசா அரசு இன்று கடும் எச்சரிக்கை விடுத்துள்ளது. கட்டாய ஹெல்மெட் அணிய வேண்டும் என்ற வழிகாட்டுதலை மீறும் அனைவருக்கும் கடுமையான அபராதம் விதிக்கப்படும் என்று தெரிவித்துள்ளது.
இதுதொடர்பாக ஒடிசா மாநில சாலை போக்குவரத்து துறை தனது அதிகாரப்பூர்வ டுவிட்டர் பக்கத்தில், தெலுங்கு முன்னணி நடிகர் அல்லு அர்ஜுன் நடித்த சமீபத்திய பிளாக்பஸ்டர் திரைப்படமான புஷ்பா-தி ரைஸின் போஸ்டர் ஒன்றைப் பயன்படுத்தியுள்ளது. அந்தப் போஸ்டரில், ‘பைக் ஓட்டும்போது எப்போதும் ஹெல்மெட் அணியுங்கள். இல்லையெனில், நீங்கள் அபராதம் செலுத்துவீர்கள், உங்கள் உயிருக்கும் ஆபத்தை விளைவிப்பீர்கள்’ என எழுதப்பட்டுள்ளது.
அந்தப் போஸ்டரில், அல்லு அர்ஜுன் ஹெல்மெட் அணியாமல் பைக்கில் அமர்ந்து கடினமான தோற்றத்தில் காட்சியளிக்கிறார். புஷ்பாவாக இருந்தாலும் சரி, புஷ்பராஜாக இருந்தாலும் சரி, இருசக்கர வாகனம் ஓட்டுபவர்கள் ஹெல்மெட் அணிய வேண்டும், இல்லையெனில் கடும் அபராதம் விதிக்கப்படும் என ஒடிசா மாநில சாலை போக்குவரத்து துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.
மேலும், மோட்டார் வாகனங்கள் (திருத்தம்) சட்டம் 2019ன் படி, வாகனம் ஓட்டுபவர், பின்னால் உட்கார்ந்து இருப்பவர் ஹெல்மெட் அணியாமல் இருந்தால், முதலில் 1000 ரூபாய் அபராதம் விதிக்கப்படும் என்றும், மேலும் 90 நாட்கள் வரை உரிமம் தகுதியிழப்பு தவிர அடுத்தடுத்த நடவடிக்கைகள் எடுக்கப்படும் எனவும் கூறியுள்ளது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்