ஈன்ற பொழுதிற் பெரிதுவக்கும் தன்மகனைச்
சான்றோன் எனக்கேட்ட தாய்.. என்ற குறளுக்குச் சான்றாக ஒரு நெகிழ்ச்சிச் சம்பவம் நடந்துள்ளது.
குஜராத் காவல்துறையில் தான் இச்சம்பவம் அரங்கேறியுள்ளது. கடந்த ஆகஸ்ட் 15-ஆம் தேதி 75வது சுதந்திர தினத்டை ஒட்டி நாடே விழாக்காலம் பூண்டிருந்தது. காவல்துறை அணிவகுப்புகளுடன் எல்லா மாநிலங்களிலும் விடுதலை நாள் பெரும் கொண்டாட்டமாக கடைபிடிக்கப்பட்டது.
அந்த வகையில் குஜராத் காவல்துறையும் காவலர்கள் அணிவகுப்பை நடத்தியது. அபோது ஜுனகத்தில் நடந்த சுதந்திர தின காவல்துறை அணிவகுப்பு நிகழ்ச்சியிபோதே அந்தச் சம்பவம் நடந்தது.
விஷால் ராபரி என்ற இளைஞர் குஜராத் காவல்துறையில் டிஎஸ்பியாக இருக்கிறார். அண்மையில், குஜராத் அரசுப்பணியாளர் தேர்வாணையம் நடத்திய தேர்வில் அவர் வெற்றி பெற்று டிஎஸ்பியாகி இருக்கிறார். அவரது தாயார் மதுபென் ராபரி ஏற்கெனவே காவல்துறையில் துணை உதவி ஆய்வாளராக இருக்கிறார். ஜுனகத் தாலுகாவில் ஆரவல்லி காவல்சரகத்தில் இவருக்குப் பணி. தாயும் மகனும் காவல்துறையில் என்பதே பாராட்டுதலுக்கு உரிய விஷயம். மகனுக்கு தாய் அடித்த சல்யூட் இன்னும் பிரபலமாகிவிட்டது. இதனால், தாயையும் மகனையும் நெட்டிசன்கள் கொண்டாடி வருகின்றனர்.
பேசும் படம் பின்னணி:
ஆகஸ்ட் 15ல் ஜுனகத்தில் நடந்த சுதந்திர தின விழாவில் விஷால் ராபரி தான் பரேட் கமாண்டராக இருந்தார். அப்போது, அவரது தாய் மதுபென் ராபரி பரேடை முடித்துவிட்டு மகனுக்கு ஒரு சல்யூட் வைத்தார். அங்கிருந்த விவரமறிந்தவர்கள் அந்தச் சம்பவத்தை மகிழ்ச்சியுடன் கொண்டாடினர். இத்தகவல் ஊடகங்களில் வெளியாக இது குஜராத் மாநில அரசுப் பணியாளர்கள் தேர்வாணையத்தின் கவனத்துக்கும் சென்றது. தேர்வாணையம் அந்தப் புகைப்படத்தைப் பகிர்ந்து கொண்டாடியுள்ளது.
ஆணையத்தின் தலைவர் தினேஷ் தாஸா தாய் மகனுக்கு சல்யூட் அடிக்கும் அந்த புகைப்படத்தைப் பகிர்ந்து, "ஏஎஸ்ஐயாக இருக்கும் ஒரு தாய்க்கு தனது மகன் டிஎஸ்பி ஆக உயர்ந்து தன் முன் நிற்க தான் அவருக்கு சல்யூட் அடிக்கும் தருணத்தைவிட மனநிறைவைத் தரும் தருணம் வேறென்ன இருந்துவிட முடியும். அவரின் அந்த சல்யூட்டில் பல ஆண்டுகளாக அவர் காட்டிய அர்ப்பணிப்பும் தாய்மையின் மிடுக்கும் அன்பும் ஒளிர்கிறது. ஜிபிஎஸ்சி (குஜராத் அரசுப் பணியாளர் தேர்வாணையம் இந்தப் புகைப்படத்தைக் கொண்டாடுகிறது" என்று பதிவிட்டுள்ளார்.
மகளுக்கு தந்தை வைத்த சல்யூட்:
இதே போன்றதொரு சம்பவம் அண்மையில் ஆந்திராவிலும் நடந்தது.
மகள் டிஎஸ்பி அந்தஸ்தில் இருக்கும்போது, காவல் ஆய்வாளர் அந்தஸ்தில் இருக்கும் தந்தை ஷியாம் சுந்தர் கண்ணீர் மல்க, மனதில் பெருமையுடன், புன்னகையுடன் சல்யூட் செய்த சம்பவம் அனைவரையும் நெகிழ்ச்சியில் ஆழ்த்தியது. சல்யூட் அடித்து தந்தை அளித்த வரவேற்பை டிஸ்பி பிரசாந்தி புன்னகையுடன் ஏற்றுக்கொண்டார்.