பஞ்சாபில் தந்தையே மகள்கள் மீது பெட்ரோலை ஊற்றி தீ வைத்த கொடூரமான சம்பவம் நடந்துள்ளது.
பஞ்சாப் மாநிலம் ஹோஷியார்பூர் மாவட்டத்தில் உள்ளது பெர்ரிங் கிராமம். இந்த கிராமத்தைச் சேர்ந்தவர் வித்யா ராம். இவர் தனது மனைவியை எரியும் விறகு கொண்டு தாக்கியுள்ளார். அத்துடன் இரண்டு மகள்கள் மீதும் பெட்ரோலை தெளித்து பற்ற வைத்துள்ளார். இதில் சிறுமிகள் பலத்த காயமடைந்தனர். ஒரு சிறுமிக்கு வயது 16 இன்னொரு சிறுமிக்கு வயது 10. இரண்டு சிறுமிகளும் வீட்டிலிருந்து அலறிக் கொண்டு வெளியே ஓடிவர அக்கம்பக்கத்தினர் தீயை அணைத்துள்ளனர். இரண்டு சிறுமிகளும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட காயம் தீவிரமாக இருப்பதால் மேல் சிகிச்சைக்காக இருவரும் சண்டிகர் PGIMER மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.
பெண்களுக்கு எதிரான குற்றங்கள்:
நாடு முழுவதும் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் தொடர்பாக கடந்த 2021-ம் ஆண்டில் 4.28 லட்சம் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இது, 2020-ம் ஆண்டைக் காட்டிலும் 15.3% அதிகம் ஆகும். கரோனா பேரிடர் காரணமாக பொதுமுடக்கம் அமலில் இருந்த 2020-ல் 3.71 லட்சம் வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. இது, 2019-ல் பதிவான 4.05 லட்சம் வழக்குகளைவிட 8.3% குறைவாகும்.
கடந்த 2021-ல் இந்திய தண்டனைச் சட்டத்தின் கீழ் பெண்களுக்கு எதிராக பதிவு செய்யப்பட்ட குற்ற வழக்குகளில், கணவரால் அல்லது உறவினர்களால் கொடுமைப்படுத்தப்பட்ட வழக்குகளின் பங்கு 31.8% ஆக (1.36 லட்சம்வழக்குகள்) இருந்தது. இது, முந்தைய 2020 உடன் ஒப்பிடுகையில் 2% அதிகம்.
கணவர் அல்லது நெருங்கிய சொந்தங்களால் பெண்கள் கொடுமைப்படுத்தப்பட்டது தொடர்பாக பதிவு செய்யப்பட்ட வழக்குகளின் பங்கு 2020-ல் 30 சதவீதம் ஆகவும், 2019-ல் 30.9% ஆகவும் இருந்தன.
பாலியல் வன்கொடுமை:
தேசிய குற்ற ஆவணக் காப்பகம் வெளியிட்ட முந்தைய புள்ளிவிவரங்கள் நம் நாட்டில் பெண்களின் பாதுகாப்பு நிலையை படம்போட்டுக் காட்டுவதாக அமைந்தது. அந்த அறிக்கையின்படி, 2021-ல் பெண்களை குறிவைத்து தாக்கப்பட்டது தொடர்பான வழக்குகளின் பங்கு 20.8% ஆகவும், அதைத்தொடர்ந்து கடத்தல் (17.6%), பாலியல் வன்முறை (7.4%) ஆகிய பிரிவுகளில் பதியப்பட்ட வழக்குகளும் கணிசமான அளவில் இருந்தன.
2020-ல் பதிவு செய்யப்பட்ட மொத்த வழக்குகளில் பாலியல் வன்முறை தொடர்பான வழக்குகளின் பங்கு 7.5 சதவீதம் ஆகவும், 2019-ல் இது 7.9% ஆகவும் இருந்தன.
எண்ணிக்கைஅடிப்படையில் கடந்த 2021-ல் பாலியல் வன்கொடுமை தொடர்பாக 31,677 வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. இதில், பாதிக்கப்பட்ட பெண்களில் 18 வயதுக்கும் குறைவானவர்கள் 3,038 பேரும். 6-12 வயது வரையில் 183 பேரும், 6 வயதுக்கும் குறைவானோர் 53 பேரும் அடங்குவர்.
இப்படி பெண்களுக்கு எதிரான குற்றங்கள் ஆண்டுதோறும் அதிகரித்து வருகிறது. அதுவும் உத்தரப்பிரதேசம், டெல்லி, பஞ்சாப் என வடக்கே உள்ள பல மாநிலங்களிலும் பெண்கள் பாதுகாப்பு கேள்விக்குறியாகவே இருக்கிறது என்பது கவலை கொள்ளத்தக்கது.