பஞ்சாப் மாநிலத்தின் சுகாதாரத்துறை அமைச்சர் மீது ஊழல் புகார் எழுந்ததை தொடர்ந்து, அவரை அம்மாநில முதல்வர் பகவந்த் மான் பதவி நீக்கம் செய்துள்ளார்.
பஞ்சாப் மாநிலத்தின் சுகாதாரத்துறை அமைச்சராக பணியாற்றி வந்தவர் விஜய் சிங்லா. இவர் அரசுக்கு சொந்தமான ஒப்பந்தங்களில் ஒரு சதவீதம் கமிஷன் தரவேண்டுமென அதிகாரிகளை நிர்பந்தித்ததாக புகார் எழுந்தது. இந்த புகார் தொடர்பான உறுதியான ஆதாரம் சிக்கியதாக சொல்லப்படும் நிலையில், பஞ்சாப் முதல்வர் முதல்வர் பகவந்த் மான் அவரை பதவி நீக்கம் செய்து உத்தரவிட்டுள்ளார். கண்ணீரே வந்துவிட்டது என இந்நிகழ்வு குறித்து ஆம் ஆத்மி தலைவர் அரவிந்த் கெஜ்ரிவால் பாராட்டியுள்ளார்.
வீடியோ வெளியிட்ட முதல்வர்
இது தொடர்பாக வீடியோ வெளியிட்ட முதல்வர் பகவந்த் மான், “ஒரு பைசா ஊழலைக் கூட எங்களால் பொறுத்துக்கொள்ள முடியாது. காரணம் ஆம் ஆத்மி கட்சி ஊழலுக்கு எதிரான நிலைப்பாட்டில் முழுமையாக நிற்கிறது. எங்களது அமைச்சரவையில் உள்ள அமைச்சர் ஒருவர் அரசு ஒப்பந்தங்களில் 1 சதவீத கமிஷன் வாங்கிய விவகாரம் எனக்கு தெரிய வந்தது. அதனைத்தொடர்ந்து அவரை நான் அமைச்சரவையில் இருந்து நீக்கியிருக்கிறேன். இது தொடர்பாக விசாரணை நடத்தவும் உத்தரவிட்டுள்ளேன்.” என்று பேசியுள்ளார்.
இந்த வீடியோவை தனது ட்விட்டர் பக்கத்தில் ஷேர் செய்த டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், “ பெருமையாக இருக்கிறது பகவந்த் மான். உன்னுடைய இந்த நடவடிக்கை என்னுடைய கண்ணில் கண்ணீரை வரவழைத்து விட்டது. இன்று முழு தேசமும் ஆம் ஆத்மியை நினைத்து பெருமிதம் கொள்கிறது” என்று பதிவிட்டுள்ளார்.
ஆம் ஆத்மி கட்சி தலைவர் பேசியது
முன்னதாக, பஞ்சாபில் ஊழலை ஒழிப்பேன் என்று ஆம் ஆத்மி தலைவர் அரவிந்த் கெஜ்ரிவால் உறுதியளித்தார். அந்த உறுதியையெடுத்து பகவந்த் மான் பஞ்சாப்பில் முதல்வராக பதவியேற்றார். அதனைத்தொடர்ந்து பேசிய அரவிந்த் கெஜ்ரிவால் ஆம் ஆத்மி அரசாங்கம் டெல்லியில் ஊழலை ஒழித்துவிட்டது என்றும் தற்போது பஞ்சாப்பின் மாநில முதல்வர் பகவந்த் மான் மற்றும் அமைச்சர்கள் அங்கு நேர்மையான அரசாங்கத்தை நடத்துவார்கள் என கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்