வரவிருக்கும் 2024 நாடாளுமன்றத் தேர்தலை எதிர்கொள்ள காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை காங்கிரஸ் நடத்தவிருக்கும் பாதயாத்திரையை செயல்படுத்த குழுவை அமைத்து காங்கிரஸ் தலைமை உத்தரவிட்டுள்ளது.
உதய்பூர் ஆலோசனைக் கூட்டம்:
2024ம் ஆண்டு வரவிருக்கு நாடாளுமன்றத் தேர்தலில் எப்படியாவது வெற்றிபெற்றாக வேண்டும் என்ற கட்டாயத்தில் இருக்கிறது காங்கிரஸ். தேர்தல் ஆலோசகராக பிரஷாந்த் கிஷோரை காங்கிரஸில் இணைக்கும் முயற்சி தோல்வியில் முடிந்த நிலையில், தேர்தலை எப்படி எதிர்கொள்வது என்பது குறித்து ஆலோசிக்க ராஜஸ்தான் மாநிலம் உதய்பூரில் ‘சிந்தனை அமர்வு’ என்ற பெயரில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இந்த ஆலோசனைக் கூட்டத்தில் காங்கிரஸ் நிர்வாகிகள் பலர் கலந்துகொண்டனர்.
பாரத் ஜோதோ யாத்திரை:
இந்த ஆலோசனைக்கூட்டத்தின் முடிவில் ஒருமித்த கருத்துகளை உடைய கட்சிகளை ஒருங்கிணைக்க, காங்கிரஸ் கட்சியினர், பொதுமக்கள் ஆகியோரை சந்தித்து கட்சிக்கு ஆதரவு திரட்ட காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை 12 மாநிலங்களில் சுமார் 3500 கிலோ மீட்டர் தூரத்திற்கு ‘பாரத் ஜோதோ யாத்திரை’ என்ற பெயரில் பாதயாத்திரை நடத்துவது என்று முடிவு செய்யப்பட்டது. இந்த யாத்திரையானது காந்தியின் பிறந்தநாளான அக்டோபர் 2ம் தேதி தொடங்கும் என்றும் அறிவிக்கப்பட்டது. அதோடு, தேர்தலுக்காக காங்கிரஸ் எடுக்கும் முடிவுகளை செயல்படுத்த குழு அமைக்கப்படும் என்றும் தகவல்கள் வெளியானது.
இந்த நிலையில் தேர்தலை எதிர்கொள்ள, பாதையாத்திரையை செயல்படுத்த, அரசியல் விவகாரக் குழு, பணிக்குழு, யாத்திரை ஒருங்கிணைப்பு குழு ஆகிய மூன்று குழுக்களை அமைத்து காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி இன்று உத்தரவிட்டுள்ளார்.
அரசியல் விவகாரக்குழு:
அரசியல் விவகாரக்குழுவில் ராகுல்காந்தி, மல்லிகார்ஜுன கார்கே, குலாம்நபி ஆசாத், அம்பிகா சோனி, திக்விஜய சிங், ஆனந்த் ஷர்மா, கே.சி.வேணுகோபால் மற்றும் ஜிதேந்திர சிங் ஆகியோரை நியமனம் செய்து உத்தரவிட்டுள்ளது.
2024 தேர்தல் பணிக்குழு:
2024 தேர்தல் பணிக்குழுவில் ப.சிதம்பரம், முகுல் வாஸ்னிக், ஜெய்ராம் ரமேஷ், கே.சி.வேணுகோபால், அஜய் மகேன், ப்ரியங்கா காந்தி, ரந்தீப் சிங் சுர்ஜிவாலா மற்றும் சுனில் கனுகொலு ஆகியோரை நியமனம் செய்துள்ளனர். இந்த பணிக்குழுவில் உள்ளவர்களுக்கு ஒருங்கிணைப்பு, தகவல் மற்றும் ஊடக தொடர்பு, நிதி மற்றும் தேர்தல் மேலாண்மை உள்ளிட்ட பொறுப்புகள் ஒவ்வொருக்கும் வழங்கப்படும். அதே போல உதய்பூரில் எடுக்கப்பட்ட ‘நவ் சங்கல்ப்’ ஆகியவற்றையும் கவனிக்கும் என்று கூறப்பட்டுள்ளது.
“பாரத் ஜோதோ யாத்ரா” ஒருங்கிணைப்புக்குழு:
“பாரத் ஜோதோ யாத்ரா” ஒருங்கிணைப்புக்குழுவில் திக் விஜய் சிங், சச்சின் பைலட், சசி தரூர், ரவ்நீத் சிங் பிட்டு, கே.ஜே.ஜார்ஜ், ஜோதிமணி, ப்ரத்யுத் போர்டோலோய், ஜித்து பட்வாரி, சலீம் அஹமது ஆகியோரை நியமித்து காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி உத்தரவிட்டுள்ளார்.
குழுவில் அதிருப்தி தலைவர்கள்:
காங்கிரஸ் அதிருப்தி குழு என்று அழைக்கப்படும் ஜி 23 குழுவில் உள்ள சசி தரூர், குலாம் நபி ஆசாத், முகுல் வாஸ்னிக், ஆனந்த் ஷர்மா ஆகியோரும் இந்த குழுவில் இடம்பெற்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.