பஞ்சாப் மாநிலத்தில் புதிய முதலமைச்சரை தேர்வு செய்வது தொடர்பாக காங்கிரஸ் கட்சியின் சட்டப்பேரவை உறுப்பினர்கள் கூட்டம் ஒத்திவைக்கப்பட்டது. புதிய முதல்வர் தேர்ந்தேடுப்பதில்,  சட்டமன்ற உறுப்பினர்களிடம் ஒருமித்தக் கருத்து எட்டப்படாத காரணத்தினால் கூட்டம் ஒத்திவைக்கப்பட்டது.      


முன்னதாக, நேற்று மாலை 5 மணிக்கு, பஞ்சாப் காங்கிரஸ் கட்சியின் சட்டப்பேரவை உறுப்பினர்களின் அவசரக் கூட்டத்தை அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி கூட்டியது. இந்தக் கூட்டத்திற்கு முன்பாகவே  அம்ரிந்தர் சிங், தனது பதவியை ராஜினாமா செய்வதாக அறிவித்தார். பதவி விலகல் கடிதத்தை  ஆளுநர் பன்வாரிலால் ப்ரோஹித்திடம் அளித்த பின்பு செய்தியாளர்களைச் சந்தித்த அவர், " நான் தொடர்ச்சியாக அவனமானங்களை சந்தித்து வருகிறேன். மூன்றாவது முறையாக சட்டப்பேரவை உறுப்பினர்கள் கூட்டம் கூட்டப்பட்டுள்ளது. இரண்டு முறை டெல்லியிலும், தற்போது பஞ்சாபிலும். தங்களின் நம்பிக்கைகு உகந்தவர்களை மேலிடம் தேர்வு செய்யட்டும்" என்று தெரிவித்தார்.      




சித்து மீது பாய்ச்சல்: சட்டப்பேரவை உறுப்பினர்களின் அவசரக் கூட்டத்தில் கலந்து கொள்ளாத அவர், தொலைக்காட்சி சேனல் ஒன்றுக்கு பேட்டி அளித்தார். 


இதில், பஞ்சாபின் அடுத்த முதல்வராக, நவ்ஜோத் சிங் சித்து (அ) சுனில் ஜக்கர் ஆகிய இருவரில் யார் தேர்வு செய்யப்படலாம் என்ற கேள்விக்குப் பதிலளித்த அவர்," நான் சித்துவை முதல்வராக ஏற்க மாட்டேன். அவர் திறமையற்றவர். பேரழிவு சக்தியாக இருக்கிறார். அவரால் ஒரு அமைச்சகத்தை கூட திறன்பட கையாள முடியவில்லை. அவர் எப்படி முழு மாநிலத்தையும் நிர்வகிப்பார்? அவரின் திறமைகளை நன்கு மதிப்பிட்ட முறையில் சொல்கிறேன்" என்று தெரிவித்தார்.  


மேலும், அவர் கூறுகையில், "என்னைப்பற்றி யார் என்ன சொன்னார்கள் என்று தெரியவில்லை. நான் டெல்லிக்கு அதிகம் போவதில்லை. ஆனால் சிலர் அடிக்கடி, டெல்லி சென்று வருகின்றனர். ஒன்பதரை ஆண்டுகள் முதல்வராக நான் என் கடமையை செய்துள்ளேன். இது, என்னுடைய பஞ்சாப். எனது மாநில மக்களுக்கு என்னால் முடிந்த அனைத்தையும் செய்துள்ளேன்.  அரசியலில் வாய்ப்புகள் ஒருபோதும் மூடப்படாது" என்று கூறினார்.  




சித்து நியமனம்: பஞ்சாப் மாநில அமைச்சரவையில் இடம்பெற்றிருந்த சித்து, முதல்வருடன் ஏற்பட்ட மோதல் போக்கு காரணமாக கடந்த 2019-ஆம் ஆண்டு தனது பதவியை ராஜினாமா செய்தார். மேலும், தீவிர அரசியலில் இருந்து விலகுவதாகவும் அறிவித்திருந்தார். இந்நிலையில், கடந்த ஜூலை மாதம் சித்துவை பஞ்சாப் மாநில காங்கிரஸ் கமிட்டித்  தலைவராக காங்கிரஸ் மேலிடம் நிர்ணயித்தது.


இதற்கு, கேப்டன் அம்ரிந்தர் சிங் அப்போதே கடும் கண்டனத்தை பதிவு செய்தார். இதுகுறித்து டெல்லி மேலிடத்துக்கு அவர் எழுதிய கடிதத்தில், "சித்துவின் நியமனம் கட்சியின் மூத்த தலைவர்களை நிச்சயம் காயப்படுத்தும். தற்போதைய மாநிலத் தலைவரான சுனில் ஜாகர் இந்து சமயத்தைச் சேர்ந்தவர். அவருக்கு பதிலாக ஜாட் சீக்கியரை (நவ்ஜோத் சித்து) நியமிப்பது இந்து சமூகத்தினரை வருத்தப்படுத்தும். மாநிலளவில் இரண்டு ஜாட் சீக்கியர்கள் தலைமை வகிப்பது (கட்சித் தலைவர் மற்றும் முதல்வர் ) அதிகார சமமின்மையை காட்டுகிறது" என்று தெரிவித்தார். 


பஞ்சாபில் இந்து முதல்வரா?  தற்போதைய நிலவரப்படி, பஞ்சாபின் அடுத்த முதல்வராக, நவ்ஜோத் சிங் சித்து (அ) சுனில் ஜக்கர் (சித்துக்கு முந்தைய மாநில கட்சித் தலைவர்) ஆகிய இருவரில் ஒருவர் நியமிக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதில், சுனில் ஜக்கர் இந்து சமயத்தைச் சார்ந்தவர். எனவே, அவர் நியமிக்கப்பட்டால், பஞ்சாபின் நான்காவது இந்து முதல்வராகவும், 1966 பஞ்சாப் மாநில பிரிப்புக்கு பிந்தைய பஞ்சாபின் முதல் இந்து முதல்வர் என்ற பெருமையையும் பெறுவார். 


1947-ஆம் ஆண்டுக்கு முந்ததைய எல்லைப் பிரிவினைவாதத்தின் காரணமாக, இப்போதைய பஞ்சாப் தனது மூன்றில் இரண்டு பகுதி நிலப்பரப்பையும், பாதிக்கும் அதிகமான மக்கள்தொகையை இழந்தது. இதன் காரணமாக, 1947-ஆம் ஆண்டில் மாநில மக்கள்தொகையில் இந்துக்கள் 61 சதவீதமும், சீக்கியர்கள் 35 சதவீதமாக இருந்தனர். அதன்பின், 1966 பஞ்சாப் மாநிலம் மீண்டும் வரையறை செய்யப்பட்டது.  இன்றைய பஞ்சாப் மாநிலம் 1966-ஆம் ஆண்டு கிழக்கு பஞ்சாப் மாநிலத்தை பிரித்து உருவாக்கப்பட்டது. பஞ்சாபின் அண்டை மாநிலங்களான ஹரியானா மற்றும் இமாச்சல பிரதேசம் ஆகிய மாநிலங்கள் இப்பிரிவின் மூலம் உருவாக்கப்பட்டவையே. 


1966-ல் பஞ்சாப மாநில எல்லைகள் மறுவரை செய்யப்பட்டத்தில் இருந்து சீக்கியர்கள் பெரும்பான்மை சமூகமாக உருவெடுத்தனர். தற்போது, மாநில மக்கள்தொகையில் சீக்கியர்கள் 57.75 சதவீதம் உள்ளனர். இந்துக்கள், பட்டியல் சாதிகள் முறையே 38.49, 31.94 சதவீதமாக உள்ளனர். அதிலிருந்து இதுநாள் வரையில், பஞ்சாப் மாநிலத்தில் சீக்கிய சமூகத்தைச் சேர்ந்தவரே முதல்வராக தேர்ந்தெடுக்கப்பட்டு வருகிறார். இந்த சூழலில், காங்கிரஸ் கட்சி இந்து சமூகத்தைச் சேர்ந்த ஒருவரை முதல்வராக அறிவிக்குமா என்பது கேள்விக்குறியாகவே உள்ளது.      


பஞ்சாப் மாநிலம் அடுத்தாண்டு சட்டப்பேரவைத் தேர்தலை சந்திக்க இருக்கிறது. அங்கு, அகாலி தல், மற்றும் காங்கிரஸ் இடையே கடும் போட்டி நிலவுகிறது. தமிழகத்தைப் போன்றே பஞ்சாபிலும் பாஜக அதிகம் செல்வாக்கு இல்லாத கட்சியாக உள்ளது. நாட்டிலேயே, பஞ்சாபில்தான் பட்டியல் சாதி வகுப்பினரின் எண்ணிக்கை அதிகமாக உள்ளது. பட்டியல் சாதி பிரிவினர்  மற்றும் விவசாயிகளின் ஆதரவு இருந்தாலே 60 முதல் 70% வாக்குகளை பெற முடியும். மத்திய அரசு கொண்டு வந்த வேளாண் சட்டங்களை அகாலி தல், காங்கிரஸ் ஆகிய இரண்டு கட்சிகளுமே எதிர்த்து வருகின்றன.