ஒட்டுமொத்த தேசத்தை உலுக்கி எடுத்த கதுவா 8 வயது சிறுமி பாலியல் வன்முறை வழக்கில் குற்றஞ்சாட்ட ஒருவருக்கு பஞ்சாப் மற்றும் ஹரியானா உயர்நீதிமன்றம் ஜாமின் வழங்கியுள்ளது. 


கடந்த 2018ம் ஆண்டு, ஜம்மு காஷ்மீரில், கதுவா அருகே உள்ள ரசானா கிராமத்தில் 8 வயது சிறுமி ஒருவர் கடத்தப்பட்டு, பாலியல் வன்முறையால் கொலை செய்யப்பட்டார். பாக்கர்வால் எனும் நாடோடி சமூகத்தைச் சேர்ந்த இந்த சிறுமியின் மரணம் ஒட்டுமொத்த தேசத்தையே நிலைகுலைய செய்தது.    


பஞ்சாப் மாநிலம் பதான்கோட் நீதிமன்றம் வழக்கின் முக்கிய குற்றவாளியனா சஞ்சி ராம், தீபக், பர்வேஷ் ஆகிய 3 பேருக்கு ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பளித்தது. மேலும், குற்றவாளிகளிடம் இருந்து கையூட்டம் பெற்று சாட்சிகளை மறைக்க முயன்றதாக குற்றஞ்சாட்டப்பட்ட ஆனந்த தத்தா (சப்- இன்ஸ்பெக்டர்), திலக் ராஜ் (தலைமை கான்ஸ்டபிள் ), சுரேந்தர் வர்மா (சிறப்பு அதிகாரி) ஆகிய  மூன்று காவல்துறை அதிகாரிகளுக்கு ஐந்தாண்டு சிறைத் தண்டனை விதித்திருந்தது. 


இந்நிலையில், சப்- இன்ஸ்பெக்டர் ஆனந்த தத்தாவின் மீதமுள்ள சிறைத் தண்டனை நிறுத்தி வைத்து, பஞ்சாப் மற்றும் ஹரியானா உயர்நீதிமன்ற நீதிபதிகள் ஜாமீன் வழங்கினர். ஏற்கனவே, கடந்த 16ம் தேதி, தலைமை கான்ஸ்டபிள்  திலக் ராஜின் சிறைத் தண்டனையை நிறுத்து வைத்து ஜாமீன் வழங்கப்பட்டது  என்பதும் குறிப்பிடத்தக்கது. 


மெகபூபா முப்தி கருத்து:  நீதிமன்றத்தின் இந்த போக்கை ஜம்மு - காஷ்மீர் முன்னாள் முதல்வர் மெகபூபா முப்தி வன்மையாக கண்டித்துள்ளார். 


இதுகுறித்து, அவர் வெளியிட்ட ட்விட்டர் குறிப்பில், "கதுவா பாலியல் வன்முறை வழக்கில் சான்றுகளை அழிக்க முயன்றதாகக் குற்றஞ்சாட்டப்பட்ட காவல்துறையினருக்கு ஜாமீன் வழங்கப்பட்டு, சிறைத்தண்டனை நிறுத்திவைக்கப்பட்ட சம்பவம் அதிரிச்சியளிக்கிறது. கடத்தப்பட்டு, பாலியல்வன்முறை மற்றும் கொலை செய்யப்பட்ட எட்டு வயது சிறுமிக்கு நீதி மறுக்கப்படும் போது, நீதியின் சக்கரங்கள் முற்றிலும் சரிந்துவிட்டன என்பது தெளிவாகிறது" என்று தெரிவித்தார்.  






 


கதுவா வழக்கு: 


பிணக்கூறாய்வில் அச்சிறுமியின் உயிரற்ற உடலில் குளோனாசிபம் (Clonazepam) இருந்தது கண்டறியப்பட்டது. வன்புணர்வுக்கும் கொலை செய்யப்படுவதற்கும் முன்னர் அச்சிறுமிக்கு மயக்க மருந்து தரப்பட்டிருந்தது கூறாய்வு செய்த மருத்துவர்களால் உறுதி செய்யப்பட்டது. குற்றஞ்சாட்டப்பட்டவர்களில் ஒருவரால் பல நாட்களாக அச்சிறுமி ஒரு வழிபாட்டிடத்தில் அடைத்து வைக்கப்பட்டிருந்தக்கலாமென தடயவியற்சான்றுகள் பரிந்துரைக்கின்றன. வழிபாட்டிடத்தில் கண்டெடுக்கப்பட்ட முடிக்கற்றைகள் அப்பெண்ணின் முடியோடு ஒத்துள்ளதும் கண்டறியப்பட்டது. ஆசிபா பலமுறை பல்வேறு நபர்களால் வன்புணரப் பட்டிருப்பதாகவும் சாகும்வரை கழுத்து நெறிக்கபட்டிருப்பதாகவும், தலையில் கனமான கல்லால் அடிக்கப்பட்டிருப்பதாகவும் தடயவியற்சான்றுகள் கூறுகின்றன 


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடிபில் வீடியோக்களை காண