பஞ்சாப் மாநிலம் குர்தாஸ்பூர் மாவட்டத்தில் அதிர்ச்சி சம்பவம் ஒன்று நடந்துள்ளது. பேயை ஓட்டுவதாக கூறி சாமியார் உள்பட 9 பேர் சேர்ந்து ஒருவரை கொலை செய்ததாக தகவல் வெளியாகியுள்ளது.


பேயை விரட்டுவதாக கூறி சாமியார் செய்த கொலை: குர்தாஸ்பூர் தரிவாலில் உள்ள சிங்புரா கிராமத்தில் வசிப்பவர் சாமுவேல் மாசி. இவர், வலிப்பு நோயால் பாதிக்கப்பட்டு வந்துள்ளார். வலிப்பு வரும்போதெல்லாம் சாமுவேல் அலறி கத்துவது வழக்கம்.


கடந்த புதன் கிழமை, சாமுவேலுக்காக பிரார்த்தனை நடத்துவதற்காக உள்ளூர் பாதிரியார் ஜேக்கப் மாசி என்பவரை அவரது குடும்பத்தினர் தங்கள் வீட்டிற்கு அழைத்து வந்துள்ளனர்.


சாமுவேலுக்கு பேய் பிடித்திருப்பதாக அவரது குடும்பத்தாரிடம் பாதிரியார் கூறியுள்ளார். உடலில் இருக்கும் பிசாசை விரட்டுவதாகக் கூறி பாதிரியார் மேலும் எட்டு பேருடன் சேர்ந்து சாமுவேலை தாக்க தொடங்கினார். இதனால், சாமுவேலுக்கு எதுவும் ஆகாது என அவரது குடும்பத்தாரிடம் பாதிரியார் உறுதி அளித்துள்ளார்.


பாதிரியார் தாக்கியதில் தினக் கூலியான சாமுவேல் படுகாயமடைந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மறுநாள் குடும்பத்தினர் அவரை அடக்கம் செய்தனர். சம்பவம் நடந்த இரண்டு நாட்களுக்குப் பிறகு, சாமுவேலின் தாயும் அவரது மனைவியும் பாதிரியார் மீது புகார் அளித்தனர்.


தொடரும் மூட நம்பிக்கைகள்: கடந்த சனிக்கிழமை, சாமுவேலின் உடல் பிரேதப் பரிசோதனைக்காக தோண்டி எடுக்கப்பட்டது. முழு சோதனையும் மாஜிஸ்திரேட் இந்தர்ஜித் கவுரின் மேற்பார்வையில் நடத்தப்பட்டது. இதுகுறித்து காவல்துறை தரப்பு கூறுகையில், "பாதிரியார் மற்றும் எட்டு பேர் மீது பாரதிய நியாய சன்ஹிதா சட்டம் தொடர்புடைய பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது" என்றார்.


மக்களின் மூட நம்பிக்கை சமூகத்தை பின்னோக்கி அழைத்து செல்கிறது. மக்களிடையே பகுத்தறிவு போகிக்கும் வகையில் புத்தர், ஜோதிராவ் புலே, நாராயண குரு, பெரியார், அம்பேத்கர் போன்ற சமூக சீர்திருத்தவாதிகள் செயல்பட்டாலும் மூட நம்பிக்கை ஒழிந்தபாடில்லை.


மக்களே, தாமாக முன்வந்து இவற்றை நிறுத்தாத வரையில், இம்மாதிரியான செயல்கள் தொடர்ந்து நடந்து கொண்டு இருக்கும்.