பிரபல மார்க்கெட்டிங் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி ஒருவர், எக்ஸ் தளத்தில் வெளியிட்ட பதிவு கடந்த 3 நாட்களாக சர்ச்சையாகி வருகிறது. சமூக வலைதளங்களில் பெரும் விவாதப்பொருளாக மாறியுள்ளது. கடந்த 22ஆம் தேதி, 'பிராமண மரபணு' என்ற கேப்ஷனுடன் தன்னுடைய புகைப்படத்தை வெளியிட்டுள்ளார் அனுராதா திவாரி.


சாதி பெருமை பேசிய பிரபல சிஇஓ: அனுராதா திவாரியின் இந்த பதிவு எக்ஸ் தளத்தில் வைரலாக, அவரை கடுமைாக விமர்சித்து ஒரு சிலர் கருத்துகளை பதிவிட்டனர். குறிப்பிட்ட சாதியின் பெருமை பேசும் விதமாக அவர் பதிவிட்டிருப்பதாக நெட்டிசன்கள் கொந்தளித்தனர்.


இதற்கு பதிலடி தந்த அவர், "எதிர்பார்த்தது போலவே, 'பிராமணர்' என்ற சொல்லைக் குறிப்பிடுவது பல தாழ்ந்த மனிதர்களுக்கு உறுத்தலாக இருக்கிறது. உண்மையான சாதிவெறியர்கள் யார் என்பது இதன்மூலம் தெரிய வருகிறது.


அரசாங்க அமைப்பிலிருந்து UCகளுக்கு (முற்பட்ட சாதி) எதுவும் கிடைப்பதில்லை. இடஒதுக்கீடு இல்லை, இலவசங்கள் இல்லை. நாங்கள் எல்லாவற்றையும் சொந்தமாக சம்பாதிக்கிறோம். எங்கள் பரம்பரையைப் பற்றி பெருமைப்படுவதற்கு எல்லா உரிமையும் உள்ளது. நீங்கள், அதை எதிர்கொண்டுதான் ஆக வேண்டும்" என அனுராதா திவாரி குறிப்பிட்டிருந்தார்.


"பிராமணர் பெருமை பேசுவது தவறா"


சாதி பெருமை பேசிய அவருக்கு கடும் எதிர்ப்பு எழுந்தது. இதற்கு மீண்டும் பதிலடி அளித்த அவர், "தலித்/முஸ்லிம்/பழங்குடியினர் பெருமை பேசுவது சரி. பிராமணர் பெருமை பேசுவது தவறா.


பிராமணர்களாக இருப்பதே குற்றம் போன்ற உணர்வை ஏற்படுத்த ஒரு முழு அமைப்பும் செயல்படுகிறது. இந்தக் கதையாடலை மாற்ற வேண்டிய நேரம். குற்ற உணர்ச்சி இல்லாத பிராமணராக இருங்கள். அதை வெளிப்படையாக காட்டி கொள்ளுங்கள். சமூகநீதிப் போராளிகள் எனப்படுபவர்களுக்கு எரியட்டும்" என பதிவிட்டுள்ளார்.


 






இந்திய சமூகத்தில் சாதியின் அடிப்படையில் பாகுபாடு காட்டப்படுவதாகவும் காலம் காலமாக அனைத்து விதமான பலன்களையும் குறிப்பிட்ட சாதியினர் மட்டுமே அனுபவித்து வருவதாகவும் குற்றச்சாட்டு எழுந்து வருகிறது.


பாகுபாட்டை களையும் விதமாக கொண்டு வரப்பட்ட இடஒதுக்கீட்டின் மீதும் ஒடுக்குமுறைக்கு உள்ளான மக்கள் மீது வன்மத்தை வெளிப்படுத்தும் விதமாக அனுராதா திவாரி கருத்து தெரிவித்து வருவதாக நெட்டிசன்கள் விமர்சித்து வருகின்றனர்.