பஞ்சாப் மாநில சட்டமன்றத் தேர்தலுக்கான பிரச்சாரம் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது.ஒரு பக்கம் காங்கிரஸில் முதலமைச்சர் சன்னி மற்றும் நவ்ஜோத் சிங் சித்து இடையிலான முட்டல் மோதலை ஓரங்கட்டி வைத்துவிட்டு தேர்தலுக்காக மும்முரமாகப் பணியாற்றத் தொடங்கியுள்ளனர். மற்றொரு பக்கம் தனது முதலமைச்சர் வேட்பாளரே யார் எனத் தெரியவில்லை என்றாலும் தேர்தல் வாக்குறுதிகளை ஆம் ஆத்மி கட்சி அள்ளி வீசிக் கொண்டிருக்கிறது. மற்றொரு பக்கம் அகாலிதல் கட்சி சுக்பீர் சிங் பாதலை முதலமைச்சர் வேட்பாளராக அறிவிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதற்கிடையே பஞ்சாப் மாநில தேர்தல் பிரசாரத்துக்காக முகாமிட்டிருக்கும் கெஜ்ரிவால் மக்கள் ஆம் ஆத்மி கட்சியைத் தேர்ந்தெடுத்தால் வீட்டில் உள்ள ஒவ்வொரு மகளிர்க்கும் மாதம் 1000 ரூபாய் வருமானம் வழங்கப்படும் என அறிவித்துள்ளார். ஒரு வீட்டில் மூன்று பெண்கள் இருந்தாலும் அவர்களுக்குத் தனித்தனியாக இந்தத் தொகை வழங்கப்படும் என அவர் அறிவித்துள்ளார். தமிழ்நாடு முதலமைச்சர் முக ஸ்டாலின் கடந்த சட்டமன்றத் தேர்தல் பெண்களுக்கு ஊதியத் தொகை அறிவித்த பாணியில் கெஜ்ரிவால் அறிவித்துள்ளதாக அரசியல் விமர்சகர்கள் கருத்து கூறி வருகின்றனர்.
முன்னதாக, 2022 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் நடைபெற உள்ள பஞ்சாப் சட்டமன்றத் தேர்தலுக்கு முன்னதாக செய்தியாளர்களிடம் பேசும்போது அரவிந்த் கெஜ்ரிவால் கூறுகையில், “காங்கிரஸைச் சேர்ந்த பல எம்.எல்.ஏ.க்கள் எங்களுடன் தொடர்பில் உள்ளனர். ஆனால் அவர்களின் குப்பைகளை நாங்கள் எடுக்க விரும்பவில்லை. அவர்களை சேர்க்க விரும்பினால், இன்று மாலைக்குள் காங்கிரஸின் 25 எம்.எல்.ஏ.க்களும், இரண்டு, மூன்று எம்.பி.க்களும் எங்களிடம் இருப்பார்கள் என்று நான் உறுதியளிக்கிறேன்" என்று கூறினார்.
மேலும், ஆம் ஆத்மி கட்சியில் இருந்து இருவர் மட்டுமே வெளியேறியுள்ளதாகவும், காங்கிரஸில் இருந்து பலர் எங்களுடன் சேர தயாராக உள்ளதாகவும், ஆனால் நாங்கள் மோசமான அரசியலில் ஈடுபட விரும்பவில்லை என்றும் கெஜ்ரிவால் கூறினார்.மேலும், பஞ்சாபின் பொக்கிஷத்தை காங்கிரஸ் கொள்ளையடிப்பதாக கெஜ்ரிவால் குற்றம் சாட்டினார். 5 ஆண்டுகளாக பஞ்சாபை கொள்ளையடித்த காங்கிரஸ், தற்போது மாநில கஜானா காலியாக உள்ளது என்று கூறினார். 5 ஆண்டுகளாக மாநிலத்தில் காங்கிரஸ் ஆட்சி இருந்தபோது கஜானாவை காலி செய்தது யார் என்றும் கேள்வி எழுப்பினார்.
பஞ்சாபில் கல்வி முறையில் தீவிர மாற்றங்களை கொண்டு வருவது குறித்தும் கெஜ்ரிவால் பேசினார். மேலும், ஒப்பந்த ஆசிரியர்களுக்கு நிரந்தரப் பணி வழங்குவது, காலியாக உள்ள அனைத்து ஆசிரியர் பணியிடங்களையும் நிரப்புவது, ஆசிரியர்களுக்கு வெளிநாடுகளில் பயிற்சி அளிப்பது, உரிய நேரத்தில் பதவி உயர்வு, பணமில்லாச் சிகிச்சை அளிப்பது என அரவிந்த் கெஜ்ரிவால் உறுதியளித்தார்.