தமிழ்நாடு:
1. சென்னை உள்ளிட்ட வட தமிழ்நாட்டில் கடந்த சில நாட்களுக்கு முன் பெய்த கனமழை காரணமாக டாஸ்மாக் கடைகளில் மதுபான விற்பனை 40 சதவீதம் வரை குறைந்துள்ளதாக தகவல் கிடைத்துள்ளது. நாள் ஒன்றுக்கு 5 லட்ச ரூபாய் வரை விற்பனையாகும் கடையில், தற்போது ரூ.2 லட்சத்திற்கும் குறைவாகவே விற்பனையாகி வருகிறது.
2. காற்றழுத்த தாழ்வுப்பகுதி காரணமாக நாளை மறுநாள் (நவம்பர் 25) முதல் தமிழகத்தில் மிகக் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை கூறியுள்ளது. மேலும், நவம்பர் 26, 27ல் சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் மாவட்டங்களில் கனமழை முதல் மிகக் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
3. புதுக்கோட்டை அருகே கொலை செய்யப்பட்டு உயிரிழந்த பூமிநாதன் படத்துக்கு நேரில் சென்று அஞ்சலி செலுத்திய பிறகு டிஜிபி சைலேந்திரபாபு, ரோந்துக்கு செல்லும் போலீசார் கையில் துப்பாக்கி வைத்திருக்க வேண்டுமென அறிவுறுத்தி இருக்கிறோம். அதன் அடிப்படையில், தற்பாதுகாப்புக்காக காவல்துறையினர் துப்பாக்கியை பயன்படுத்தலாம் என்றும் தெரிவித்துள்ளார்.
இந்தியா:
1. கர்நாடகாவில் அக்டோபர் 30ம் தேதி ஒரு லாரியில் அமேசான் பொருட்கள் ஏற்றப்பட்டது. அமேசானில் ஆர்டர் செய்யப்பட்ட ரூ.1.64 கோடி மதிப்புள்ள பொருட்கள் அடங்கிய லாரியை அப்படியே ஓட்டிச்சென்ற ஓட்டுநர் மற்றும் உதவியாளரை போலீசார் கைது செய்துள்ளனர்.
2. பஞ்சாப் சட்டமன்ற தேர்தலில் வருவதையொட்டி ஆம் ஆத்மி கட்சியில் இருந்து இருவர் மட்டுமே வெளியேறியுள்ளதாகவும், காங்கிரஸில் இருந்து பலர் எங்களுடன் சேர தயாராக உள்ளதாகவும், ஆனால் நாங்கள் மோசமான அரசியலில் ஈடுபட விரும்பவில்லை என்றும் அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார்.
3. இந்திய சீரம் நிறுவனம் விரைவில் கோவிட் தடுப்பூசிகளைக் `கோவாக்ஸ்’ நாடுகளுக்கு விநியாகிக்கவுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. பிற நாடுகளுக்குக் கோவிட் தடுப்பூசிகளை வழங்குவதற்கு இந்திய அரசிடம் இருந்து ஒப்புதல் பெற்ற பிறகு, இன்று முதல் கோவிஷீல்ட் தடுப்பூசியைப் பிற நாடுகளுக்கு அனுப்புவதாக சீரம் நிறுவனம் தெரிவித்துள்ளது.
குற்றம்:
1. திருவள்ளூர் மாவட்டத்தை அடுத்த வெங்கத்தூர் பகுதியை சேர்ந்த 28 வயதான பாண்டியன் என்பரிடம் அவரது தந்தை மெழுகுவர்த்தி கேட்டுள்ளார். பாலகிருஷ்ணன் மெழுகுவர்த்தியை கொண்டு வருவதில் தாமதம் ஆனதை தொடர்ந்து பாண்டியனைத் திட்டியுள்ளார். இதில் ஆத்திரமடைந்த பாண்டியன் வீட்டில் இருந்த உருட்டு கட்டையை எடுத்து தந்தை பாலகிருஷ்ணனை தலையிலேயே தாக்கியுள்ளார். இதில் பாலகிருஷ்ணன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.
2. 53 வயதான டாக்டரிடம் பெண்ணை பரிசோதனைக்கு அனுப்பி வைத்து மிரட்டி பணம் பறிக்கப்பட்டதாக மும்பையில் இரண்டு பெண்கள் மற்றும் மூன்று ஆண்களை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். டாக்டரிடம் பெண்ணை பரிசோதனைக்கு அனுப்புவது போல் அனுப்பி பணம் பறித்ததாக தகவல் கிடைத்துள்ளது.
சினிமா:
1. கொரோனா தொற்று கண்டறியப்பட்ட நிலையில் பிக் பாஸ் நிகழ்ச்சியிலிருந்து நடிகர் கமல்ஹாசன் விலக இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
2. ஜெய்பீம் படத்திற்கு எதிராக நடிகர் சூர்யா, நடிகை ஜோதிகா உள்ளிட்ட படக்குழுவினர் மீது வன்னியர் சங்கத்தினர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்துள்ளனர்.
விளையாட்டு:
1. தொடை பகுதியில் ஏற்பட்டுள்ள காயம் காரணமாக நியூசிலாந்து டெஸ்ட் தொடரில் இருந்து கே.எல் ராகுல் விலகியுள்ளதாக பிசிசிஐ தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ராகுலுக்கு பதிலாக சூர்யகுமார் யாதவ் அணியில் இடம்பெற்றுள்ளார்.
2.டெல்லி கேபிட்டல்ஸ் அணியிலிருந்து தானும், ஷ்ரேயாஸ் ஐயரும் ஒதுக்கப்படுவதாக அஸ்வின் பகீர் குற்றசாட்டு ஒன்றை முன்வைத்துள்ளார்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்