பஞ்சாப் முதலமைச்சர் பகவத் மானின் திருமணம் சண்டிகரில்  நாளை நடைபெறுகிறது. எளிமையாக நடைபெறும் இத்திருமணத்தில் டெல்லி முதலமைச்சரும் ஆம் ஆத்மி கட்சித் தலைவருமான அரவிந்த் கெஜ்ரிவால் கலந்துகொள்கிறார். 


முதல்வருக்கு இரண்டாம் திருமணம்:


பஞ்சாப் தேர்தலில் வென்று சமீபத்தில் அம்மாநிலத்தின் முதலமைச்சராகப் பதவியேற்றுக்கொண்டார் 48 வயதான பகவத் மான். இவர் மருத்துவர் குருப்ரீத் கவுர் என்பவரை திருமணம் செய்துகொள்கிறார். பகவத் மன்னிற்கு ஏற்கனவே திருமணமாகி இந்தர்ப்ரீத் கவுர் என்ற மனைவியும் இரண்டு குழந்தைகளும் உள்ளனர். இவர்களுக்கு கடந்த 6 ஆண்டுகளுக்கு முன்பே விவாகரத்து நடைபெற்ற நிலையில், அவரது முன்னாள் மனைவி மற்றும் இரண்டு குழந்தைகளும் அமெரிக்காவில் வசித்து வருகின்றனர். இவர்கள் அனைவரும், பகவத் மானின் பதவியேற்பு விழாவிற்கு வருகை தந்திருந்தனர்.




யார் இந்த குருப்ரீத் கவுர்?


இந்த நிலையில், தனியார் அரங்கில் நாளை நடைபெறும் திருமணவிழாவில் குருப்ரீத் கவுரை கரம்பிடிக்கிறார், முதலமைச்சர் பகவத் மான் என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது திருமணம் செய்யப்போகும் டாக்டர் குருப்ரீத் கவுர் பற்றிய முழுமையான தகவல்கள் ஏதும் வெளியாகவில்லை. எனினும், இவர் பகவத் மானின் குடும்ப நண்பர் என்றும், பகவத் மானின் வீட்டிற்கு அடிக்கடி வந்து செல்லக்கூடியவர் கூறப்படுகிறது. பகவத் மான் ப்ரீத்திற்கு விவாகரத்தாகி 6 ஆண்டுகள் ஆகிவிட்ட நிலையில் அவருக்கு மற்றொரு திருமணம் செய்து வைக்க வேண்டும் என்று வலியுறுத்தி வந்த பகவத் மானின் தாய் மற்றும் சகோதரி இருவரும், எல்லோருக்கும் நன்றாகத் தெரிந்த குருப்ரீத் கவுர், பகவத் மானுக்கு சரியான பொருத்தமாக இருப்பார் என்று அவரை திருமணம் செய்து வைக்கின்றனர்.




கெஜ்ரிவாலுக்கு சிறப்பு அழைப்பு:


சண்டிகரில் நாளை ஜூலை 7ம் தேதி நடைபெறும் இத்திருமணத்திற்கு பகவத் மான் மற்றும் குருப்ரீத் கவுரின் நெருங்கிய உறவினர்களுக்கு மட்டும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இந்த திருமண விழாவில் அரவிந்த் கெஜ்ரிவால் உள்ளிட்ட பலர் கலந்துகொள்கின்றனர்.


பகவத் மான் காமெடியனாக நடித்து வந்த நிலையில் அரசியலிலும் தன்னை ஈடுபடுத்திக்கொண்டார். பஞ்சாபின் சங்ரூர் தொகுதியின் மக்களவை உறுப்பினராக இரண்டு முறை தேர்ந்தெடுக்கப்பட்ட அவர், கடந்த பஞ்சாப் சட்டமன்றத் தேர்தலில் வெற்றிபெற்றதையடுத்து பஞ்சாபின் முதலமைச்சராக ஆம் ஆத்மி கட்சித் தலைமையால் அறிவிக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.