தமிழ்நாட்டைச் சேர்ந்த ராணுவ வீரர்கள் இருவர் உள்பட 4 ராணுவ வீரர்கள் பஞ்சாப்பில் உயிரிழந்த சம்பவத்தில் திடீர் திருப்பம் ஏற்பட்டுள்ளது. சக ராணுவ வீரர்கள் தனிப்பட்ட காரணங்களுக்காக இந்த 4 ராணுவ வீரரர்களையும் சுட்டுக் கொல்லப்பட்ட அதிர்ச்சி தகவல் தெரிய வந்துள்ளது.


மேலும் இச்சம்பவம் தொடர்பாக தேசாய் மோகன் எனும் ராணுவ வீரரைக் கைது செய்து ராணுவ உயர் அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


பஞ்சாப் மாநிலம் பதிண்டா பகுதியில் கடந்த ஏப்ரல் 13ஆம் தேதி நடைபெற்ற தாக்குதலில் 4 ராணுவ வீரர்கள் உயிரிழந்தனர்.


நாட்டின் மிகப்பெரிய ராணுவ முகாமான பதிண்டா ராணுவ முகாமில் இந்தத் தாக்குதல் நடைபெற்ற நிலையில், இவர்களில் தேனி மாவட்டம்  மூணாண்டிபட்டி பகுதியை சேர்ந்த லோகேஷ்குமார்  என்பவரும்,  சேலம் மாவட்டம் பனங்காடு பகுதியைச் சேர்ந்த கமலேஷ் எனும் ராணுவ வீரரும் உயிரிழந்தனர்.


ஏப்ரல் 13ஆம் தேதி அடையாளம் தெரியாத நபர்களால் இந்தத் துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டது. தொடர்ந்து அதிரடிப்படையினர் ராணுவ முகாமை முழுமையாக சுற்றி வளைத்த நிலையில் அடையாளம் தெரியாத 2 நபர்கள் மீது வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொள்ளப்பட்டு வந்தது.


தொடர்ந்து, ராணுவ முகாமில் தீவிரவாத தாக்குதல் எதுவும் நடைபெறவில்லை என்றும், சில நாட்களுக்கு முன்னதாக ராணுவ முகாமில் ஒரு இன்சாஸ் துப்பாக்கியும் 28 குண்டுகளும் மாயமானதாகவும் தெரிவிக்கப்பட்டது. 


இந்நிலையில்,  மாயமான இன்சாஸ் துப்பாக்கியைக் கொண்டு பீரங்கி படை பிரிவை சேர்ந்த தேசாய் மோகன் கொலை செய்தார் என்பது விசாரணையில் தெரிய வந்துள்ளது.  “தனிப்பட்ட காரணங்களுக்காகவே இந்தக் கொலை நடந்தது. கடந்த ஏப்ரல் 9ஆம் தேதி குண்டு நிரப்பபட்ட துப்பாக்கிகளை திருடி, ஏப்ரல் 12ம் தேதி பணியில் இருந்தபோது, முதல் மாடிக்கு எடுத்து சென்று 4 ராணுவ வீரர்களும் தூங்கி கொண்டிருந்தபோது சுட்டேன். பின்னர் அந்த் துப்பாக்கியை கழிவுநீர் தொட்டியில் வீசினேன்” என்று தேசாய் மோகன் தெரிவித்துள்ளார்.


தேசாய் மோகன் முன்னதாகக் கைது செய்யப்பட்டு, அவரிடம் விசாரணை நடைபெற்று வருவதாகக் கூறப்பட்டுள்ளது. இதுபோன்ற ஒழுக்கக்கேடான செயல்களை ராணுவம் பொறுத்துக் கொள்ளாது என்றும், குற்றவாளிகள் தண்டிக்கப்படுவதை உறுதி செய்வதில் ராணுவம் உறுதியாக இருப்பதாகவும் இந்திய ராணுவம்  முன்னதாக அறிக்கையில் தெரிவித்துள்ளது. 


இந்த வழக்கு தொடர்பாக விசாரணைக்கு தலைமை தாங்கிய காவல் கண்காணிப்பாளர் அஜய் காந்தி, இந்தக் குற்றம் தொடர்பாக அனைத்து கோணங்களிலும் விசாரிக்கப்பட்டு வருவதாகக் கூறினார். அப்போதே அவர் இந்தக் கொலைகளில் பயங்கரவாத கோணம் இதுவும் இல்லை எனவும் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.