ஆந்திராவின் முதலமைச்சராக பொறுப்பு வகிப்பவர் ஒய்.எஸ். ஜெகன்மோகன் ரெட்டி. இவரது தந்தை உயிரிழந்த ஒய்.எஸ். ராஜசேகர ரெட்டி. இவரும் ஆந்திராவின் முதலமைச்சராக பொறுப்பு வகித்தவர். இவரது சகோதரர் ஒய்.எஸ்.விவேகானந்த ரெட்டி, ஒய்.எஸ்.பாஸ்கர ரெட்டி.


முதலமைச்சர் சித்தப்பா கொலை:


கடந்த 2019ம் ஆண்டு மார்ச் 15-ந் தேதி ஒய்.எஸ்.விவேகானந்த ரெட்டி கடப்பா மாவடத்தில் உள்ள புலிவேந்துலாவில் உள்ள அவரது இல்லத்தில் கத்தியால் குத்தப்பட்டு கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்டார். இந்த கொலை சம்பவம் அப்போது பெரும் பரபரப்பை ஆந்திரா முழுவதும் ஏற்படுத்தியது.


இந்த நிலையில், இந்த கொலை சம்பவத்தில் கடப்பா தொகுதியின் எம்.பி. அவினாஷ் ரெட்டியின் தந்தையும், ஆந்திர முதலமைச்சர் ஜெகன்மோகன் ரெட்டியின் சித்தப்பா பாஸ்கர் ரெட்டிக்கு தொடர்பு இருப்பதாக விசாரணையில் தெரியவந்தது. இந்த கொலை வழக்கை முதலில் ஆந்திர காவல்துறையிலன் சிறப்பு புலனாய்வுக்குழு விசாரணை மேற்கொண்டது. இதையடுத்து, கடந்த 2020ம் ஆண்டு இந்த வழக்கு சி.பி.ஐ. வசம் ஒப்படைக்கப்பட்டது. இந்த வழக்கில் கடந்த 2021ம் ஆண்டு அக்டோபர் 26-ந் தேதி சி.பி.ஐ. குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தது.


ஜெகன்மோகன் சித்தப்பா கைது:


இந்த வழக்கு இறுதிக்கட்டத்தை எட்டிய நிலையில், கடந்த வெள்ளிக்கிழமை கடப்பா எம்.பி. அவினாஷ் ரெட்டியின் உதவியாளர் உதய் ரெட்டியை சி.பி.ஐ. கைது செய்தனர். இந்த நிலையில், பாஸ்கர் ரெட்டி எப்போது வேண்டுமானாலும் கைது செய்யப்படுவார் என்று எதிர்பார்க்கப்பட்ட வேளையில் கடப்பா மாவட்டத்தில் புலிவேண்டுலா நகரத்தில் உள்ள அவரது வீட்டில் வைத்து நேற்று சி.பி.ஐ. போலீசாரால் கைது செய்யப்பட்டார்.


அவரை சி.பி.ஐ. போலீசார் ஹைதரபாத்திற்கு அழைத்துச் சென்று மாஜிஸ்திரேட் முன்பு ஆஜர்படுத்தினர். பின்னர், அவர் 14 நாட்கள் காவலில் விசாரணைக்கு எடுக்கப்பட்டுள்ளார். தற்போது, பாஸ்கர் ரெட்டி சஞ்சல்குடா மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அவருக்கு உஸ்மானியா பொது மருத்துவமனையில் மருத்துவ பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.


பெரும் பரபரப்பு:


பாஸ்கர் ரெட்டி கைது செய்யப்பட்ட சம்பவம் கடப்பா முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது, அவரை சி.பி.ஐ. கைது செய்து அழைத்துச் சென்றபோது பாஸ்கர் ரெட்டி ஆதரவாளர்களும், எம்.பி. அவினாஷ் ரெட்டி ஆதரவாளர்களும் திரளாக குவிந்தனர். அவர்கள் சி.பி.ஐ.க்கு எதிராக கோஷங்களை எழுப்பினர்.


கடந்த 2019ம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலில் கடப்பா தொகுதியில் காங்கிரஸ் எம்.பி.யாக போட்டியிட அவினாஷ் ரெட்டிக்கு காங்கிரஸ் சார்பில் வாய்ப்பு அளிக்கப்பட்டது. அதற்கு விவேகானந்த ரெட்டி எதிர்ப்பு தெரிவித்ததாகவும், முன்னாள் முதலமைச்சர் ராஜசேகர ரெட்டி மனைவி விஜயம்மா அல்லது அவரது மகள் ஷர்மிளாவுக்கு சீட்டு தர வேண்டும் என்று விவேகானந்தர் ரெட்டி கூறிய காரணத்தாலே அவர் கொலை செய்யப்பட்டார் என்றும் தகவல்கள் வெளியாகியது என்பது குறிப்பிடத்தக்கது. ஆந்திர முதலமைச்சரின் சித்தப்பா அவருடைய மற்றொரு சித்தப்பா கொலை வழக்கில் கைது செய்யப்பட்டிருப்பது ஆந்திராவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


மேலும் படிக்க: Crime: கார் பேனட்டில் தொங்கிய போக்குவரத்து காவலர்..! 19 கி.மீ. தொலைவிற்கு இழுத்துச்சென்ற இளைஞர்..! நடந்தது என்ன?


மேலும் படிக்க: உச்சக்கட்ட பதற்றம்... அத்திக் அகமது கொலை வழக்கை விசாரிக்க விசாரணை ஆணையம்... அடுத்து என்ன?