சமீப காலமாகவே, கொள்ளை சம்பவங்கள் அதிகரித்த வண்ணம் இருக்கிறது. நாளுக்கு நாள் குற்ற செயல்கள் அதிகரித்து வருவது மக்களிடையே அச்ச உணர்வை அதிகரிக்க செய்துள்ளது. அந்த வகையில், திருவண்ணாமலை ஏடிஎம் கொள்ளை சம்பவம் நாடு முழுவதும் அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தியுள்ளது.
திருவண்ணாமலை கொள்ளை:
திருவண்ணாமலை நகரின் முக்கிய பகுதியில் இருந்து 4 கிலோ மீட்டர் தொலைவில் மாரியம்மன் கோவில் தெருவில் அமைந்துள்ள ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா வங்கியின் ஏ.டி.எம். மையத்தில் 19 லட்சத்து 50 ஆயிரம் ரூபாயும் திருவண்ணாமலை எல்லைக்கு உட்பட்ட 5 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள தேனிமலை ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா வங்கியின் ஏ.டி.எம். மையத்தில் இருந்து 32 லட்சம் ரூபாயும் கொள்ளை அடிக்கப்பட்டது.
இதே போல திருவண்ணாமலை நகருக்கு வெளியே 22 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள கலசபாக்கத்தில் உள்ள ஒன்இந்தியா ஏடிஎம் மையத்தில் 3 லட்சம் ரூபாயும் 35 கிலோ மீட்டர் தொலைவில் போளூரில் உள்ள எஸ்பிஐ ஏடிஎம் மையத்தில் 18 லட்சம் ரூபாயும் கொள்ளை அடிக்கப்பட்டது.
வட மாநில கும்பல்:
இந்த கொள்ளை சம்பவத்தில் ஹரியானா மாநிலத்தை சேர்ந்தவர்கள் ஈடுபட்டது உறுதி செய்யப்பட்டது. இவர்கள் கோலார் பகுதியில் உள்ள தங்கும் விடுதியில் தங்கி இருந்துள்ளனர்.
இந்த கொள்ளை சம்பவத்தில் இருந்து தப்பித்துச் சென்ற 6 பேரை தனிப்படை போலீசார் குஜராத்தில் மடக்கி பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர். அதே வேளையில் ஹரியானாவிற்கு விமான மூலம் தப்பித்துச் சென்ற 2 கொள்ளையர்களை பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
பஞ்சாப் நேஷனல் வங்கியில் கொள்ளை:
இந்த கொள்ளை சம்பவம் ஏற்படுத்திய பதற்றம் அடங்குவதற்கு முன்னதாகவே பஞ்சாபில் உள்ள ஒரு வங்கியில் கொள்ளை நடந்துள்ளது. இது தொடர்பான சிசிடிவி காட்சி வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பஞ்சாப் அமிர்தசரஸில் உள்ள பஞ்சாப் நேஷனல் வங்கியில் இன்று நுழைந்த ஆயுதம் ஏந்திய நபர் அங்கிருந்து 22 லட்சம் ரூபாயை கொள்ளையடித்துள்ளார். வெளியான சிசிடிவி வீடியோவில், முகத்தை மூடிய ஆயுதம் ஏந்திய நபர் ஒருவர் காசாளரிடம் கைத்துப்பாக்கியை காட்டி கொள்ளை அடிப்பது பதிவாகியுள்ளது.
இந்த கொள்ளை சம்பவம் குறித்து காவல்துறை தரப்பு கூறுகையில், "அவரது கூட்டாளி ஒரு ஸ்கூட்டரில் வெளியே காத்திருந்தார். சந்தேக நபர்களை அடையாளம் காணும் முயற்சியில் போலிஸார் ஈடுபட்டுள்ளனர். அடுத்தக்கட்ட விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது"