கடந்த 2002ஆம் ஆண்டு, குஜராத்தில் நடந்த கலவரத்தை மையப்படுத்தி பிபிசி வெளியிட்டுள்ள ஆவணப்படம் உலகம் முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி வருகிறது. இதையடுத்து, சர்ச்சையை ஏற்படுத்திய பிபிசி ஆவணப்படத்திற்கு அவசர கால அதிகாரங்களை பயன்படுத்தி மத்திய அரசு இந்தியாவில் தடை விதித்தது. 


இந்த பிரச்னை பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், டெல்லி மற்றும் மும்பையில் உள்ள பிபிசி அலுவலகங்களில் வருமான வரித்துறை திடீரென ஆய்வு மேற்கொண்டது. பிப்ரவரி 14ஆம் தேதி தொடங்கப்பட்ட ஆய்வு கடந்த மூன்று நாள்களாக தொடர்ந்து வருகிறது.


ஆவணங்களை சேகரிக்கும் வருமான வரித்துறை: 


வருமான வரித்துறை ஆய்வு மேற்கொண்டதில் இருந்து பிபிசி டெல்லி அலுவலகத்தில் பணிபுரிந்து வரும் 10 மூத்த ஊழியர்கள் வீட்டிற்கே செல்லவில்லை எனக் கூறப்படுகிறது. ஊழியர்களிடம் இருந்து பிபிசி நிறுவனத்தின் நிதிநிலை தொடர்பான தகவல்கள் மற்றும் ஆவணங்களை வருமான வரித்துறை அதிகாரிகள் சேகரித்து வருகின்றனர்.


இதுகுறித்து டெல்லி அலுவலகத்தில் பணிபுரிந்து வரும் பிபிசி ஊழியர் கூறுகையில், "செய்திகளை எப்போதும் போல ஒளிபரப்பு செய்து வருகிறோம். பல ஊழியர்கள் வீட்டில் இருந்து பணி புரிந்து வருகின்றனர்" என்றார்.


நடத்தப்பட்ட வரும் ஆய்வு குறித்து வருமான வரித்துறை அதிகாரி பேசுகையில், "டெல்லி மற்றும் மும்பையில் உள்ள பிபிசி அலுவலகங்களில் செவ்வாய்க்கிழமை காலை 11:30 மணியளவில் தொடங்கிய இந்த ஆய்வு தற்போது 45 மணி நேரத்திற்கும் மேலாக நடந்து வருகிறது" என்றார்.


இந்த ஆய்வு இன்னும் சிறிது நேரம் நீடிக்கலாம் என்றும் ஆய்வை எப்போது முடிக்க வேண்டும் என்ற முடிவை ஆய்வில் ஈடுபட்டுள்ள அதிகாரிகளே எடுப்பர் என வருமான வரித்துறை வட்டாரங்கள் நேற்று தெரிவித்தன. 


சர்வதேச வரிவிதிப்பு மற்றும் பன்னாட்டு நிறுவனமாக உள்ள பிபிசியில் நிதி எப்படி பரிமாற்றம் செய்யப்படுகிறது என்பது குறித்து விசாரணை செய்ய வருமான வரித்துறை அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர் என கூறப்படுகிறது.


நிதி பரிவர்த்தனைகள், நிறுவனத்தின் கட்டமைப்பு மற்றும் நிறுவனத்தைப் பற்றிய பிற விவரங்கள் மற்றும் ஆதாரங்களை சேகரிக்கும் பணியின் ஒரு பகுதியாக மின்னணு சாதனங்களிலிருந்து தரவை நகலெடுத்து வருகின்றனர் வருமான வரித்துறை அதிகாரிகள்.


அரசியல் பழிவாங்கும் செயல்:


பிபிசி அலுவலகத்தில் வருமான வரித்துறை ஆய்வு மேற்கொண்டு வருவதற்கு எதிர்கட்சியினர் கண்டனம் தெரிவித்துள்ளனர். பிரதமர் மோடி தொடர்பான ஆவணப்படம் வெளியிட்டதற்கு அரசியல் பழிவாங்கும் செயலாக ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வருகிறது என விமர்சனம் மேற்கொண்டுள்ளனர்.


ஆய்வு குறித்து வருமான வரித்துறை அதிகாரப்பூர்வமாக அறிக்கை வெளியிடவில்லை. அதிகாரிகளிடம் முழு ஒத்துழைப்பு அளிக்கப்பட்டதாக பிபிசி தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


கடந்த வாரம், இந்தியாவில் பிபிசி ஆவணப்படத்திற்கு முற்றிலமாக தடை விதிக்க வேண்டும் எனக் கோரி உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இதை, உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்தது குறிப்பிடத்தக்கது.