புனேவில் தனியார் அலுவலகத்தின் பார்க்கிங்கில் வைத்து இளம்பெண் ஒருவர் கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பொய் சொல்லி பணம் பெற்றதாகவும் பின்னர், வாங்கிய பணத்தை திருப்பி தர மறுத்த நிலையில், அந்த பெண்ணை பட்டப்பகலில் வைத்து சக ஊழியரே கொலை செய்திருக்கிறார்.
மகாராஷ்டிரா மாநிலம் புனேவில் இளம்பெண் ஒருவரை அவருடன் வேலை செய்து வந்த சக ஊழியரே கொலை செய்துள்ளார். எரவாடாவில் WNS குளோபல் எனும் BPO நிறுவனத்தில் கணக்காளராக பணிபுரிந்து வருபவர் கிருஷ்ணா கனோஜா. இவருக்கு வயது 30.
புனேவில் பட்டப்பகலில் கொடூரம்:
இவரது சக ஊழியரான சுபதா கோதாரே (28 வயது), தனது தந்தைக்கு உடல்நிலை சரியில்லாமல் இருப்பதாகவும் அவரது சிகிச்சைக்கு பணம் தேவைப்படுவதாகவும் கூறி, கிருஷ்ணாவிடம் பலமுறை கடன் வாங்கினார். கொடுத்த பணத்தை கிருஷ்ணா திரும்பக் கேட்டபோது, சுபதா தனது தந்தையின் நிலையைக் காரணம் காட்டி பணத்தை திருப்பி தர மறுத்துவிட்டார்.
சுபதா சொல்வது உண்மையா என தெரிந்து கொள்ள அவரது சொந்த ஊருக்கு சென்றுள்ளார் கிருஷ்ணா. அங்கு, அவரது தந்தை நலமாக இருப்பதையும், உடல்நலப் பிரச்சினைகள் எதுவும் இல்லை என்பதையும் அவர் கண்டறிந்தார்.
செவ்வாய்கிழமை மாலை 6 மணியளவில், சுபதாவை அவர்களது அலுவலகத்தின் வாகன நிறுத்துமிடத்திற்கு அழைத்து அவரிடம் பணத்தைத் திரும்பக் கேட்டுள்ளார் கிருஷ்ணா. அதற்கும் சுபதா மறுத்ததால் வாக்குவாதம் ஏற்பட்டது. இதில், சுபதாவை அவர் கத்தியால் சரமாரியாக வெட்டினார்.
வேடிக்கை பார்த்த மக்கள்:
வாகன நிறுத்துமிடத்தில் இருந்த பலர் சுபதா தாக்குவதைக் கண்டனர். ஆனால், அவரைத் தடுக்க முயற்சி செய்யவில்லை. அவர்களில் சிலர் இந்த செயலை வீடியோவில் பதிவு செய்தனர். கடும் காயம் அடைந்த அந்தப் பெண் தரையில் விழுந்த பிறகுதான், அங்கிருந்த மக்கள் கிருஷ்ணாவை சூழ்ந்துகொண்டு தாக்கினர்.
இதுகுறித்து காவல்துறை அதிகாரி கூறுகையில், "முழங்கையில் பலத்த காயம் அடைந்த சுபதா மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். செவ்வாய்க்கிழமை இரவு 9 மணியளவில் அவர் இறந்துவிட்டதாக அறிவிக்கப்பட்டது. வழக்கு பதிவு செய்து கிருஷ்ணா கைது செய்யப்பட்டுள்ளார்" என்றார்.
இதையும் படிக்க: Ajithkumar Accident: கார் ரேஸில் அஜித் உயிர் தப்பியது எப்படி? மருத்துவர் தந்த பரபரப்பு விளக்கம்