புனேவில் சாலை நடுவே BMW காரை நிறுத்திவிட்டு அதை ஓட்டி வந்த நபர், டிவைடர் அருகே சிறுநீர் கழித்த சம்பவம் பெரும் விமர்சனத்திற்கு உள்ளாகி வருகிறது. பொது இடத்தில் அனைவரும் நடந்து செல்லும் வழியில் அந்த நபர் சிறுநீர் கழித்தது வீடியோவாக வெளியாகி சமூக வலைதளங்களில் வைரலானது. இதையடுத்து, தான் செய்த செயலுக்கு அவர் மன்னிப்பு கேட்டுள்ளார்.
பொது இடத்தில் அத்துமீறிய இளைஞர்:
மகாராஷ்டிரா மாநிலம் புனேவில் BMW காரை ஓட்டி வந்த கௌரவ் அஹுஜா என்பவர், சாலை நடுவே காரை நிறுத்திவிட்டு, டிவைடர் அருகே சிறுநீர் கழித்துள்ளார். அருகில் இருந்த மக்கள் அருவருப்புடன் நகர்ந்த போதிலும், அலட்டிக்கொள்ளாத அஹுஜா தனது வேலையை முடித்துவிட்டு தனது காரில் ஏறி வேகமாக சென்றுவிட்டார்.
காருக்குள் இருந்த மற்றொரு நபர், கையில் பீர் பாட்டிலுடன் காணப்பட்டார். அவர், பாக்யேஷ் ஓஸ்வால் என அடையாளம் காணப்பட்டார். சம்பவம் நடந்தபோது, இருவரும் குடிபோதையில் இருந்ததாக போலீசார் சந்தேகித்தனர்.
இந்த சம்பவத்தின் வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலான நிலையில், நெட்டிசன்கள் மத்தியில் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. இதையடுத்து, தான் செய்த செயலுக்கு மன்னிப்பு கேட்டு அவர் வீடியோ வெளியிட்டுள்ளார்.
காவல் நிலையத்தில் சரண்:
அதில், "நான் கௌரவ் அஹுஜா. பொது இடத்தில் அப்படி நான் செய்தது மிகவும் தவறு. பொதுமக்களிடமும், காவல் துறையிடமும், ஷிண்டே சாரிடமும் நான் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன். எனக்கு ஒரு வாய்ப்பு கொடுங்கள். மன்னிக்கவும். என் குடும்ப உறுப்பினர்கள் யாரையும் தொந்தரவு செய்யாதீர்கள். அடுத்த எட்டு மணி நேரத்தில் நான் எரவாடா காவல் நிலையத்தில் சரணடைவேன்" என்றார்.
"ஷிண்டே சார்" என அஹுஜா சொல்வது துணை முதல்வர் ஏக்நாத் ஷிண்டேவா என தெளிவாகத் தெரியவில்லை. பின்னர், காவல் நிலையத்தில் சரண் அடைந்த கௌரவ் அஹுஜாவை போலீஸ் காவலில் எடுத்தது.
சம்பவம் நடந்த நேரத்தில் இருவரும் குடிபோதையில் இருந்தார்களா என்பதை உறுதிப்படுத்த இன்று காலை மருத்துவ பரிசோதனைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். இன்று மாலையில் அஹுஜாவை போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவார்கள்.