மும்பையில் ஓடும் ரயிலில் இருந்து பெண் பயணி இறங்க முயற்சித்தபோது, அவர் நிலைதடுமாறி கீழே விழுந்தார். நல்வாய்ப்பாக, அங்கிருந்த ரயில்வே போலீஸ் அதிகாரி ஒருவர், சாதூர்யமாக செயல்பட்டு பெண் பயணியை காப்பாற்றினார். கண் இமைக்கும் நேரத்தில் நடந்த இந்த சம்பவத்தின் சிசிடிவி காட்சி சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.


பதறவைக்கும் சிசிடிவி காட்சி:


மும்பையில் உள்ள போரிவலி ரயில் நிலையத்தில் ஓடும் ரயிலில் இருந்து பெண் பயணி ஒருவர் இறங்க முயற்சி செய்துள்ளார். அப்போது, சமநிலை தவறிய அவர் ரயில் சக்கரத்தில் சிக்கவிருந்தார். ஆனால், இதை பார்த்துக்கொண்டிருந்த ரயில்வே போலீஸ் அதிகாரி ஒருவர், விரைவாக செயல்பட்டு அந்த பெண்ணை இழுந்து நடைமேடையில் போட்டார்.


இதனால், அவர் உயிர் தப்பினார். இந்த வீடியோவை ரயில்வே போலீஸ் எக்ஸ் தளத்தில் பகிர்ந்துள்ளது. இதையடுத்து, பயணிகள் ஓடும் ரயிலில் ஏற முயற்சிக்க வேண்டாம் என்றும் ரயில்வே போலீசார் கேட்டுக்கொண்டனர்.


ஹீரோவாக மாறிய ரயில்வே போலீஸ்:


இந்த வீடியோ பதிவின் கீழ் கமெண்ட் அடித்த எக்ஸ் பயணி ஒருவர், "விழிப்புடனும் அர்ப்பணிப்புடனும் செயல்படும் இத்தகைய ரயில்வே பாதுகாப்புப் படை (ஆர்.பி.எஃப்) அதிகாரிகளுக்கு தகுந்த வெகுமதி அளிக்கப்பட வேண்டும். இது நிச்சயமாக அவர்களின் மன உறுதியை அதிகரிக்கும். மேலும், மற்ற அதிகாரிகளுக்கு உத்வேகமாக அமையும்" என பதிவிட்டுள்ளார்.


 






சில நாட்களுக்கு முன்பு, சார்னி சாலை ரயில் நிலையத்தில் ஓடும் ரயிலில் ஏறும்போது ஒரு பயணி நடைமேடையில் விழுந்தார். அப்போது, ரயில்வே போலீஸ் அதிகாரி விரைவாக செயல்பட்டு அவரை காப்பாற்றினார். 


ஆபத்தான ரயில் பயணங்களை தவிர்க்கும் நோக்கில் மக்கள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில்  ரயில்வே அமைச்சகம் இந்த வீடியோக்களை வெளியிட்டு வருகிறது.