மகாராஷ்டிரா மாநிலம் புனேவில் பலத்த காற்று, மோசமான வானிலை காரணமாக ஹெலிகாப்டர் ஒன்று விபத்தில் சிக்கியுள்ளது. விபத்தின்போது ஹெலிகாப்டரில் பயணம் செய்த 4 பேரும் நல்வாய்ப்பாக உயிர் தப்பினர். ஏடபிள்யூ 139 என்ற விமானம் மும்பையில் உள்ள ஜூஹூவில் இருந்து புறப்பட்டது.
விபத்தில் சிக்கிய ஹெலிகாப்டர்: ஹைதராபாத் நோக்கி சென்ற போது புனேவின் பாட் பகுதியில் விபத்துக்குள்ளானது. காயமடைந்த கேப்டன், சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இந்த ஹெலிகாப்டரை குளோபல் வெக்ட்ரா ஹெலிகார்ப் நிறுவனம் தயாரித்துள்ளது.
விபத்து குறித்து பிடிஐ செய்தி நிறுவனத்திடம் தகவல்களை பகிர்ந்து கொண்ட அதிகாரி ஒருவர், "ஹெலிகாப்டரின் கேப்டன் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்படுகிறார். மற்ற மூன்று பேரும் நிலையாக உள்ளனர். இந்த ஹெலிகாப்டர், குளோபல் வெக்ட்ரா நிறுவனத்திற்கு சொந்தமானது. விபத்துக்கான காரணம் இன்னும் கண்டறியப்படவில்லை" என்றார்.
இதேபோன்று, கடந்த மே மாதம், சிவசேனா மூத்த தலைவர் சுஷ்மா அந்தரேவை ஏற்றிச் செல்ல வந்த தனியார் ஹெலிகாப்டர் தரையிறங்க முயன்ற போது விபத்துக்குள்ளானது. விமானியும் உதவியாளரும் பத்திரமாக உயிர் தப்பினர்.
வானிலை ஆய்வு மையம் விடுத்த எச்சரிக்கை: மேற்கு மகாராஷ்டிராவில் உள்ள புனே, சதாரா மாவட்டங்களுக்கு இந்திய வானிலை ஆய்வு மையம் (IMD) ஆரஞ்சு எச்சரிக்கை விடுத்தது. கனமழை எச்சரிக்கை விடுத்திருந்தது.
மகாராஷ்டிரா கடற்கரை அருகே கிழக்கு மத்திய அரபிக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி நிலவுவதன் காரணமாக அடுத்த 48 மணி நேரத்தில் மகாராஷ்டிராவின் பெரும்பாலான பகுதிகளில் மழை பெய்யும் என இந்திய வானிலை ஆய்வு மையம் குறிப்பிட்டிருந்தது.