இந்தியாவில் ஒருநாளைய கொரோனா பாதிப்பு நாலு லட்சத்தைக் கடந்துவிட்ட நிலையில், இந்திய மாநிலங்களில் மரண ஓலங்கள் தொடர்ந்து ஒலித்தபடி இருக்கின்றன. அதிகபட்சமாக மகாராஷ்டிராவில் இதுவரை 67,985 மரணங்கள் பதிவாகியுள்ளன. இந்த நிலையில் மகாராஷ்டிராவின் புனே நகரத்தில் கொரோனா பாதிப்பினால் இறந்துகிடந்த அம்மாவின் உடலுக்கு அருகே இரண்டு நாட்கள் பட்டினியாக ஒரு குழந்தை கிடந்தது அனைவரையும் வேதனையில் ஆழ்த்தியுள்ளது.
புனேவின் பிம்ப்ரி சின்வாத் கிராமத்தை சேர்ந்த அந்த பெண் 18 மணிநேரமாக இறந்துகிடந்துள்ளார். குழந்தையும் அவருக்கு அருகிலேயே அழுதபடி கிடந்துள்ளது. கொரோனா அச்சம் காரணமாக யாரும் அந்தக் குழந்தையைத் தூக்க முன்வரவில்லை. இந்தநிலையில் வீட்டிலிருந்து துர்நாற்றம் வரவும் வீட்டு உரிமையாளர் காவல்துறைக்குத் தொடர்பு கொண்டுள்ளார். வீட்டை உடைத்து உள்ளே நுழைந்த காவல் அதிகாரிகள் உடனடியாக இறந்த பெண்ணின் அருகில் கிடந்த குழந்தையைத் தூக்கியுள்ளனர்.
இறந்த பெண்ணின் உடல் பிரேத பரிசோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளது. அவருக்குக் கொரோனா பாதிப்புதானா என்பது இன்னும் உறுதிசெய்யப்படவில்லை. இந்த நிலையில் குழந்தையின் தந்தை பிழைப்புதேடி உத்தரப்பிரதேசம் சென்றுள்ளார். கொரோனா அச்சத்தால் அந்தப் பகுதிமக்கள் யாரும் குழந்தையைப் பார்த்துக்கொள்ள முன்வராததால் காவல்துறை அதிகாரிகளான சுசீலா கப்ளே மற்றும் ரேகா வாசே இருவரும் குழந்தைக்கு உணவு கொடுத்துள்ளனர்.
இதுகுறித்து சுசீலா கூறுகையில், ‘நானும் தாய்தான். எனக்கு இரண்டு பிள்ளைகள் இருக்கிறார்கள். நான் உணவு ஊட்டியவுடன் குழந்தை மிக வேகமாக உணவு உண்டான். எப்படி இரண்டு நாட்கள் பசியால் துடித்திருப்பான் என்பதை நன்கு உணர முடிந்தது’ என்றார்.
குழந்தைக்குக் காய்ச்சல் அதிகம் இருந்ததால் மருத்துவரிடம் காண்பிக்கப்பட்டுள்ளது. அவர் அச்சப்படும்படி ஒன்றுமில்லை என்றும் நல்ல உணவுகளைக் கொடுக்கும்படியும் கூறியுள்ளார். குழந்தைக்கு கொரோனா பரிசோதனையும் மேற்கொள்ளப்பட்டது. அதிர்ஷ்டவசமாகப் பரிசோதனையின் முடிவுகள் நெகடிவ் என வந்ததையடுத்து அவனது தந்தை ஊரிலிருந்து வரும்வரை தற்காலிகமாக அரசு குழந்தைகள் காப்பகத்தில் அந்தக் குழந்தை பாதுகாப்பாக ஒப்படைக்கப்பட்டுள்ளது. கொரோனா இரண்டாம் அலைக் காலக்கட்டதில் மும்பை மெட்ரோ கொரோனா புதிய இனவகையான இந்திய இனவகையை (Indian Variant) உற்பத்தி செய்தது குறிப்பிடத்தக்கது. மகாராஷ்டிராவின் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 9 லட்சத்தை நெருங்கிக்கொண்டிருக்கிறது. இது நாட்டிலேயே அதிகபட்ச எண்ணிக்கை. கடந்த வியாழன் நிலவரப்படி அங்கே 66,159 புதிய கொரோனா பாதிப்புகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. 24 மணிநேரத்தில் மட்டும் 771 பேர் அங்கே இறந்துள்ளனர்.