நாடு முழுவதும் கடந்த மார்ச் மாத இறுதி முதல் கொரோனா பரவலின் தாக்கம் தொடர்ந்து அதிகரித்து வருகிறது, இந்தியாவில் கொரோனா தொற்றினால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை தினசரி 3 லட்சத்திற்கும் அதிகமாக இருந்து வருகிறது. தமிழகத்திலும் தினசரி பாதிப்பு 30 ஆயிரத்திற்கும் அதிகமாக உள்ளது.
தமிழகத்தைப் போலவே புதுவையிலும் கொரோனா வைரசின் பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வருகிறது. புதுவையில் நேற்று மட்டும் 1,974 நபர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. மேலும், அந்த மாநிலத்தில் 24 நபர்கள் கொரோனா பாதிப்பு காரணமாக உயிரிழந்தனர். இந்த நிலையில், கொரோனா பரவலின் தாக்கம் கடந்த ஒரு மாதத்தில் புதுவையில் கட்டுக்கடங்காத வகையில் அதிகரித்திருப்பது பொதுமக்களையும், சுகாதாரத்துறையினரையும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளது.
கடந்த ஏப்ரல் மாதம் 14-ஆம் தேதி புதுச்சேரி முழுவதும் 3 ஆயிரத்து 032 ஆக இருந்தது. இந்த நிலையில், இன்றைய நிலவரப்படி அந்த மாநிலம் முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 17 ஆயிரத்து 424 ஆக அதிகரித்துள்ளது. கொரோனா பரவல் அதிகரிப்பை போலவே, புதுச்சேரியில் கொரோனா தொற்றின் காரணமாக உயிரிழந்தோர் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது.
புதுச்சேரியில் தற்போதைய நிலவரப்படி, இதுவரை 80 ஆயிரத்து 947 நபர்கள் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். ஜிப்மர் மருத்துவமனையில் 520 நபர்களும், இந்திராகாந்தி அரசு மருத்துவ கல்லூரியில் 369 நபர்களும், கோவிட் கேர் சென்டரில் 738 நபர்களும் சிகிச்சை பெற்று வருகின்றனர். வீடுகளிலே 15 ஆயிரத்து 297 நபர்கள் தங்களை தனிமைப்படுத்திக் கொண்டுள்ளனர். புதுச்சேரியில் இதுவரை சிகிச்சை முடிந்து குணம் அடைந்து வீடு திரும்பியவர்களின் எண்ணிக்கை மட்டும் 62 ஆயிரத்து 424 நபர்களாக உள்ளது.
புதுச்சேரியில் இதுவரை கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக 1,099 நபர்கள் உயிரிழந்துள்ளனர். கடந்த ஏப்ரல் 14-ஆம் தேதி 69-ஆக இருந்த உயிரிழப்பு, மே 14-ஆம் தேதி 1099-ஆக அதிகரித்துள்ளது. ஒரே மாதத்தில் புதுவையில் கொரோனா வைரஸ் காரணமாக 401 நபர்கள் உயிரிழந்துள்ளனர். ஒரே மாதத்தில் மட்டும் 14 ஆயிரத்து 392 நபர்களுக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டிருப்பதும், 401 நபர்கள் உயிரிழந்திருப்பதும் பொதுமக்கள் மத்தியில் மிகுந்த பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
புதுச்சேரி அரசு ராஜினாமா செய்தது, தேர்தல் பரப்புரை உள்ளிட்ட பல்வேறு காரணங்களாலே அந்த மாநிலத்தில் கொரோனா பரவல் இந்தளவு அதிகரித்ததாக வல்லுநர்களும், பொதுமக்களும் வருத்தம் தெரிவிக்கின்றனர். தற்போது அந்த மாநிலத்தில் கொரோனா பரவலை கட்டுக்குள் கொண்டு வருவதற்கு, அந்த மாநில அரசு ஊரடங்கு உள்ளிட்ட பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது,