பிரிட்டிஷ் மொழி ஆங்கிலம் தெரிகிறது. இந்திய தேசிய மொழி இந்தி தெரியாதா என்று அதிகாரிகளிடம் தேசிய சிறுபான்மையின நல ஆணைய உறுப்பினர் சையத் ஷாஹிசாதி கேட்ட விவகாரம் சர்ச்சையாக மாறியுள்ளது. இதற்கு புதுச்சேரி எதிர்க்கட்சி மற்றும் சமூக அமைப்புகள் கண்டனம் தெரிவித்து, ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். புதுச்சேரியில் அதிகாரிகளிடம் இந்தி மொழி குறித்து எழுந்த சர்ச்சைக்கு, தேசிய சிறுபான்மையின நல ஆணைய உறுப்பினர் அவ்வாறு நடக்கவில்லை என்று மறுப்பு  தெரிவித்துள்ளார்.


புதுச்சேரி யூனியன் பிரதேசத்தில் சிறுபான்மையினர் மக்களுக்காக மத்திய அரசின் பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதனை ஆய்வு செய்ய தேசிய சிறுபான்மையின நல ஆணைய உறுப்பினர்  சையத் ஷாஹிசாதி இரண்டு நாள் பயணமாக புதுச்சேரி வந்திருந்தார். இதையடுத்து நேற்று முன்தினம் (நவம்பர் 11) புதுச்சேரி தலைமை செயலகத்தில் சையத் ஷாஹிசாதி தலைமையில் ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. இதில், வக்புவாரிய அமைச்சர் சாய் சரவணன், பல்வேறு துறைச் செயலர்கள், இயக்குனர்கள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.


ஆய்வுக் கூட்டம் தொடங்கியது சிறுபான்மையினர் பயன்பெறும் நலத்திட்டங்கள் குறித்து தேசிய சிறுபான்மையினர் ஆணைய உறுப்பினர் பேசத் தொடங்கினார். அவர் அங்கு முழுமையாக இந்தியில் பேசிக்கொண்டிருந்தார். அவர் பேசிய இந்தி மொழி அக்கூட்டத்தில் பங்கேற்ற அதிகாரிகள் பலருக்கும் புரியாமல் இருந்துள்ளனர். இதையடுத்து அதிகாரிகள் சிலர் புதுச்சேரியைச் சேர்ந்த அதிகாரிகளுக்கு இந்தி தெரியாது, அதனால் இந்தியில் பேசுவது அவர்களுக்குப் புரிந்து கொள்ள முடியாது. ஆகவே ஆங்கிலத்தில் பேச வேண்டுகோள் வைத்ததாக கூறப்படுகிறது. அதற்கு தேசிய மொழியான இந்தி அதிகாரிகளுக்கு தெரியாமல் இருப்பது எப்படி என்று சையத் ஷாஹிசாதி கேட்டதாக தகவல் வெளியானது.


பின்னர் தொடர்ந்து நடைபெற்ற கூட்டத்தில் சையத் ஷாஹிசாதி இந்தி மொழியில் பேசினார். அதனை மற்றொரு அதிகாரி மூலம் மற்றவர்களுக்குப் புரியும்படி மொழிபெயர்ப்பு செய்ததாகக் கூட்டத்தில் பங்கேற்ற அதிகாரிகள் மூலம் தெரிந்து கொள்ள முடிந்தது. இந்த கூட்டம் முடிந்ததும் தேசிய சிறுபான்மையினர் ஆணைய உறுப்பினர் சையத் ஷாஹிசாதி அதிகாரிகளிடம் இந்தி குறித்துப் பேசியதாக கூறப்படும் விஷயம் புதுச்சேரி முழுவதும் பரவத் தொடங்கியது.


இதற்குப் புதுச்சேரி சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவர் இரா.சிவா கடுமையான கண்டனத்தைத் தெரிவித்தார். இதுகுறித்து அவர் கூறியதாவது, இந்தியா என்பதை பன்முகத்தன்மை கொண்ட நாடு. ஆனால் இந்திய ஒன்றியத்தில் பாஜக ஆட்சிக்கு வந்தது முதல், நாட்டின் பன்முகத் தன்மையை சிதைக்கும் வகையில் நாடு முழுக்க ஒரே மதம், ஒரே மொழி, ஒரே கல்வி, ஒரே கலாச்சாரம் என்று கொண்டுவர முயற்சித்து வருகிறது. இது நாட்டை அனைத்து வகையிலும் சீரழிக்கவே செய்யும்.  ஆனால் ஒன்றிய அரசின் இந்த மனப்பான்மைக்கு ஒத்துழைப்பு தரும் அரசியல்வாதிகள், நீதிபதிகள், வழக்கறிஞர்கள் உள்ளிட்டோருக்கு ஒன்றிய ஆட்சியாளர்கள் மேலும், மேலும் பதவி உயர்வை வழங்கி வருகின்றனர். இதனால் அவர்களும் ஒன்றிய அரசின் நோக்கத்தை நிறைவேற்றும் வகையில் செயல்பட்டு வருகின்றனர்.


அந்தவகையில் புதுச்சேரியில் நேற்று நடைபெற்ற ஒன்றிய அரசின் சிறுபான்மையினருக்கான நலத்திட்டங்கள் குறித்த ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்க வந்திருந்த தேசிய சிறுபான்மையினர் ஆணைய உறுப்பினர் சையத்ஷாகிசாதி அதிகாரிகள் மத்தியில் இந்தியிலேயே பேசினார். அப்போது புதுச்சேரி அதிகாரிகள் ஒன்றுமே புரியாமல் குழம்பி இருந்தனர். இதனால் புதுச்சேரி அதிகாரிகள் யாருக்கும் இந்தி தெரியாது, எனவே ஆங்கிலத்தில் பேசினால் நீங்கள் சொல்ல வரும் கருத்தை புரிந்து கொள்வோம் என்று தெரிவித்தனர்.  இதை ஏற்று ஆங்கிலத்தில் பேசுவதற்கு மாறாக இந்தி தேசிய மொழி உங்களுக்கு தெரியாதா? இந்தியை தெரிந்து கொள்ளாமல் எப்படி அரசுப்பதவிக்கு வந்தீர்கள்? என்று கேட்டு தேசிய சிறுபான்மையினர் ஆணைய உறுப்பினர் அநாகரீகமாக நடந்து கொண்டுள்ளார். இதனை புதுச்சேரி திமுக வன்மையாக கண்டிக்கிறது  என்றார் அவர்.


புதுச்சேரியின் அலுவல் மொழியாக உள்ள தமிழை தெரிந்து கொள்ளாமல் ஒன்றிய அரசின் சிறுபான்மையினர் ஆணைய உறுப்பினர் சையத்ஷாகிசாதி எப்படி புதுச்சேரி அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்த வந்திருந்தார். இவரது இந்த அநாகரீக, தேவையற்ற செயலால் தேசிய சிறுபான்மையினர் ஆணைய கூட்டம் பாதியிலேயே ரத்து செய்யப்பட்டுள்ளது. இதனால் புதுச்சேரி சிறுபான்மையினர் பாதிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.  சிறுபான்மையினருக்கான திட்டங்களில் புதுச்சேரி புறக்கணிக்கப்பட  வேண்டும் என்பதற்காகவே தேசிய சிறுபான்மையினர் ஆணைய உறுப்பினர் இவ்வாறு நடந்து கொண்டாரோ? என்றும் சந்தேகிக்க தோன்றுகிறது.




இவ்விஷயத்தில் ஒன்றிய அரசு உடனடியாக தலையிட்டு தமிழ் பேசும் அதிகாரிகள் மத்தியில் கலந்து கொண்ட கூட்டத்தில்  இந்தி பேச வற்புறுத்திய தேசிய சிறுபான்மையினர் ஆணைய உறுப்பினர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் தேசிய ஒருங்கிணைப்பு மொழியான ஆங்கிலமும், புதுச்சேரி அலுவல் மொழியான தமிழும்  தெரிந்த ஒரு ஆணைய உறுப்பினரை அனுப்பி சிறுபான்மையினருக்கான நலத்திட்டங்கள் குறித்து ஆய்வுக்கூட்டம் நடத்தி, புதுச்சேரி சிறுபான்மையினருக்கு சிறந்த முறையில் ஒன்றிய அரசின் திட்டங்களை கிடைக்கச் செய்ய வேண்டும் என்றும் வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன்.


மேலும் இனி புதுச்சேரிக்கு வரும் ஒன்றிய அரசின் அமைச்சர்கள், ஆணையர்கள், அதிகாரிகள் யாரும் புதுச்சேரி அதிகாரிகளிடம் இந்தி பேச வலியுறுத்தவோ, மிரட்டவோ கூடாது என்பதையும் ஒன்றிய அரசு உறுதிப்படுத்த வேண்டும். அல்லது புதுச்சேரி அலுவல் மொழியான தமிழ் தெரிந்த அமைச்சர்கள், அதிகாரிகள், ஆணைய உறுப்பினர்கள் மட்டுமே புதுச்சேரிக்கு அனுப்ப வேண்டும் என்றும் வலியுறுத்தி கேட்டுக் கொள்கிறேன் என்று எதிர்கட்சித் தலைவர் சிவா தெரிவித்துள்ளார்.


இதையடுத்து அவர் பத்திரிகையாளர்களை சந்திக்க திட்டமிட்டார். இதையறிந்த புதுச்சேரி தமிழர்களம் அழகர் தலைமையில் மாணவர் கூட்டமைப்பு சுவாமிநாதன், தந்தை பெரியார் திராவிடர் கழகம் இளங்கோ, திராவிடர் விடுதலைக்கழகம் தந்தை பிரியன், தமிழ் தேசிய பேரியக்கம் வேலுச்சாமி, அம்பேத்கர் தொண்டபடை பாவாடைராயன் உள்ளிட்ட பல்வேறு அமைப்பினர ஆணைய உறுப்பினரின் செயலுக்கு கண்டித்தும், அவருக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையிலும் தலைமை செயலகம் முன்பு திரண்டனர். தகவல் கிடைத்து அங்கு வந்த போலீஸ் எஸ்பி பக்தகவச்சலம், பெரியக்கடை இன்ஸ்பெக்டர் நாகராஜ் மற்றும் போலீஸார் அவர்களிடம் அனுமதியின்றி கூடி ஆர்ப்பாட்டம், போராட்டம் இங்கு நடத்தக்கூடாது என்று கூறி அவர்களை தடுத்து அங்கிருந்து கலைந்து செல்ல அறிவுறுத்தினர்.




அங்கிருந்து சில அடி தூரம் நகர்ந்த அவர்கள் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர். அவர்களை சாலையின் குறுக்கே பேரிகேட்களை போட்டு போலீஸார் தடுத்தனர். அப்போது சிறுபான்மையனர் ஆணைய உறுப்பினருக்கு எதிராகவும், அவரது செயலை கண்டிக்காத ஆளுநர், முதல்வரை கண்டித்தும் கருப்பு கொடியை காட்டி கோஷம் எழுப்பினர். இதையடுத்து அனுமதியின்றி கூறி ஆர்ப்பாட்டம் நடத்திய அமைப்பைச் சேர்ந்த 10 பேரை போலீஸார் கைது செய்தனர். இதனைத் தொடர்ந்து தலைமை செயலகத்தில் செய்தியாளர்களை சந்தித்த தேசிய சிறுபான்மையின நல ஆணைய உறுப்பினர் சையத் ஷாஹி சாதி  சிறுபான்மையினர் மக்களின் மேம்பாட்டு நல திட்டங்கள், ஹஜ் புனிதப்பயணம் நிதி ஒதுக்கீடு குறித்து தெரிவித்தார்.


மேலும் புதுச்சேரியில் உருது, இந்தி மொழிப் பள்ளிகள் அமைக்கவும் ஆணையத்துக்கு பரிந்துரைக்கப்படவுள்ளதாக கூறினார். அப்போது அதிகாரிகள் கூட்டத்தில் இந்தி பேச நிர்பந்தித்தாக புகார் கூறப்படுவது குறித்து செய்தியாளர்கள் கேட்டதற்கு,‘‘அதுபோன்று எதுவும் நடக்கவில்லை. எனக்கு இந்தி மட்டும்தான் தெரியும், அதனால் இந்தியில் பேசுகிறேன்’’ என்றார் சையத் ஷாஹிசாதி.  அமைச்சர் சாய் ஜெ சரவணன்குமாரிடம் கேட்டபோது, பொதுவாக ஐஏஎஸ் அதிகாரிகளுக்கு இந்திமே தெரியும் என்ற அடிப்படையில் தான் கேட்டார். மற்றபடி சர்ச்சை எதுவும் எழவில்லை. அமைப்பினர் ஆர்ப்பாட்டம் நடத்தியது அவர்களை விளர்பரப்படுத்திக்கொள்ளவே.’’என்றார். அப்போது மீண்டும் செய்தியாளர்கள் பலரும் அதே கேள்வியை எழுப்பவே, பிரிட்டிஷ் மொழி ஆங்கிலம் தெரிகிறது. இந்திய தேசிய அளவிலான மொழி இந்தி தெரியதா என்று தான் கேட்டார் என்று பதிலளித்தார்.