ஐக்கிய அரபு நாடுகளைச் சேர்ந்த ஹவுபாரா பஸ்டர்ட் பறவை ஒன்று முன்னதாக மகாராஷ்டிரா மாநிலத்தின் கடலோர சிந்துதுர்க் மாவட்டத்தில் மீட்கப்பட்டுள்ளது.


ஐக்கிய அரபு நாடுகள், வளைகுடா நாடுகளில் பிரபலமான இப்பறவை, பாகிஸ்தானின் அருகி வரும் பறவை இனங்களுள் ஒன்று. இவை அரபு நாடுகளில் இருந்து பாகிஸ்தான் பக்கம் குடிபெயர்வதை வந்து செல்வதை வழக்கமாகக் கொண்டுள்ளன.


இந்தப் பறவையின் இறைச்சி பாலியல் வேட்கையைத் தூண்டும் எனும் நம்பிக்கை இப்பகுதிகளில் பெரிதும் நிலவும் நிலையில், அருகி வரும் இந்தப் பறவை இனம் தொடர்ந்து வேட்டையாடப்படுகிறது.


இந்நிலையில், முன்னதாக மகாராஷ்டிரா மாநிலம், சிந்துதுர்க் மாவட்டத்தில் இந்த ஹவுபாரா பஸ்டர்ட் பறவை ஒன்று மீட்கப்பட்டுள்ளது.


வன அலுவலர்களால் மீட்கப்பட்ட இந்தப் பறவை நல்ல ஆரோக்கியத்துடன் உள்ளதால், இவற்றின் குளிர்கால வசிப்பிடமான ராஜஸ்தான் அல்லது குஜராத்தில் உள்ள பாலைவனப் பகுதியில் விடப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.


சிந்துதுர்க், முண்டேஜ் கிராமத்தில் விவசாயி ஒருவர் முன்னதாக காலில் வளையத்துடன் பார்ப்பதற்கு தனித்துவமாக, அழகாக இருந்த இந்தப் பறவையைக் கண்டு தகவல் அளித்ததை அடுத்து, தாங்கள் அங்கு சென்று பறவையை மீட்டதாக உள்ளூர் வன அலுவலர் ராஜேந்திர குணகிகர் தெரிவித்துள்ளார். 


இதுகுறித்து முன்னதாகப் பேசிய பறவை ஆர்வலர்கள், ஐக்கிய அரபு நாடுகளில் உள்ள சில நிறுவனங்கள் இந்த பறவை இனத்தை பாதுகாக்கும் முயற்சிகளின் ஒரு பகுதியாக சிறைபிடித்து இனப்பெருக்கம் செய்து அதிக எண்ணிக்கையில் வெளியிடுவதாகத் தெரிவித்துள்ளனர்.


இந்தப் பறவைகள் பொதுவாக ஒவ்வொரு குளிர்காலத்திலும் மத்தியக் கிழக்கிலிருந்து தார் மற்றும் கட்ச் பாலைவனங்களுக்கு இடம்பெயர்கின்றன. சில சமயங்களில் ஒரு பறவை அல்லது இரண்டு பறவைகள் கூட்டத்திலிருந்து விலகி கொங்கனின் கடலோரப் பகுதிக்கு பறக்கின்றன” எனத் தெரிவித்துள்ளனர்.


சிந்துதுர்க்கில் கண்டெடுக்கப்பட்ட ஹவுபாரா பஸ்டர்ட் அதன் தோற்றம் பற்றிய தகவல்களைக் கூறி, அபுதாபியில் உள்ள தேசிய பறவை வள மையத்தைத் தொடர்பு கொண்டபோது, ​​அவர்கள் வெளியிட்ட பறவை மந்தையைச் சேர்ந்த பறவை இது என்பதை உறுதிப்படுத்தினர்," என பாம்பே நேச்சுரல் ஹிஸ்டரி சொசைட்டியின் உதவி இயக்குனர் மற்றும் ஒருங்கிணைப்பாளர் சுஜித் நாரவாடே தெரிவித்துள்ளார்.


ஹவுபாரா பஸ்டர்ட் பறவையை வேட்டையாட பாகிஸ்தான் உச்ச நீதிமன்றம் தடை விதித்துள்ள நிலையில், வளைகுடா நாடுகளைச் சேர்ந்த சில முக்கிய பிரமுகர்களுக்கு மட்டும் வேட்டையாட பாகிஸ்தானில் சிறப்பு அனுமதி வழங்கப்பட்டது. 


முன்னதாக சவுதி இளவரசர் முகமது பின் சல்மானுக்கு இந்தப் பறவைகளை வேட்டையாட பாகிஸ்தானின் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் சிறப்பு அனுமதி வழங்கியது பெரும் கண்டனங்களைப் பெற்றது குறிப்பிடத்தக்கது.