கேரள அரசுக்கும் அம்மாநில ஆளுநருக்கும் இடையேயான அதிகார போட்டி உச்சக்கட்டத்தை நிலையில், பல்கலைக்கழக துணை வேந்தர் நியமனத்தில் கேரள உயர் நீதிமன்றம் இன்று அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது. 


கேரளாவில் உள்ள பல்கலைக்கழகங்களுக்கு துணை வேந்தர்களை மாநில அரசு நியமித்திருந்தது. ஆனால், பல்கலைக்கழகங்களில் துணை வேந்தர்களை நியமிப்பது தன்னுடைய பொறுப்பு என ஆளுநர் தெரிவித்திருந்தார். இந்த சூழ்நிலையில், துணை வேந்தர்களில் இருவர் ஏற்கனவே தங்கள் பதவியில் இருந்து விலக உள்ளனர். 


அதாவது, கேரள பல்கலைக்கழக துணைவேந்தர் வி.பி. மகாதேவன் பிள்ளை அக்டோபர் 24 அன்று ஓய்வு பெறுகிறார். அதேபோல, ஏ.பி.ஜே. அப்துல் கலாம் தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் எம்.எஸ். ராஜஸ்ரீயின் நியமனம் உச்ச நீதிமன்றத்தால் ரத்து செய்யப்பட்டது. 


இதன் தொடர்ச்சியாக, மகாத்மா காந்தி பல்கலைக்கழகம், கொச்சி அறிவியல் மற்றும் தொழில்நுட்பப் பல்கலைக்கழகம், கேரள மீன்வளம் மற்றும் கடல் ஆய்வுப் பல்கலைக்கழகம், கண்ணூர் பல்கலைக்கழகம், ஸ்ரீ சங்கராச்சார்யா சமஸ்கிருதப் பல்கலைக்கழகம், காலிகட் பல்கலைக்கழகம் மற்றும் துஞ்சத் எழுத்தச்சன் மலையாளப் பல்கலைக்கழகத்தின் துணை வேந்தர்கள், பதவியில் இருந்து விலக வேண்டும் என ஆளுநர் கெடு விதித்திருந்தார்.


ஆனால், இதில் கவனிக்க வேண்டிய விஷயம் என்னவென்றால், கண்ணூர், மலையாளம் மற்றும் மீன்வளம் பல்கலைக்கழகங்களின் துணை வேந்தர்களின் நியமனங்களுக்கு ஆளுநர் ஒப்புதல் வழங்கி இருப்பதுதான்.


இச்சூழலில், ஆளுநருக்கு எதிராக கேரள உயர் நீதிமன்றத்தில் துணை வேந்தர்கள் வழக்கு தொடர்ந்திருந்தனர். அதில், நீதிமன்றம் இதுகுறித்து விசாரிக்கும் வரை உத்தரவிடக்கூடாது என ஆளுநருக்கு உயர் நீதிமன்றம் அறிவுறுத்தியிருந்தது.


இந்நிலையில், கேரள மீன்வளம் மற்றும் கடல் ஆய்வுப் பல்கலைக்கழகத்தின் துணை வேந்தராக டாக்டர் ஜான் நியமனம் செய்யப்பட்டதை கேரள உயர் நீதிமன்றம் இன்று ரத்து செய்துள்ளது. இந்த வழக்கை விசாரித்த கேரள தலைமை நீதிபதி மணிகுமார், நீதிபதி ஷாஜி பி. சாலி ஆகியோர் அடங்கிய அமர்வு, "துணை வேந்தரை நியமிப்பதற்காக அமைக்கப்பட்ட தேர்வு குழு மற்றும் அதன் பரிந்துரைகள் சட்ட விரோதமானது" என தெரிவித்துள்ளது.


ஜானின் நியமனத்தில் பல்கலைக்கழக மானிய குழு விதிமுறைகள் மீறப்பட்டதை கருத்தில் கொண்டு, பல்கலைக்கழக மானிய குழுவின் விதிமுறைகளின்படி புதிய துணைவேந்தரை நியமிப்பதற்கான புதிய செயல்முறையைத் தொடங்குமாறு வேந்தருக்கு (ஆளுநர்) கேரள உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.


முன்னதாக, தொழில்நுட்பப் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராக எம்.எஸ். ராஜஸ்ரீ நியமனத்தை ரத்து செய்து உச்ச நீதிமன்றத்தின் அக்டோபர் 21ஆம் தேதி ஒரு உத்தர பிறப்பித்திருந்தது. அதன், அடிப்படையில் துணை வேந்தர்கள் ராஜிநாமா செய்ய வேண்டும் என ஆளுநர் அலுவலகம் வலியுறுத்தி இருந்தது. 


துணைவேந்தரை தேர்வு செய்ய அமைக்கப்பட்ட குழு சரியாக அமைக்கப்படவில்லை என்று உச்சநீதிமன்றம் கூறி இருந்தது. மேலும், சட்டத்தின்படி ஒன்றுக்கும் மேற்பட்டவர்களின் பெயரை மாநில அரசு பரிந்துரைக்க வேண்டும். ஆனால், துணை வேந்தர்கள் நியமனத்தில் இது பின்பற்றப்படவில்லை என ஆளுநர் தரப்பு விளக்கம் அளித்திருந்தது.