தமிழகத்தில் கொரோனா பரவல் தொடர்ந்து அதிகரித்துவருவதைப் போலவே, அண்டை மாநிலமான புதுச்சேரியிலும் கடந்த மார்ச் முதலே கொரோனா வைரசின் தாக்கம் அதிகரித்துவருகிறது. அந்த மாநிலத்தில் தற்போது புதியதாக தலைமையேற்றுள்ள ரங்கசாமி தலைமையிலான அரசு கொரோனா தடுப்பு நடவடிக்கைகளில் கவனம் செலுத்தி வருகிறது. இந்த நிலையில், புதுச்சேரியின் இன்றைய கொரோனா பாதிப்பு குறித்து, அம்மாநில சுகாதாரத்துறை செயலாளர்  செய்திக்குறிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். அவர் வௌியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது,


“புதுச்சேரி மாநிலத்தில் இன்று 9 ஆயிரத்து 292 நபர்களுக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதில் புதுச்சேரியில்  ஆயிரத்து 550 நபர்களுக்கும், காரைக்காலில் 227 நபர்களுக்கும், ஏனாமில் 123 நபர்களுக்கும், மாஹேவில் 42 பேருக்கும் என்று மொத்தம் மாநிலம் முழுவதும் இன்று மட்டும் 1,942 நபர்களுக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதனால், புதுவையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 78 ஆயிரத்து 973 ஆக அதிகரித்துள்ளது.  




மேலும், கடந்த 24 மணிநேரத்தில் மட்டும் புதுச்சேரியில் 18 நபர்களும், காரைக்காலில் 3 நபர்களும், ஏனாமில் 2 நபர்களும், மாஹேவில் ஒருவரும் என மொத்தம் 24 நபர்கள் கொரோனா பாதிப்பு காரணமாக உயிரிழந்துள்ளனர். புதுவையில் இதுவரை கொரோனா பாதிப்பினால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 1,069 ஆக அதிகரித்துள்ளது. இறப்பு விகிதம் 1.35 சதவீதமாக அதிகரித்துள்ளது. தற்போது மருத்துவமனைகளில் 2 ஆயிரத்து 203 நபர்கள் சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும், கொரோனா பாதிக்கப்பட்ட 14 ஆயிரத்து 365 நபர்கள் வீடுகளிலே தங்களை தனிமைப்படுத்திக் கொண்டுள்ளனர். மாநிலம் முழுவதும் மொத்தமாக 16 ஆயிரத்து 568 நபர்கள் சிகிச்சையில் உள்ளனர். கடந்த 24 மணிநேரத்தில் மட்டும் 912 நபர்கள் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியுள்ளனர்.


இதனால், புதுவையில் கொரோனா பாதிப்பில் இருந்து மீண்டு வீடு திரும்பியோர் எண்ணிக்கை 61 ஆயிரத்து 336 ஆக அதிகரித்துள்ளது" எனக் கூறப்பட்டுள்ளது. கொரோனா பரவலை கட்டுப்படுத்த தமிழகத்தைப் போலவே, புதுச்சேரியிலும் முழு ஊரடங்கு அமலில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.