கொரோனா பெருந்தொற்று நாட்டை வைரஸ் காடாக மாற்றிக் கொண்டிருக்கிறது. இதில் எதிர்க்கட்சிகள் அரசியல் விமர்சகர்கள் உட்பட அனைவருமே பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான பாரதிய ஜனதா கட்சி அரசின் செயல்பாடுகளைத் தீவிரமாகச் சாடி வருகின்றனர்.நிரம்பி வழியும் சுடுகாடுகள், நிரப்ப இடம் பற்றாமல் திணறும் மருத்துவமனைகள் என இந்தியாவுக்குச் சோதனைகாலமாக இது இருந்து வரும் நிலையில் பலரும் ஒட்டுமொத்தமாக புகார் சொல்லிக் கைகாட்டுவது மத்திய அரசைதான்.


இந்தப் புகார் கூறுபவர்கள் வரிசையில் ஒருபடி மேலே போய் உள்துறை அமைச்சர் அமித்ஷாவைக் காணவில்லை எனப் புகார் அளித்திருக்கிறார் இந்திய தேசிய மாணவர் யூனியனின் தேசியப் பொதுச் செயலாளர் நாகேஷ் கரியப்பா. இதுகுறித்து அவர் டெல்லி போலீசில் அளித்த புகாரை தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்திருந்தார்.அதில் காணாமல் போனவர் பெயர் அமித் அனில்சந்திர ஷா என்றும் இறுதியாக மேற்கு வங்கச் சட்டமன்றத் தேர்தல் பரப்புரையின்போது தென்பட்டார் என்றும் பதிவிடப்பட்டிருந்தது.



நாகேஷின் இந்தப் புகாரை அடுத்து டெல்லியில் உள்ள தேசிய மாணவர் யூனியன் அலுவலகத்துக்கு விரைந்த போலீசார் நாகேஷை குறுக்கு விசாரணை செய்தனர். நாகேஷைத் தொடர்ந்து பல தனது ட்விட்டர் பக்கத்தில் காணாமல் போன புகார்களைப் பதிவு செய்தனர். ’Missing report’ என்னும் ஹேஷ்டேக் ட்விட்டரில் ட்ரெண்டாகி வருகிறது.






அவுட்லுக் இந்தியா நாளிதழ் இந்திய அரசாங்கமே கடந்த ஏழு வருடங்களாகக் காணவில்லை எனத் தன் இதழின் முன்பக்கத்தில் விளம்பரம் செய்திருக்கிறது. கிடைக்கப்பெற்றால்  உடனடியாக இந்திய மக்களுக்குத் தெரிவிக்கும்படி அதில் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. 


 






காங்கிரஸ் முன்னாள் செயல் தலைவர் ராகுல்காந்தி தனது ட்விட்டர் பக்கத்தில், ’தடுப்பூசி, ஆக்சிஜன் மற்றும் மருந்துகளுடன் தற்போது பிரதமரும் காணாமல் போய்விட்டார். தற்போது எஞ்சியிருப்பதெல்லாம் சென்ட்ரல் விஸ்டா திட்டமும், மருந்துகளின் மீதான ஜி.எஸ்.டி. வரியும்  அங்கும் இங்குமாகத் தென்படும் பிரமரின் புகைப்படங்கள் மட்டும்தான்’ என அரசை எள்ளி நகையாடும் வகையில் பதிவு செய்துள்ளார்.  இந்திய விமானப்படை விங் கமாண்டர் அனுமா ஆச்சார்யா தனது ட்விட்டர் பக்கத்தில் 'உள்துறை அமைச்சர் தனது வீட்டுக்குள்ளேயேதான் இருக்கிறார். இது தன்னிறைவான இந்தியாதான்’ என நகைச்சுவை கலந்து பதிவிட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.