பிரதமர் நரேந்திர மோடி தங்களுக்கு உதவவில்லை என்று கொரோனாவால் உயிரிழந்த ஆர்எஸ்எஸ் ஆதரவாளரின் உறவினர்கள் கண்ணீர் மல்க கூறினார்கள்.


உத்தரப்பிரதேச மாநிலம் ஆக்ராவைச் சேர்ந்தவர் அமித் ஜெய்ஸ்வால். தீவிர ஆர்எஸ்எஸ் ஆதரவாளரான இவர், பிரதமர் நரேந்திர மோடியின் தீவிர பக்தரும் கூட, பிரதமரும் ஜெய்ஸ்வாலை டுவிட்டரில் பின்தொடர்ந்தவர்.  வாட்ஸ் அப் டிபியாக பிரதமர் மோடியின் புகைப்படத்தை வைத்து, டுவிட்டரில் பிரதமர் தன்னை பின் தொடர்கிறார் என்றும் தனது டுவிட்டர் பக்கத்தில் ஜெய்ஸ்வால் பெருமையுடன் வெளிப்படுத்தினார்.




ஜெய்ஸ்வால் விளம்பரங்களுக்காக பலகைகள் மற்றும் பதாகைகளை தயாரிக்கும் தொழில் செய்து வந்தார். அத்துடன், தீவிர ஆர்.எஸ்.எஸ் பணியாளராகவும் இருந்தார். 


2020ஆம் ஆண்டு டிசம்பரில், கட்டுமானத்தில் உள்ள ராம் மந்திர் தளத்தில் பிரார்த்தனை செய்வதற்காக அயோத்திக்கு ஒரு பயணம் மேற்கொண்டார. மேலும் ‘ராம் ஜன்மபூமி’ என்று கூறும் எல்.ஈ.டி பலகைகளை நகரமெங்கும் வைத்தார்.


இந்நிலையில், 42 வயதுடைய ஜெய்ஸ்வால் கடந்த ஏப்ரல் 29ஆம் தேதி கொரோனாவால் உயிரிழந்தார். இதையடுத்து, ஜெய்ஸ்வாலின் காரின் பின்புறத்தில் இருந்த பிரதமர் மோடியின் புகைப்படத்தை, ஜெய்ஸ்வாலின் சகோதரி சோனு அலாக் கிழித்து எறிந்தார். இதற்கு காரணம் தனது சகோதரனுக்கு பிரதமர் மோடி உதவி செய்யாததே என்று அவர் கூறினார்.


அமித் மற்றும் அவரது தாயார் ராஜ் கமல் ஜெய்ஸ்வால் ஆகியோருக்கு கடந்த ஏப்ரல் 19ஆம் தேதி கொரோனா உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து, அவர்களை ஆக்ராவில் உள்ள பல மருத்துவமனைகளில் அனுமதிக்க சகோதரி சோனு அலாக் அவரது கணவரும் முயன்றனர். ஆனால் எங்கும் படுக்கை இல்லாததால், மதுராவில் உள்ள ஒரு மருத்துவமனையில் அனுமதித்தனர்.


ஒரு வாரம் கழித்து, மதுரா மருத்துவமனை மருத்துவர்கள் குடும்பத்தினரிடம் தாய்-மகன் இருவருக்கும் அவசரமாக ரெமெடிவிர் ஊசி போடுமாறு கேட்டுக்கொண்டது.  இதையடுத்து, ஏப்ரல் 25ஆம் தேதி சோனு, ஜெய்ஸ்வாலின் டுவிட்டர் பக்கத்தில், பிரதமர் மோடி, உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் ஆகியோர் தங்களுக்கு உதவி செய்யக்கோரி கோரிக்கை விடுத்தார்.




ஆனால் எங்களுக்கு எந்த உதவியும் கிடைக்கவில்லை என்று கூறிய சோனு, மருந்தை தங்களால் ஏற்பாடு செய்ய முடிந்தது, ஆனால், தனது தாயையும், சகோதரனையும் காப்பாற்ற முடியவில்லை என்று கண்ணீர் மல்க கூறினார்.


தனது சகோதரன் உயிரிழந்த அன்றே சோனுவும் அவரது கணவர் ராஜேந்திராவும் ஜெய்ஸ்வாலின் காரின் பின்புறத்தில் இருந்த பிரதமர் மோடியின் போஸ்டரை கிழித்து எறிந்தனர். “பிரதமர் மோடியின் அலட்சியத்தை ஒருபோதும் மன்னிக்க மாட்டேன்" என்று ஆத்திரத்துடன் அந்தத் தம்பதியினர் கூறினர்.


“நாட்டில் ஒரு நெருக்கடி இருப்பதாக நான் புரிந்துகொள்கிறேன், ஆனால் நீங்கள் நாட்டின் மிக முக்கியமான நபர். பிரதமர் மோடி, நான் உங்களிடம் கெஞ்சுகிறேன். தயவுசெய்து ஏதாவது செய்யுங்கள்” என்று இறுதியாக சோனு கேட்டுக்கொண்டார்.