ஆண்டு தோறும் மார்ச் மாதம், புதுச்சேரி சட்டப்பேரவையில் பட்ஜெட் தாக்கல் செய்யப்படுவது வழக்கம். ஆனால், கடந்த 2011ஆம் ஆண்டு முதல் இடைக்கால பட்ஜெட் மட்டுமே தாக்கல் செய்யப்பட்டு வந்தது. அடுத்த சில மாதங்களில் முழுமையான பட்ஜெட் தாக்கல் செய்யப்படும்.


இந்நிலையில், 12 ஆண்டு காலத்தில் முதல்முறையாக முழுமையான பட்ஜெட் தாக்கல் செய்ய புதுச்சேரி முதலமைச்சர் ரங்கசாமி முடிவு செய்தார். இதற்கு மத்திய அரசும் ஒப்புதல் அளித்தது.


இதையடுத்து, புதுச்சேரி சட்டபேரவையின் பட்ஜெட் கூட்டத்தொடர் கடந்த 9ஆம் தேதி, துணைநிலை ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் உரையுடன் தொடங்கியது. இதை தொடர்ந்து, 10ஆம் தேதி, ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது சட்டப்பேரவை உறுப்பினர்கள் பேசினர்.


இதையடுத்து, இன்று கூடிய சட்டப்பேரவையில், நிதித்துறையை கவனித்து வரும் முதலமைச்சர் ரங்கசாமி முழு பட்ஜெட்டை தாக்கல் செய்தார். அதில், பல முக்கிய அறிவிப்புகள் இடம்பெற்றுள்ளன.


ஆதரவற்ற மாற்றுத்திறனாளி குழந்தைகளுக்கான திட்டம்:



  • குழந்தைகள் பாதுகாப்பு இல்லத்தில் இருந்து வெளியேறும் குழந்தைகளைக் கண்டறிந்து அவர்களது கல்வி, வாழ்வாதாரம் மற்றும் வேலைவாய்ப்பை உருவாக்க `பின் பராமரிப்புத்திட்டத்தின் கீழ்’ அனைத்து முயற்சிகளும் மேற்கொள்ளப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

  • புதுச்சேரி, மாஹே மற்றும் ஏனாம் பகுதிகளில் மாற்றுத்திறன் குழந்தைகளுக்கான விடுதி மற்றும் தற்காலிக உறைவிட இல்லம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

  • மாஹே மற்றும் ஏனாம் பகுதிகளில் குழந்தைகள் நலக் குழுமம் மற்றும் இளஞ்சிறார் நீதிக் குழுமம் மீண்டும் அமைக்க ஏற்பாடு செய்யப்படும்.

  • புதுச்சேரியில் சிறார்களுக்கான காப்பகம் மற்றும் மாஹே பகுதியில் குழந்தை பராமரிப்பு மையங்கள் செயல்படுத்த உத்தேசிக்கப்பட்டுள்ளது.

  • குழந்தைகளின் உரிமைகள் மற்றும் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் கிராமப்புற அளவில் நடத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


சிலிண்டருக்கு மானியம்:


அனைத்து குடும்ப உணவுப் பங்கீட்டு அட்டைதாரர்களும் பயன்பெறும் வகையில் சமையல் எரிவாயு சிலிண்டருக்கு மாதம் ஒன்றுக்கு ரூ.300 வீதம் வருடத்திற்கு மொத்தம் 12 சிலிண்டருக்கு மானியம் வழங்கப்படும். இதன்மூலம் அரசிற்கு ஆண்டு ஒன்றுக்கு கூடுதலாக ரூ.126 கோடி செலவு ஆகும்.


பெண் குழந்தைகளுக்கான திட்டம்:


பெண் குழந்தைகளின் எதிர்கால நலனைக் கருத்தில் கொண்டு இந்த மாநிலம் சார்ந்தவர்களுக்கு பிறக்கும் பெண் குழந்தைகளுக்கு முதலமைச்சரின் பெண் குழந்தை பாதுகாப்பு திட்டத்தின் கீழ், குழந்தை பிறந்தவுடன் தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளில் 18 வருடத்திற்கு ரூ.50,000 நிரந்தர வைப்பு நிதியாக செலுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.


இதையும் படிக்க: Parliament Rahul Gandhi : ”வெட்கக்கேடானது” ராகுல் காந்தியை தாக்கி பேசிய மத்திய அமைச்சர்கள்...பதிலடி தந்த எதிர்க்கட்சிகள்..முதல் நாளே முடங்கிய நாடாளுமன்றம்